Sunday, September 12, 2010

கடற்கரையில் காந்தி

நேற்று கடற்கரையில்
காந்தியை பார்த்தேன்

என்னைப் பார்த்து சிரித்தார்
முன்னொரு தினம் சந்தித்தது
அடையாளம் தெரிந்தது
காற்று வாங்கியபடியே
காலாற நடந்தோம்

கடற்கரையில்
கார் பார்க்கிங் வசதி
முறையாக இல்லையென்று
குறைப்பட்டார்.

அவருக்கு மூச்சு வாங்கியது
கையிலிருந்த
மினரல் வாட்டர் பாட்டிலை குடித்தார்

கிராமங்களிலும்
கார்பார்க்கிங் வசதி
கிடைக்க வேண்டுமென்றார்

எனக்கு குழம்பியது

விளைநிலங்கள் தோறும்
வணிக மையங்கள்
வரவேண்டுமென்றார்

தரிசுநிலங்களில்
தனியார் நிறுவனங்களை
அமைப்போமென்றார்

மக்கள் மகிழ்ச்சியாக வாழ
மானாவாரி நிலங்களில்
மல்டிபிளக்ஸ் திரையரங்கள்
அவசியம் கட்டவேண்டும்
பிடிவாதமாக சொன்னார்

எல்லா கிராமங்களிலும்
முறையான சாலைகள்
சுங்கசாவடிகள்
மின்சாரம் குடிநீர்
மளிகை கடைகள்
உடற்பயிற்சி கூடங்கள்
பொறியியல் கல்லூரிகள்
தனியார் வங்கிகள்
இன்னும்...இன்னும்
சொல்லிக்கொண்டே போனார்

கிராம பொருளாதார திட்டத்திற்கு
வெளிநாட்டு வங்கியில்
கடன் கிடைக்குமென்றார்

இறக்குமதி ஆடைகளை
அணிய சொன்னார்
கிராம மக்களுக்கு
தன்னம்பிக்கை தருமென்றார்

ஏதோ கேட்க
வாயெடுத்தவனை பார்த்து
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது
என்றார்

4 comments:

  1. நீங்க காந்திய விட மாட்டிங்களா.. பாவங்க மகாத்மா.. ஏற்கனவே சொர்க்கத்துல ஏண்டா இந்த பயபுள்ளைங்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்னு கண்ணிர் விட்டுக்கிட்டு இருக்காராம்.. நீங்க வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சிகிட்டு இருக்கீங்க அவருக்கு...

    ReplyDelete
  2. நான் கூட இறுதி வரியில் நீங்கள் இப்படி முடிப்பீர்கள் என்று அனுமானித்து இருந்தேன்-

    நான் பார்த்தது ஹார்வர்டில் படித்த ராகுல் காந்தி யை.

    நல்ல வேலை அவ்வாறு முடிக்க வில்லை.

    nice

    ReplyDelete
  3. என்ன ஆச்சு... காந்திகிட்ட மய்யம் கொண்டுயிருக்கீங்க ?

    ReplyDelete
  4. அருமை விநாயகமுருகன், நல்லா இருக்கு

    அடுத்த முறை காந்தியிடம் பேசும் பொழுது கூறிவிடுங்கள் அவர் கேட்டதில் பாதி விஷயம் சில பல இடங்களில் நகரத்திலும் இல்லை என்று ...கொஞ்சமேனும் சந்தோஷ படட்டும்

    நன்றி விநாயகமுருகன்

    ஜேகே

    ReplyDelete