Sunday, August 1, 2010

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோதுசிறுகதைகளின் பல்வேறு பரிமாணங்களையும், சாத்தியக்கூறுகளையும் தமது எழுத்தில் கொண்டு வரும் ஹாருகி முரகாமியின் படைப்புலகம் வித்தியாசமானது. தமிழில் ஹாருகி முராமியின் சிறுகதைகள் அடங்கிய முதல் மொழிபெயர்ப்பு நூல் அண்மையில் வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும், பரவலான கவனத்தையும் பெற்றுள்ளது. தொகுப்பிலுள்ள கதைகளை ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன் அருமையான மொழிபெயர்த்துள்ளார்கள். இத்தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


சாலையில் இறங்கி நடந்து செல்கிறோம். நூறு சதவீத பொருத்தமான யுவதியை பார்க்கின்றோம். அப்படியொரு யுவதியை சந்தித்ததும் எத்தனை பேர் உடனே அவளிடம் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிக்கின்றோம்? ஒரு சதவீதம் கூட பொருத்தமானவர்களுடன் வாழ்க்கை முடிச்சு போட்டு விடுகிறது. வாழ்க்கை விசித்திரமானது. அது விளையாடும் இன்னொரு விளையாட்டு பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதே யுவதியை சந்திக்கின்றோம். அதே எண்ணம் மனதில் ஓடலாம். ஆனால் அதே தயக்கம் இன்னமும் மனதில் இருக்கிறது. ஏன்? விதியின் விளையாட்டா? வாழ்க்கை போடுகின்ற எண்ணற்ற புதிர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அழகிய இந்த கதையின் தலைப்பையே தொகுப்பிற்கும் வைத்துள்ளார்கள்.


தொகுப்பில் எனக்கு பிடித்த கதை இது. கதையின் பெயர் "ஷினாகவா குரங்கு". ஒரு பெண்ணுக்கு அவளது பெயர் மறந்து விடுகிறது. விநோதமான இந்த பிரச்சினையால் அவள் ஆலோசனை மையத்தை தேடிச் செல்கிறாள். பிறரை சக மனிதர்களை நேசிப்பதையும் அதைவிட சக மனிதர்களால் நேசிக்க படுவதையும் இழந்தால் வரும் உளவியல் பிரச்சினை இந்த கதையின் ஆதார புள்ளி.


"டோக்கியோவை காப்பாற்றிய தவளை" கதை ஹாஸ்யத்துடன் ஆரம்பிக்கின்றது. மேஜிக்கல் ரியலிச பாணி கதை இது. கதை மெதுவாக மெதுவாக உள்ளே இழுத்து சென்று கனவுலகின் அற்புதங்களையும், நனவுலகின் அபத்தங்களையும் மாற்றி, மாற்றி கலைத்துப்போட்டு வாழக்கையின் புதிர் வட்டங்களில் தூக்கி எறிந்து அலைக்கழிக்க வைக்கின்றது. ஹாருகி முரகாமி முன் வைக்கும் இன்னொரு பிரச்சினை, நவீன வாழ்க்கையில் மனித மனம் பாலியல் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை. இதை அருமையாக பதிவு செய்திருக்கும் சிறுகதை "என் தலைமுறைக்காக ஒரு நாட்டார் இலக்கியம்: பிற்கால முதலாளித் தத்துவத்தின் ஒரு முன் சரித்திரம்". "குடும்ப விவகாரம்" என்ற மற்றொரு கதையில் அண்ணனும்,தங்கையும் நகரத்தில் ஒரு வாடகைவீடு எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள். பணிக்குச் செல்லும் அவர்கள் வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் உறவே வித்தியாசமானது. அண்ணன் அவள் தங்கையிடம் "கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக்கொண்டு வெளியே செல்லவேண்டாம். உன்னை வேசை என்று நினைப்பார்கள்." என்று சொல்கிறான். அவளை பற்றிய இவ்வாறான மதிப்பீடுகள் கொண்ட அவன் தங்கைக்க்காக அவளது பாய்பிரெண்ட் குடும்பத்தாரிடம் பேசிவிட்டு வரும்போது முதன் முதலில் தனது இருப்பை பற்றி யோசிக்கின்றான். நவீன வாழக்கையின் சிக்கலே இதுதான். பெருநகரம் இளைஞர்களுக்கு கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை தந்துள்ளது. ஆனாலும் அவர்கள் மனதின் அடி ஆழத்தில் ஏதோ ஓர் குற்றவுணர்வு சமூகம் காலம்காலமாய் வலியுறுத்தி வந்துள்ள பழைய மதீப்பீடுகளின் சுமை முள்ளாய் குத்திக்கொண்டே இருக்கிறது. பாலியல், பொருளாதார சுதந்திரம் பெற்ற நகரத்தில் வாழ்ந்தாலும் முந்தைய தலைமுறையின் பாலியல் மதிப்பீட்டுகளை மீறமுடியாமல், மீறினாலும் சகஜமாக இருக்கமுடியாததொரு இருப்பை உணர்கிறார்கள். இதுவும் தொகுப்பிலிருக்கும் முக்கியமான சிறுகதை.


ஹாருகி முரகாமியின் கதைகளில் யாராவது தொலைந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு பெண் பெயரை தொலைக்கின்றாள். "தேடுதல்" கதையில் ஒரு மனிதன் அவனது அடுக்குமாடி குடியிருப்பின் 24 ஆம் தளத்திற்கும் 26 ஆம் தளத்திற்கும் இடையே தொலைந்துபோகிறான். மனிதன் நினைவுகள் தொலைந்துபோகின்றன. கனவுலகத்திலிருந்து மீண்டு வரும்போது கனவுகள் தொலைந்துபோகின்றன. இருப்புக்கும், இழப்புக்கும் அல்லது கனவுக்கும்,நனவுக்கும் இடையே மனிதர்கள அலைந்துக்கொண்டே இருக்கின்றார்கள். அதுதானே உண்மையும் கூட. மனித வாழ்க்கை என்பதே கனவுக்கும்,நனவுக்கும் இடையே பெண்டுலம் போல ஊசலாடுவதுதானே. இதை ஒரு பொது விதியாக ஹாருகிமுரகாமி கதைகளில் காண முடிகிறது.தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் ஒவ்வொரு நடையில் எழுதப்பட்ட சிறுகதைகள். இத்தொகுப்பில் ரியலிச கதையும் இருக்கிறது. மேஜிக்கல் ரியலிச கதையும் இருக்கிறது. ரியலிசத்திற்கும் மேஜிக்கல் ரியலிசத்திற்கும் தாவி,தாவி செல்லும் கதையும் உள்ளது. வண்ண வண்ண பூக்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் அழகிய பூங்கொத்து போல இந்த தொகுப்பு இருக்கிறது.


நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது
(நவீன ஜப்பானியச் சிறுகதைகள்)
மூலம்-ஹாருகி முரகாமி.
மொழிபெயர்ப்பு: ஜி.குப்புசாமி, ராஜகோபால், செழியன்.
வம்சி வெளியீடு
திருவண்ணாமலை. விலை ரூ80

5 comments:

 1. பகிர்விற்கு நன்றி நண்பரே... உடனே வாசிக்கத் தூண்டும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் எழுத்துக்கள்..

  ReplyDelete
 2. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு நண்பர்களே இது........

  ReplyDelete
 3. புத்தகமா வாங்கி படிக்கிறீங்க. நாங்க எங்க போறது? சேர்த்து வையுங்க. பார்க்கும் போது லவட்ட. :-)

  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 4. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  ReplyDelete
 5. நன்றி சென்ஷி
  நன்றி விஜய் மகேந்திரன்
  நன்றி பா.ரா

  ReplyDelete