Monday, October 11, 2010
வித்தை - அகநாழிகை சிறுகதை
செப்டம்பர் மாத "அகநாழிகை" இதழில் வெளியான எனது வித்தை என்ற சிறுகதை வாசிக்க.. சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி...
வித்தை
கடைசி பெஞ்சில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பொன்ராஜ்தான் அந்த கேள்வியை என்னிடம் கேட்டான். பள்ளிக்கூட காம்பவுண்டு பக்கத்தில் மண்டிக்கிடந்த கருவேலக்காட்டில் நானும்,அவனும் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த கேள்வியை கேட்டான். எனக்கும் ஏற்கனவே அந்த சந்தேகம் இருந்தது.
பொன்ராஜ் வீட்டை தாண்டி தெருமுனையில் செல்லும்போது “அது எப்படிடா மூனு நாளா ஒன்னுக்கு கூட போகாம சைக்கிள் சுத்தறான்?” பொன்ராஜ் கேட்ட கேள்வி மனதில் ஓடியது. எனக்கு இருந்த அதே சந்தேகம் பொன்ராஜுக்கும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அருகே செல்ல,செல்ல திடலில் கட்டியிருந்த லவுட்ஸ்பீக்கரின் ஒலி அதிகரித்தது. “நான் ஆணையிட்டால்…” எம்.ஜி.ஆர் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் அவன் சைக்கிள் சுற்றிக் கொண்டிருப்பது இங்கிருந்தே பார்க்க முடிந்தது.
தெரு முனையில் இருந்த காலித்திடலின் நடுமையத்தில் மூங்கில் கம்பு நட்டிருந்தது. மூங்கில் கம்பில் ஒரு ட்யூப்லைட் கட்டியிருந்தார்கள். அவன் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். திடலை சுற்றி வட்டவடிவத்தில் ஐந்து மூங்கில் கம்புகள் ஐந்தடிக்கு ஐந் தடி இடைவெளியில் அரண் போல ஊன்றியிருக்க, ஒவ்வொரு கம்பிலும் சணல் கயிற்றால் ட்யூப்லைட் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. ஐந்து மூங்கில்களையும் கயிற்றால் இணைத்து வட்ட திடலை சுற்றி வட்டவடிவத்தில் அரண் உருவாக்கியிருந்தார்கள்.
இன்று இரண்டாம் நாள். இரண்டு நாட்களாக அவன் கால்கள் தரையில் படவில்லை ; இரண்டு நாட்களாக அவன் உறங்கவில்லை என்பதுதான் ஊருக்குள் அதிசயமான பேச்சாக இருந்தது. அதைவிட பொன்ராஜ் சொன்னதுதான் எனக்கு அதிசயமாக இருந்தது. இரண்டு நாட்களாக அவன் வயக்காட்டுப்பக்கம் ஒதுங்கவில்லை. சைக்கிள் வித்தைக்காரன் காலையில் குளிக்கும்போது குடம், குடமாக தலையில் தண்ணீரை வாரி வாரி கொட்டினான். குளிக்கும்போதே அவன் ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவலை பொன்ராஜ் சொன்னபோது அது எனக்கு அதீத கற்பனையாக பட்டது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ?
நேற்று இரவு அவன் சைக்கிள் சுற்றும்போது மூன்று பேர் வட்டமாக சூழ்ந்து நின்றார்கள். பழைய ப்யூஸ் போன ட்யூப்லைட்டுகளை கையில் வைத்து அவன் வேகமாக சைக்கிள் சுற்றி வர,வர ஒவ்வொரு லைட்டாக அவன் முதுகில் நெஞ்சில்,முதுகில் அடித்து உடைக்க மக்கள் மெய்மறந்து நின்றார்கள். சிறுவர்கள் கைதட்டி உற்சாகமூட்ட கடைசி ட்யூப்லைட்டை அவன் நெற்றியில் அடித்து உடைத்தார்கள். இவ்வளவுக்கும் அவன் கொஞ்சம் கூட சைக்கிளின் வேகத்தை குறைக்காமல் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அதைவிட ஆச்சர்யமாயிருந்தது பொன்ராஜ் சொன்னது. அந்த வித்தைக்காரன் குளிக்கும்போதே ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவல். அப்படியென்றால் இரண்டுக்கு? பொன்ராஜ்ஜிடம் அதுகுறித்து தெளிவான பதிலில்லை.
“நெஞ்சமுண்டு நேரமுண்டு ஓடு ராஜா…” எம்.ஜி.ஆர் பாடல் மைக் செட்டில் ஒலித்துக் கொண்டிருந்தது. சைக்கிள் வித்தைக்காரனை பார்த்தேன். அவனை சுற்றி சிறுவர்கள் நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் சைக்கிளின் ஹேண்டில்பாரை இரண்டு கைகளால் பலமாக பிடித்துக் கொண்டு சற்று படுத்த நிலையில் சைக்கிளை ஓட்டியபடியே சுற்றினான். வலது காலை உயர்த்தியபடி இடதுகாலால் மட்டும் பெடல் ஓட்டி சைக்கிளை ஓட்ட சிறுவர்கள் விசிலடித்தார்கள்.
சைக்கிள் வித்தைக்காரனின் உதவியாளன் கையிலிருந்த சிறிய மைக்கை பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி, சுற்றி நடந்து வந்துக்கொண்டிருந்தான். அவன் கயிற்றை தாண்டி சென்று அருகிலிருந்த துணி கூடாரத்திற்குள் நுழைந்தான். எம்.ஜி.ஆர் பாடுவதை நிறுத்திவிட்டு வந்தான்… கையிலிருந்த மைக்கில் கத்தினான்.அவன் குரல் கொடூரமானதொரு காட்டெருமை குரலையொத்திருந்தது.
“அம்மாமாரே..அய்யாமாரே உசுர வச்சு வெளையாடுற ஆட்டம். ஜோரா கைதட்டுங்க…காசு போடுங்க.. ” இடதுகையிலிருந்த மைக்கில் பேசியபடியே வலது கையிலிருந்த ஒரு பெரிய கறுப்புநிற குடையை சைக்கிள்வித்தைக்காரனிடம் தூக்கிப்போட, அவன் சைக்கிளை ஓட்டியபடியே குடையை கேட்ச் பிடித்தான். சைக்கிள் ஹேண்டில்பரிலிருந்து கைகளை எடுத்து குடையை பிரித்தான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. கால்கள் தரையை தொடவில்லை. விரித்த குடையை தலைகீழாக பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி ,சுற்றி சைக்கிள் ஓட்டினான்.
சில பெண்கள் கயிற்றுக்கு இந்தப்பக்கம் நின்றபடி சில்லறைகாசுகளை தூக்கி குடைக்குள் வீசினார்கள். ஒரு வெள்ளைவேட்டிக்காரர் கயிற்றை தாண்டி சென்று கசங்கி போயிருந்த ஐந்துரூபாய் தாளொன்றை குடைக்குள் போட்டு திரும்பினார்.
இனி பாக்கபோறதுதான் ஜோரு..நெருப்பு வெளையாட்டு…மைக்கில் கத்திக்கொண்டிருந்தவன் சொல்ல கூட்டமே ஒருக்கணம் அமைதியானது. பெண்கள் திகைத்துபோய் சைக்கிள் வித்தைக்காரனை பார்தத்து. மைக்காரன் கூடாரத்துக்குள் சென்று ஒரு மண்ணெண்ணை கேனுடன் வந்தான். ஒரு கையில் சிறிய பந்தத்தை பற்ற வைத்து கேனை சைக்கிள் வித்தைக்காரனிடம் தர அவன் கேனிலிருந்து நாலைந்து மிடக்கு எண்ணெயை விழுங்கினான்.
பொன்ராஜும் வேடிக்கை பார்க்க வந்திருந்தான். முன்னால் கூட்டத்தின் தலை மறைக்க உயரமான கல்லின் மேல் நானும் பொன்ராஜும் ஏறிக்கொண்டோம். சைக்கிள் வித்தைக்காரன் பந்தத்தை வாங்கி வலது கையில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். குடையும்,சில்லறை காசுகளும் மைக்காரனிடம் இருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் வாயிலிருந்து எண்ணையை காற்றில் கொப்பளித்து துப்பி பந்தத்தால் தீமூட்ட பெரும் ஜூவாலையுடன் காற்றில் நெருப்பு பறந்தது. கொள்ளிவாய் பிசாசு திடலில் சைக்கிள் ஓட்டுவது போலிருந்தது. கூட்டம் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தது.
சைக்கிள் வித்தைக்காரன் ஒரு கையாலா ஹேண்டில்பாரை பிடித்து ஓட்டியபடியே சுற்றி வந்துக் கொண்டிருந்தான். மெய்மறந்து நின்ற கூட்டத்திற்கு ஒரு கையால் டாட்டா காட்டியபடியே சைக்கிள் ஓட்டினான். மைக் பிடித்திருந்தவ்ன் துணிக்கூடாரத்துக்குள் சென்றான். லவுட்ஸ்பீக்கரில் டி.எம்.சவுந்தராஜன் பாடல்கள் சன்னமாக ஒலிக்க ஆரம்பித்தது. கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக களைய ஆரம்பித்தது. சைக்கிள் வித்தைக்காரன் இப்போது வேகத்தை குறைத்து சுற்றி வந்துக் கொண்டிருந்தான்.
இரவெல்லாம் தூங்காமல் சைக்கிள் ஓட்டுவான் என்று பக்கத்துதெரு பொன்ராஜ் சொன்னான். நேற்று இரவு விழித்திருந்து கவனிக்க முடியவில்லை. திண்ணையில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டே தூங்கிவிட காலையில் வாசலுக்கு சாணி தெளிக்க வந்த அம்மாவின் சலசலப்பில் விழித்து பார்த்தேன். அதிகாலை பனியிலும் சளைக்காமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். தலையில் சிவப்பு நிற மப்ளரை சுற்றியிருந்தான். உடம்பில் போர்வை சுற்றியிருக்க குளிரிலும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். ஒருவேளை சைக்கிளை விட்டு இறங்கி துணிக்கூடாரத்துக்குள் சென்று உறங்கியிருப்பானோ?தெரியவில்லை.
இன்று இரவு எப்படியாவது உறங்காமல் பார்க்க வேண்டும். பக்கத்து ஊரிலிருந்து பள்ளிக்கூடம் வரும் பால்பாண்டி அவன் ஊரில் இதுபோல சைக்கிள் வித்தை நடந்தபோது விடிய விடிய தூங்காமல் இருந்து உறுதி செய்ததை சொன்னான். துருவி,துருவி கேட்டபோது கண் அசந்துவிட்டதாக சொன்னான். அவன் அப்பாதான் கண் விழித்து அவன் காலை இறக்காமல் சைக்கிள் ஓட்டுவதை கவனித்ததாக சொன்னான். எனக்கு அதைவிட சந்தேகம் பொன்ராஜ் சொன்னதுதான். தூங்காமல் இருக்கலாம். அது எப்படி ஒன்னுக்கு இருக்க கூட இறங்காமல் ஓட்ட முடியும்? யாராவது லேசாக கண் அசரும் சமயம் பார்த்து இறங்கிபோய் வந்துவிடுவானோ?
சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வந்தேன். திண்ணையிலிருந்து பார்த்தால் திடலில் சைக்கிள் ஓட்டுவது தெரியும். இரவு பழுத்து கிடந்தது. ட்யூப் லைட்டுகள் வெளிச்சம் கண்கூசியது. துணிக் கூடாரத்துக்குள்ளிருந்து மைக்செட்காரன் சாப்பிட்டு முடித்து வந்தான். அம்பலக்காரர் வீட்டு பெண் தட்டில் இட்லிகளை எடுத்து வந்து சைக்கிள் ஓட்டுகிறவனிடம் தந்து விட்டு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்
சைக்கிள் ஓட்டுகிறவன் திடலின் நடுமையத்திலிருந்த மூங்கில் கம்பை இடது கையால் இறுக்கமாக பிடித்தபடி சைக்கிளை பேலன்ஸ் செய்து நிறுத்தியிருந்தான். கால்களை பெடலிலிருந்து எடுக்கவில்லை. தட்டை ஹேண்டில் பார் மீது லாவகமாக வைத்து வலது கையால் இட்லியை தின்றுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்ததும் அம்பலக்காரர் வீட்டு பெண் ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வர அதை குடிக்காமல் நன்றாக கொப்பளித்து துப்பிவிட்டு மீண்டும் சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். திடலின் ட்யூப் லைட் வெளிச்சம் என் கண்களுக்கு ஆயாசமாய் இருந்தது. திடலை சுற்றி, சுற்றி வரும் சைக்கிளை திண்ணையிலிருந்து பார்த்தபடியே இருந்தேன்.
கண்கள் வலிப்பது போலிருக்க லேசாக தலையணையில் சாய்ந்து படுத்தபடியே அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிடுவானோ என்று உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும். தெருவை ஒரு முறை பார்த்தேன். அநேகமாக எல்லாரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். அவன் சாவதானமாக சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தான்.
மைக்செட்காரன் கூடாரத்திலிருந்து வெளியே வந்து போர்வையையும், மப்ளரையும் தந்துவிட்டு செல்ல சைக்கிளை மிதித்தபடியே மப்ளரை தலையில் கட்டிக்கொண்டான். போர்வையை உடலில் சுற்றியபடியே சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். தெருநாய்களின் அரவம் கூட குறைந்து கிடந்தது. சுவர்கோழிகள் க்ரீச்..க்ரீச்சென்று கத்திக்கொண்டிருந்தது.
சைக்கிள் வித்தைக்காரன் என்னை பார்த்து லேசாக புன்னகைப்பது போலிருந்தது. அவன் கண்டிப்பாக ஒன்னுக்கு இருக்க இறங்கியாக வேண்டும். தெருவை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். தெருவில் கயிற்றுக்கட்டிலில் படுத்து கிடந்தவர்கள் நன்றாக குறட்டை விடும் சத்தம் கேட்டது. ஒருவேளை நான் கவனிப்பது தெரிந்து அவன் இறங்காமல் ஓட்டுவது போல நடிக்கிறானோ…?
சைக்கிள் முன்பு போல சீராக இல்லாமல் வளைந்து, வளைந்து சுற்றி வந்தது.சைக்கிள் வித்தைக்காரன் தடுமாறி, தடுமாறி ஒட்டுவது போல எனக்கு பட்டது. சைக்கிள் வித்தைக்காரன் மூங்கில் கம்பை பிடித்தபடியே சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்திவிட அவசர, அவசரமாக அவன் கால்களை பார்த்தேன். திண்ணையிலிருந்து நான் பரபரப்பாய் எழுவதை சைக்கிள் வித்தைக்காரன் கவனித்திருக்கவேண்டும். என்னை பார்த்து சிரித்தபடியே அவன் மீண்டும் சைக்கிளை ஒட்ட அரம்பித்தான். மெல்ல,மெல்ல நானும் அந்த சைக்கிள் வித்தைக்காரனின் ஆட்டத்தில் பங்கேற்பது போலிருந்தது.
ஒவ்வொரு முறை அவன் சைக்கிளை ஸ்லோ செய்யும்போதோ, தடுமாறும்போதோ நான் அவன் கால்களை உன்னிப்பாக கவனிப்பதும் பதிலுக்கு அவன் என்னை கேலியாக பார்த்தபடி மீண்டும் சைக்கிளை மிதிப்பதும் ஒரு முடிவற்ற ஆட்டம் போல இருந்தது
இரவின் அடர்ந்த கானகத்தினுள் தண்ணீர் அருந்தும் ஒரு மறிமான் போலவோ வழி தெரியாமல் மரத்தை சுற்றி,சுற்றி வரும் ஒரு மறிமான் குட்டி போலவோ அவன் இருந்தான். மரத்தடியில் உன்னிப்பாக எந்த நேரமும் அதை அடிக்க காத்திருக்கும் சிங்கத்தை போல விழிப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். சைக்கிள்வித்தைக்காரன் வேகத்தை குறைக்கும்போதெல்லாம் தூக்க கலக்கத்திலிருக்கும் நான் பதறிப்போய் விழித்தெழும் போதெல்லாம் , என்னை கிண்டல் செய்வது போலிருந்தது அவன் பார்வை. அதுபோன்ற தருணங்களில் அவன் இன்னும் உற்சாகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.
ட்யூப்லைட் வெளிச்சம் கண்களை வலிக்க வைத்தது. மணியென்னவென்று தெரியவில்லை. இரவின் மடியில் தெரு கிறங்கி கிடந்தது. தூரத்தில் ஒற்றை கூட்ஸ் வண்டி ஓடும் சத்தம் இரவின் அமைதியை கிழிப்பது போலிருந்தது. பின்பனி இறங்குவது உணர முடிந்தது.அப்படியே உறங்கிப்போனேன். கண்விழிக்கும்போது அவன் வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தான். அவன் என்னை கேலியாக பார்ப்பது போல இருந்தது. என்னை நினைக்க அவமானமாகயிருந்தது. எப்படி உறங்கினேன்? பாய், தலையணையை சுருட்டி வீட்டுக்குள் நுழைந்தேன்.
மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது பால்பாண்டி கிண்டல் செய்தான். “நாந்தான் அப்பவே சொன்னேனில்ல… அவன் ஒன்னுக்கு கூட இருக்க இறங்க மாட்டான்”
“அது எப்படிடா முடியும்?”
“அவன் தண்ணி குடிக்கமாட்டான்டா. தண்ணி குடிக்காமா ஒருவாரம் கூட எங்க ஊர்ல சைக்கிள் சுத்தியிருக்கான்.” பால்பாண்டி சொன்னான்.
“அப்படியில்லடா. காலம்பறவே கிளம்பி கக்கூஸ் போயிட்டு வந்துடுவாண்டா” பொன்ராஜ் சொல்ல பால்பாண்டி அதை மறுத்தான்.
எனக்கு குழப்பம் அதிகமானது. இன்று மூன்றாவது நாள். கடைசி இரவு. பேசாமல் நாம இன்னைக்கு கண்முழிச்சு பாக்கலாமே பொன்ராஜ் சொன்னது சரியென்று பட்டது.“முதல்ல நீ தூங்கிடு…நான் கண்முழிக்கறேன். அப்புறம் நான் உன்னை எழுப்பி வுடறேன்..நீ கண்முழிச்சு பார்த்துக்கோ.. ” பொன்ராஜ் இரவு சாப்பிட்டுவிட்டு பாய்,தலையணையுடன் என்வீட்டு திண்ணைக்கு வந்துவிடுவான். இன்று எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம்.
தெரு முனையில் பாட்டு சத்தம் கேட்டது. “நான் செத்து பொழச்சுவண்டா..எமன பார்த்து சிரிச்சவண்டா….” வழக்கம்போல எம்.ஜி.ஆர் பாடல். அம்பலக்காரர் ஒரு செவ்வந்தி மாலையை சைக்கிள்வித்தைக்காரனுக்கு போட்டு, பத்து ரூபாய் தாளொன்றை அவன் சட்டைப்பையில் திணிப்பது இங்கிருந்து தெரிந்தது. லவுட்ஸ்பீக்கர் பாடல் நின்றது.
“அம்பலக்காரர் அய்யாவுத்தேவர் அன்பளிப்பு பத்துரூபாஏய்ய்ய்…” மைக்செட்காரன் மைக்கில் உற்சாகமாக கத்திக்கொண்டிருக்க, அய்யாவுத்தேவரின் இரண்டாவது பெண் அந்த மாலையுடன் சுற்றும் சைக்கிள்காரனை விட்டு வாசல்படியில் நின்று ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தது.
கடைசி நாள் களை கட்டியது. திடலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு சில்வர் குடத்தை வாயால் கவ்வியபடியே சைக்கிள்வித்தைக்காரன் சைக்கிளை மிதித்தான். கைதட்டல் விசில் காதை கிழித்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. திடலின் ட்யூப் லைட்டுகள் எரிய ஆரம்பித்தது. அவன் சைக்கிளின் முன் சக்கரத்தை மட்டும் உயர்த்தி பின்சக்கரத்தின் பேலன்ஸில இப்போது ஓட்டிக்கொண்டிருந்தான். சிறுவர்கள் கைதட்டினார்கள். திடலிலிருந்த கூட்டம் படிப்படியாக வடிய ஆரம்பிக்க அம்பலக்காரார் வீட்டிலிருந்து வழக்கம்போல இட்லித்தட்டு வந்தது. அம்பலக்காரரின் பெண் இட்லித்தட்டை சைக்கிள் வித்தைக்காரனிடம் கொடுத்துவிட்டு களுக்கென வெட்கத்துடன் சிரித்தபடியே வீட்டுக்குள் ஓடியது.
இரவு உணவை சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வெளியே வரும்பொது பொன்ராஜ் தலை தெரிந்தது. பொன்ராஜ் எனக்கு பக்கத்தில் திண்ணையில் பாய் தலையணையுடன் அமர்ந்தான். எங்கள் மூவரை தவிர மொத்த தெருவும் உறங்க ஆரம்பித்திருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் எங்களை பார்த்தபடியே சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தான். இன்று அவனை கண்காணிக்க இரண்டு ஆட்கள் இருக்கிறோம்.
சைக்கிள் வித்தைக்காரன் நேற்று போல சிநேகமாக என்னை பார்த்து சிரிக்கவில்லை. மெளனமாக ஓட்டிக்கொண்டிருந்தான். எனக்கு தூக்கம் வந்தது. பொன்ராஜுக்கு தூக்கம் வந்தால் என்னை எழுப்பிவிட்டு அவன் தூங்க வேண்டும். கண்களை இழுத்துக்கொண்டு சென்றது. எவ்வளவு நேரம் தூங்கினேன் தெரியவில்லை. எல்லாரும் திடலுக்குள் ஓடினார்கள். சலசலவென சத்தம்.
“இதோ இறங்கப் போகிறார்” மைக்செட்டில் அலறியது. வந்த கோபத்தில் பொன்ராஜை அடித்து எழுப்பினேன்.அவன் தூக்க கலக்கத்தில் பேந்த ,பேந்த விழித்தான். திடலுக்கு முன் குவிந்திருந்த கூட்டம் மறைத்தது. அருகே ஓடினேன். சைக்கிள் வித்தைக்காரன் ஒரு பறவை போல இரண்டு கைகளை விரித்தபடி சைக்கிளில் இருந்து குதிக்க மைசெட்காரன் தனியாக வந்த சைக்கிளை பிடித்துக் கொண்டான். சைக்கிள் வித்தைக்காரன் குதித்து, குதித்து திடலை வட்டமாக சுற்றி வந்தான். மூன்று இரவுகளாய் தரையில் படாத அவன் கால்கள் தரையை தொட தயங்குவது போலிருந்தது. இரண்டடிக்கு ஒரு முறை கால்களை தரையில் அழுந்த பதித்து நடனமாடியபடியேவும், அந்தரத்தில் பறப்பது போலவும் சுற்றி,சுற்றி ஓடி வந்துக்கொண்டிருந்தான். மக்கள் ரூபாய், நெல்,அரிசி என போட்டி போட்டப்படி தந்தார்கள்.
ஒரு நீர்ப்பறவையின் தரைப்பயணம் போல் தடுமாற்றமாய் ஆரம்பத்தில் சுற்றி,சுற்றி ஓடியவன் இப்போது சரளமாக கால்களை நிலத்தில் ஊன்றி ஓடிக்கொண்டிருந்தான். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை;இது ஊரறிந்த உண்மையென்று லவுட்ஸ்பீக்கர் அலறியது. சைக்கிள் வித்தைக்காரன் கூட்டத்தில் நின்ற என்னை பார்த்து சிரித்தான். பொன்ராஜ் என்னை பார்த்தான். கோட்டை விட்ட பொன்ராஜ் மீது கடுப்பாக இருந்தது.
மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது திடல் வெறிச்சோடி இருந்தது.மூங்கில் கம்புகள் நட்டிருந்த இடத்தில் மண் குழிகள் மட்டுமே இருந்தது.மூன்று நாட்களாக தொடர்ச்சியாக உயிர்ப்போடு இருந்த திடல் பார்க்க மயானம் போல தெரிந்தது. அந்த சைக்கிள் வித்தைக்காரன் எப்படி சிறுநீர் கூட கழிக்காமல் மூன்று நாட்களாக சைக்கிள் ஒட்டினான் என்பதை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போனதில் வருத்தமாயிருந்தது.
கடைசிப்பக்கம் கிழிந்துப்போன மாயாஜால கதையொன்றின் புதிர்த்தன்மையும்,ரகஸ்யங்களும் நிறைந்ததாய் இருந்தது அவனது வருகை யும் பொன்ராஜ் சொன்ன அந்த தகவலும். முக்கியமான அந்த தகவல் பின்னிருந்த ரகசியமொன்றை கண்டுபிடிக்காமல் போனதில் வருத்தமாக இருந்தது.
சைக்கிள் வித்தைக்காரன் ஊரைவிட்டு சென்றிருந்த இரண்டாம் நாள் எனது மாமா வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தேன். அம்மாவுடன் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அதிகாலை இருட்டில் இறங்கியபோது அவனை பார்த்தேன். அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அதிகாலை இருட்டி ல் அந்த முகமும் உயரமும் தெளிவாகவே அடையாளம் தெரிந்தது. பேருந்து நிலையத்தின் வெளி வாயிலில் இடிந்திருந்த சுற்றுச்சுவர் அருகே குத்துக்காலிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். சிறுநீர் கழித்து முடித்தவன் பழுப்பேறிய அழுக்கு வேட்டியை கணுக்கால்கள் தெரிய மடித்துக்கட்டி வேகமாக நடக்க ஆரம்பித்தான். சுற்றி ஒருமுறை பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த பழைய துருபிடித்த அட்லஸ் சைக்கிளை காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது.
நன்றி
என்.விநாயக முருகன்
Subscribe to:
Post Comments (Atom)
அருமையாக உள்ளது!
ReplyDeleteநன்றி எஸ்.கே
ReplyDelete