Monday, May 23, 2011

வெடிகுண்டு


வாதாம் மர இலைகள் உதிரும்
அந்த மழலையர் பள்ளிக்கூடத்திற்கு
வெடிகுண்டு வைத்துள்ளதாக
தகவல் வருகிறது

இன்னதென்று புரியாமல்
அவசரமாக வெளியேறும்
குட்டி கடவுளர்களால்
முன்பக்க வாசலில்
பரபரப்பு சூல்கொள்கிறது

தேவதைகள் போல் சிரிக்கும்
இள‌ம் ஆசிரியைகள்
இப்போது
கண்டிப்பான குரலில் உத்தரவிட்டபடி
கடவுளர்களுக்கு பாதுகாப்பரண் அமைக்கிறார்கள்

மணல்மூட்டைகள் நிறைந்த
ஊர்தியிலிருந்து இறங்கி
பள்ளிக்குள் ஓடும்
மோப்ப நாயை பார்க்கும்
கடவுளர்களது
விழிகள் அகல விரிகின்றன

புத்தகப் பைகளை தாண்டி
விரையும் காவலர்கள்
மைதானத்துக்குள் அநாதையாக
கிடக்கும் கால்பந்தை
கவனமாக பரிசோதிக்கின்றனர்

அவர்கள்
தலைமையாசிரியை அறைக்குள் தேடுகிறார்கள்

முடிவற்ற தேடுதலின் இறுதியில்
வெடிக்காத குண்டொன்றின்
வதந்தி திரி பற்ற வைக்கப்படுகிறது

வெடித்து விட்ட பாவனையில்
கடவுளர்கள் பயந்துபோய்
காதை பொத்திக்கொள்ளும்போது
வாரஇறு‌தி‌ நாளில் பள்ளிக்கூடம்
வழக்கம் போல இயங்குமென்று
அறிவிக்கப்படுகிறது

7 comments:

  1. என்னை மிஸ் பண்ணுவதாக பா.ராவும்,வடகரை வேலனும் பஸ்ஸில் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. அவர்களுக்காக இந்த கவிதை

    ReplyDelete
  2. அருமையான கவிதை :)

    ReplyDelete
  3. சூப்பர்! எங்க ஓடி ஓடிப் போயிறீங்க? :-)

    ReplyDelete
  4. நா வுஸ்குலுக்கு போ சொல்லொ கமார்கட்டு தான் தெரியும்...

    ReplyDelete
  5. ரொம்ப பிடித்திருக்கிறது வி.முருகன்.. அருமை..

    ReplyDelete
  6. நன்றி இராமசாமி
    நன்றி பா.ராஜாராம் (வயிற்றுபிழைப்பு :( )
    நன்றி அசோக் (இப்போ எல்லாம் வெடிகுண்டுதான்)
    நன்றி பாலாசி
    நன்றி பிரபாஷ்கரன்

    ReplyDelete