பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஓர் ஓவியத்தை பார்த்த நினைவு. ஒரு வயதான பெரியவரின் முகம் கோட்டோவியமாக தீட்டப்பட்டிருக்கும். முகமெங்கும் சுருக்கங்கள் இருக்கும். அந்த கோட்டோவியத்தின் சுவாரசியத்தன்மையே அதனுள் ஒளிந்திருக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட உருவங்களை கண்டுபிடித்து விளையாடுவதே. ஓவியத்தின் காதை நன்றாக உற்றுக் கவனித்தால் காதிற்கு பின் ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கும் ஓவியம் புலனாகும். கண்களை உற்று கவனித்தால் இரண்டு படகுகளின் ஓவியங்கள் புலனாகும். ஓவியத்தின் வசீகரத்தன்மை என்பது அது வெளிப்படுத்தும் உருவத்திலும், கோடுகளிலும், வர்ணங்களிலும் மட்டும் இல்லை. அது வெளிப்படுத்தாத கோடுகளிலும், வர்ணங்களிலும் கூட அதன் நீட்சி இருக்கலாம் என்று அந்த விளையாட்டு சொல்லாமல் சொல்லும்.
My Name is Red நாவல் படிக்கும்போது சின்ன வயதில் நாங்கள் அந்த புதிரான ஓவியத்தின் ஊடே மீண்டும்,மீண்டும் ஒடி விளையாடி களைத்து குதூகல தருணங்கள் நினைவுக்கு வந்தன.
ஒரு அழகான காதல் அதனூடே ஒரு கொலை இரண்டு வர்ணங்கள் குழைத்து பாவு நூலினிடையே ஊடு நூலை விட்டு தறியில் அடிக்கும் தேர்ந்த நெசவாளியின் லாவகம் போல ஓரான் பாமுக் இந்த நாவலை படைத்துள்ளார். கிழக்கின் மதக்கட்டுப்பாடுகளையும்,மேற்கின் கலாச்சார படையெடுப்பையும்
இந்த இரண்டு புள்ளிகளும் சேரும் இடத்தில் கலை அதன் இருப்பு குறிப்பாக கலைஞர்களின் சுதந்திரம் அவர்களின் வீழ்ச்சியை நாவல் விவாதிக்கிறது.
நாவலின் பின்புலம்:-
16ஆம் நூற்றாண்டு. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் கதை செல்கிறது. ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா முஸ்லீம் ஆண்டின் ஆயிரமாவது தொடக்கத்தைக் குறிக்கும் விழா மலரை உருவாக்க விரும்புகிறார். அதற்காக தேசத்தின் தலைசிறந்த ஓவியர்களை ஒருங்கிணைத்து விழா மலரில் ஓவியங்கள் வரைய சொல்கிறார். ஓட்டாமன் பேரரசின் சிறப்புகளையும், தனது பெருமைகளையும் உலகம் அறியும் வகையில் அந்த ஓவியங்கள் இருக்கவேண்டுமென்று சொல்கிறார்.
நாவலின் கதைச்சுருக்கம் :-
சிறு வயதில் ஊரைவிட்டு ஓடிய கருப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். அவனது மாமா எனிஷ்டே எஃபண்டியின் ஓவியக் கூடத்தில் இஸ்தான்புல் சுல்தானின் ஆணைப்படி ஆண்டு மலர் தயாரிக்கப்படுகிறது. கருப்பும் ஒரு ஓவியன்தான். கருப்பு இஸ்தான்புல்லுக்கு திரும்பும் இந்த பன்னிரண்டு வருடத்தில் ஊருக்குள் எல்லாம் மாறி இருக்கிறது. சிறுவயதில் அவன் நேசித்த மாமாவின் மகள் ஷெகூரேவுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றன. ஷெகூரே மணந்துக்கொண்ட ஸ்பாஹி குதிரை வீரன் போருக்கு சென்று திரும்பவேயில்லை.அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையாவென்றே தெரியாத நிலையில் ஷெகூரே ஆண்டுக்கணக்காய் மகன்களோடு காத்திருக்கிறாள். ஷெகூரே கணவனின் தம்பி ஹாசன் ஷெகூரே மேல் காமுற்று அவளை மணம் செய்துக்கொள்ள துடிக்கிறான். இந்நிலையில் ஊருக்கு திரும்பிய கருப்பு மேல் ஷெகூரேவுக்கு காதல் மலர்கிறது. ஆனாலும் ஷெகூரேவால் உறுதியாக தனது காதலை கருப்பிடம் வெளிப்படுத்த இயலவில்லை. கணவன் இறந்துவிட்டதாக யாராவது நீதிபதிகள் முன்பு சாட்சி சொன்னால் அவள் விதவை என்று சட்டம் சொல்லும். பிறகு கருப்பை தாராளமாக மணந்துக்கொள்ளலாம். ஹாசனின் அட்டகாசமும் குறையும். இருந்தாலும் ஷெகூரேவுக்கு அவளது இரண்டு மகன்களின் எதிர்காலம் கண்முன் வந்து காதலை பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரசெய்யாமல் தடுக்கிறது.
இந்நிலையில் இஸ்தான்புல் சுல்தான் ஆணைப்படி உருவாகும் ஆண்டுமலரில் இறுதி ஒவியம் தீட்டுபவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். முதலில் அழகன் எஃபண்டி. அடுத்து ஷெகூரேவின் அப்பா எனிஷ்டே எஃபண்டி கொல்லப்படுகிறார். இவர்களை யார் கொல்கிறார்கள்? அவர்கள் இஸ்தான்புல் சுல்தானுக்காக அவர்கள் தீட்டும் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் பிரச்சினை?
நாவலின் நடை :-
காரா (கருப்பு) , எனிஷ்டே எஃபண்டி (கறுப்பின் மாமா), ஷெகூரே (எனிஷ்டே எஃபண்டியின் மகள்) , ஷெவ்கெத் (ஷெகூரேவின் மூத்த மகன்) , ஒரான் (ஷெகூரேவின் இளைய மகன்) , ஹாசன் (ஷெகூரேவின் கொழுந்தன்) , ஹாரியே(எனிஷ்டே எஃபண்டியின் அடிமைப்பெண்) , எஸ்தர் ,நஸ்ரத் ஹோஜா மற்றும் ஆலீவ், பட்டர்ஃபிளை, நாரை ,மாஸ்டர் ஒஸ்மான் அவ்வளவு ஏன் சிவப்பு வர்ணம், நாய் , குதிரை, ஓவியத்தில் இருக்கும் இரண்டு துறவிகள் என்று என பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து நாவலை அவர்கள் பார்வையில் நகர்த்தி செல்லும் பின்நவீன உத்தியில் நாவலின் நடை இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஓர் ஒவியம் போல காட்சியளிக்கின்றன.
நாவலின் முதல் அத்தியாயத்தில் ஒரு கொலை நடக்கிறது. ஓவியன் அழகன் எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஒரு பாழடைந்த கிணற்றில் தலை நசுங்கி கிடக்கிறான். அவனது பிரேதம் முதல் அத்தியாயத்தில் கதை சொல்கிறது. அவனை யார் கொலை செய்திருப்பார்கள்; என்ன காரணம்? அந்த கொலைக்காரன் ஆணா? பெண்ணா? ஓர் ஓவியத்தை முதல்முறை பார்க்கும்போது அந்த ஓவியத்தின் முழு வெளித்தோற்றம் எப்படி பிரமிப்பு தருமோ அப்படி முதல் அத்தியாயம் செல்கிறது. ஓவியத்தின் கோடுகள், வர்ணங்கள் முதல் பார்வைக்கு தட்டுப்படாதது போலவே கொலைக்காரன் யாரென்று தெரியாமல் முதல் அத்தியாயம் கடந்து செல்கிறோம்.
நாவலின் நான்காவது அத்தியாயத்தில் கொலைகாரன் பார்வையில் கதை நகர்கிறது. கொலைக்காரன் பெயர் என்ன அவன் நிறம் என்ன? குள்ளமா? உயரமா எதுவுமே தெரிவிக்கப்படாமல் கொலைக்காரன் தரப்பு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. கொலைகாரன் என்ற ஒவியத்தின் மீதான ஈர்ப்பும்,ஆவலும் இன்னும் அதிகமாகின்றது. நாவலின் 58 ஆவது இந்த ஓவியம் லேசாக புரியும். 59 ஆவது அத்தியாயத்தில் இந்த ஓவியம் முழுமையாக புரியும். ஓவியத்தை நீங்கள் உணரத்தொடங்கும் அந்த தருணத்தில் அந்த ஓவியத்தின் இருப்பு சிதைக்கப்படுகிறது. ஹாசனால் அவன் கொல்லப்படுகிறான்.
ஒரான் பாமுக்கின் படைப்புலகம்:-
ஒரான் பாமுக் காட்டும் நுண்ணோவிய உலகம் அதி அற்புதமானது. மனிதர்கள் பல வண்ணக் கலவைகளால் ஆனவர்கள். ஓவியர்கள் எப்போதும் வரைந்துக்கொண்டே இருக்கிறார்கள். வரைந்து,வரைந்தே கண்கள் குருடாகிப்போவதை பாக்கியமாக கருதுகிறார்கள். குருட்டுத்தன்மை என்பது இன்ஷா அல்லாஹ்வால் வழங்கப்படும் கொடை என்று கருதுகிறார்கள். ஒரான் பாமுக் உலகத்தில் நடமாடும் ஓவியர்கள் கண்களால் ஒரு குதிரையை வரைவதேயில்லை. ஆண்டாடுக் காலமாய் அவர்கள் நினைவில் தங்கிவிட்ட மனப்படிமத்திலிருந்தே குதிரைகளை வரைகிறார்கள். ஒரு குதிரையை நேரில் பார்த்து வரைபவன் ஒருநாளும் சிறந்த ஓவியத்தை தீட்டமுடியாது. அவர்கள் குதிரையின் முகத்தையோ, உடலையோ முதலில் வரைவார்கள். குதிரையை மனதில் இருந்தே வரைபவர்கள் குதிரையின் குளம்புகளை முதலில் வரைய ஆரம்பிப்பார்கள். மனக்கண்ணால் பார்க்கும் ஓவியக்கோணமே அல்லாஹ் அவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும் பார்வைக்கோணம். அதனாலேயே கண்களை குடுடாக்கிக் கொள்கிறார்கள்.
பெரும்பாலான ஓவியர்கள் தங்கள் படைப்பை பற்றி பெருமிதமும், அதீத முகஸ்துதி வேண்டி விழைபவர்களாகவும் வருகிறார்கள். கலையையும்,மரபுகளையும் கட்டிக் காக்க கொலை கூட செய்கிறார்கள். பிற்பாடு அவர்களே பணம்,புகழுக்காக கொள்கைகளை துறந்து கரைந்து காணாமல் போகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது.
My Name is Red என்ற இந்நாவலை தமிழிற்கு மிக அருமையாக மொழிப்பெயர்ப்பு செய்திருக்கும் ஜி.குப்புசாமியின் உழைப்பு போற்றத்தக்கது. இலக்கிய மொழிப்பெயர்ப்பில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் ஜி.குப்புசாமியின் இடம் குறிப்பிடத்தக்கது. தமிழில் ஓவிய உலகத்தை பற்றிய பரந்துப்பட்ட நாவல் இதுவரை வெளிவரவில்லை (அகிலனின் ‘சித்திரப்பாவை’ நூலை சொன்னால் கோபம் வரும்) அந்த வகையில் இந்நாவல் முன்னோடி எனலாம் (மொழிப்பெயர்ப்பாக இருந்தாலும்)
என் பெயர் சிவப்பு
(தமிழில் ஜி.குப்புசாமி)
காலச்சுவடு பதிப்பகம்
விலை 350
பக்கங்கள் 663