Friday, October 15, 2010

ஜே.பி.சாணக்யா என்னும் கலைஞன்

ஜே.பி.சாணக்யா என்னும் கலைஞனை "ஆண்கள் படித்துறை" என்னும் அவரது அற்புதமான சிறுகதையோடு அறிமுகப்படுத்துகிறேன். அன்னம்மாள் கணவனை இழந்தவள். மத்திய வயதை தாண்டியும் கட்டுடலோடு அந்த ஊர் ஆண்களை அலைய விடுபவள். அன்னம்மாள் காசுக்காக உடம்பை விற்கும்பாலியல் தொழிலாளி அல்ல. அவளை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. அவள் முடிவு செய்யும் ஆண்களே அவளோடு படுக்க முடியும். ஆண்களை ஒரு பரிதாபத்துகுரிய பிறவியாகவோ, அற்ப ஜீவனாகவோத்தான் அவள் பார்த்திருக்க முடியும். உறவுக்குக்காக அவள் பணம் ஏதும் பெற்றுக் கொள்வதுமில்லை. அல்லது காமத்தின் மூலம் ஆண்களை வென்று விட்டதாக அவளுக்கு உள்ளுக்குள் உவகை. அதன் மூலம் பகலில் தைரியமாக ஆண்களது முகங்களை எதிர்கொள்வதில் அவளுக்கு அப்படியொரு ஆனந்தம். அவளுக்கு லலிதா என்றொரு மகள். லலிதா அம்மாவுக்கு நேர் எதிரி. கற்பு, குடும்பம் பற்றிய கறாரான மதிப்பீடுகளை கொண்டிருக்கும் அவள் செல்வம் என்ற வாலிபனை காதலிக்க, செல்வத்திற்கோ லலிதா உடல் மீதுதான் ஆசை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகுதான் செக்ஸ் என்பதில் லலிதா கறாராக இருக்கிறாள். அன்னம்மாள் முதல்முறையாக தனது மகள் திருமணத்துக்காக காமத்தை விலை பேசுகிறாள். விலை பேசுவது வேறு யாரிடமும் இல்லை. செல்வத்திடம். அன்னம்மாள்,செல்வம் உறவை பார்க்கும் லலிதா தூக்கு மாட்டிக் கொள்கிறாள். ஆணாதிக்க சூழலில் கணவனை இழந்த ஒரு பெண் தன் சுயத்தையும், இருப்பையும் காப்பாற்ற காமத்தைத்தான் ஆயுதமாக எடுத்தாக வேண்டிய நிலையை ஆண்கள் உருவாக்கி வைத்திருக்கும் அவலத்தை அன்னம்மாள் கதாபாத்திரம் காட்டுகிறது. ஆண்களை எதிர்க்க காமத்தை விட்டால் மரணம் தவிர வேறு வழி இல்லை என்பதை லலிதா காட்டுகிறாள். காமத்தை ஆண்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றியும் அன்னம்மாள் கடைசியில் தோற்றுவிட, ஆண்கள் எல்லா நேரத்திலும் வெற்றிப்பெற்றவர்களாக மாறுவதை வாழ்வின் முரண் என்பதை விட வேறு என்ன சொல்ல முடியும்? கதா - காலச்சுவடு போட்டியில் இந்த சிறுகதை முதல் பரிசு பெற்றது. எஸ்.ரா முன்பொருமுறை தனக்கு பிடித்த நூறு சிறுகதைகளில் "ஆண்களின் படித்துறையை" குறிப்பிட்டுள்ளார்.

“பிளாக் டிக்கட்” சிறுகதையில் அலிபாபா பிளாக் டிக்கட் விற்கும் ரவுடி. பாரி தியேட்டர் கெளண்டரில் டிக்கட் குடுக்கும் வேலை செய்கிறான். தியேட்டர் நிர்வாகம் பெரியவர் கையிலிருந்து அவரது மகன் சின்ன செட்டியார் கைக்கு மாறுகிறது. பெரியவர் இருந்தவரை சுதந்திரமாக தியேட்டரில் பிளாக் டிக்கட்டும், செய்து வந்த விளிம்புநிலை மனிதர்களுக்கு சின்னவர் அதிகாரத்துக்கு வந்ததும் சோதனை வருகிறது. போலீஸ்காரர்களும், சில நாகரீகமான ஆட்களும் கூட பிளாக் டிக்கட் விற்கிறார்கள். இவர்களோடு அலிபாபாவால் போட்டியிட முடியவில்லை. அலிபாபாவும், பாரியும் சமாதானமாகி கூட்டாக தொழில் செய்யும் நேரத்தில் அலிபாபாவை யாரோ வெட்டி விடுகிறார்கள். பாரியை போலீஸ் கைது செய்கிறது. விளிம்புநிலை மனிதர்களை மோதவிட்டு அதிகார வர்க்கம் வேடிக்கை பறக்கிறது. திட்டம் போட்டு செஞ்சிட்டானுவ என்று அவர்கள் பேசிக்கொள்வதோடு கதை முடிகிறது. பிளாக் டிக்கெட் கதையில் சாணக்யா விவரிக்கும் புற உலக வர்ணணைகள் துல்லியமானதும், யதார்த்தமானதுமாய் அமைந்துள்ளது. குறிப்பாக தியேட்டர் கழிவறைகளில் நடக்கும் பாலியல் தொழில், பிளாக் டிக்கட் விற்கும் சிறுவர்களின் புற உலகத்தை யதார்த்தமாக சாணக்யா பதிவு செய்கிறார்.

“கடவுளின் நூலகம்” என்ற சிறுகதை செம ஜாலியாக செல்லும். ஒரு நாற்பது வயது ஆள். பிரம்மச்சாரி. தினமும் அவனை ஒரு கல்லூரி பெண் சைட் அடிக்கிறாள். இருவரும் பேசாமலேயே பலநாட்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் அவளே உரிமையோடு வந்து அவரிடம் பேசுகிறாள். என் மீது என்ன கோபம்? என் காதல் பொய்யில்லை. ஏன் என்னிடம் பேச மறுக்கின்றீர்கள்? கேட்கிறாள். இவருக்கு குழப்பம். என்னடா இது? நாம் எப்ப இவளிடம் இதற்கு முன்பு பேசியுள்ளோம். மூளை குழம்பிவிட்டதா? செம ரகளையாக இருக்கும் இந்த கதை ஒரு வித திடுக்கிடலோடு சோகமாய் முடிகிறது. இது என்ன மாதிரி கதை? மேஜிக்கல் ரியலிசமா? எதார்த்தமா? தர்க்கத்தை மீறிய ஒரு வித பூடகத்தன்மை இந்தக்கதையின் முக்கிய அமசமாக இருக்கிறது. எது எப்படியோ.. எனக்கு சாணக்யாவை பிடிக்கிறது. சிடுக்குகளற்ற மொழி நடையில் இந்தக்கதை சலசலவென ஓடும் நீரோடை போல ஓடி திடீரென ஹோவென்ற சத்தத்துடன் விழும் பிரம்மாண்ட பேரருவி ஓசையில் முடிகிறது. (இந்தக்கதையின் முன் பகுதியில் லேசாக ஹாருகி முரகாமியின் ஒரு சிறுகதை வாடையடித்தது)

இந்தக்கதையின் கனவுத்தன்மை பற்றி சொல்லும்போது இன்னொரு கதையை பேசாமல் இருக்க முடிவதில்லை. ஜே.பி.சாணக்யா "கனவுப் புத்தகம்" சிறுகதையில் மிக செறிவாக காலத்தை கலைத்துப்போட்டு விளையாடியுள்ளார். ஒரு குளம். அதில் பால்யகாலத்தில் இருக்கும் இரண்டு சகோதரிகள் அவர்களது பால்யகாலத் தோழனுடன் நீந்தி விளையாடுகிறார்கள். தாமரை மலர்களை பறிக்க குளத்தில் முங்குகிறார்கள். காலம் ஓடுகிறது. அவர்கள் வளர்கிறார்கள். வாழ்ந்துக்கெட்ட குடும்பம். திருமணம் தடைபடுகிறது. முதிர்கன்னிகளை சந்திக்க வரும் அதே பால்யகாலத்தோழன் அவர்களோடு உறவு கொள்ளுகிறான். நீருக்கடியிலிருந்து மூன்று பிணங்களை கிராம மக்கள் மீட்டெடுக்கிறார்கள். அதுவரை அவர்கள் வாழ்க்கை எல்லாம் கனவுலகத்திலிருந்து கூறப்பட்டவையாக முடிகிறது.

சாணக்யாவின் எல்லா கதைகளிலும் காமம் அடிநாதமாக இழையோடுகிறது. காமத்தை பில்டர் செய்துவிட்டால் எந்தக் கதையுமே கதையாக இருக்காது. காமத்தை சாணக்யா சரளமாக எழுத்தில் கையாள்கிறார். அவன் வெற்றிலைப் போட்டு வாயை கொப்பளித்தான். என்று சரளமாக சொல்வது போல “அவள் மார்புகளைத் திரை விலக்கி உதடு பொருத்திக் கவ்வினான்” என்று எழுதிவிட்டு போகிறார். இந்த பாணியே அவரது கதைகளில் வணிக எழுத்துக்குரிய மேலோட்டமான பாலியல் கிளர்ச்சியை தராமல் , முகம் சுழிக்க வைக்காமல் நம்மை சகஜமாக கதைக்குள் இழுத்து செல்கிறது. உண்மையில் இவர் காட்டும் காமச்சித்தரிப்புகள் கிளுகிளுப்பாக இருப்பதில்லை. காமம் அதுவாகவே அதாவது அதன் சகஜத்தன்மையோடனே இவரது கதைகளில் வெளிப்படுகிறது. சாணக்யாவின் கதைகளில் வரும் பெண்கள் காமத்தை மிக இயல்பாக எதிர்கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது. "கோடை வெயில்" சிறுகதையில் வேலையில்லாமல் இருக்கும் கணவனுக்காக அவள் மனைவி வசந்தா அவளது உறவினர் அண்ணன் முறை சொல்லி அழைக்கும் ஒரு போலீஸ்காரரோடு உறவு கொள்கிறாள். "ஆண்கள் படித்துறை"யில் அன்னம்மாள். “ரிஷப வீதி” கதையில் பாலியல் தொழிலாளர்களது உலகத்தையும், சிறுமிகளை புணர்வதில் இன்பமடையும் ஒரு வக்கிர ஆணின் செய்கைகளையும் சாணக்யா பதிவு செய்கிறார்.

காமம் தவிர இவரது சிறுகதைகளில் மனப்பிறழ்வுகளை எதிர்கொள்ளும் மனிதர்களை அதிகம் பார்க்க முடிகிறது. “பூதக்கண்ணாடி” கதையில் தீவிர மனப்பிறழ்வு ஒரு கொலையில் முடிகிறது. பூதக்கண்ணாடியின் சித்தி கொலை செய்யப்பட்டு அவளது குடிசைக்குள் புதைக்கப்பட்டு, சில வருடங்கள் கழித்து குடிசை புல்டோசரால் இடிக்கப்படும்போது பிணம் வெளியே வருகிறது. “மிகு மழை” சிறுகதையில் வரும் வேணியக்காளுக்கு அவள் கொடுமைக்கார கணவனால் மனப்பிறழ்வு ஏற்படுகிறது. முடிவில் அவள் ஆடைகளை கிழித்துக்கொண்டு தெருவில் அம்மணமாக நடக்க வீட்டிற்குள் வைத்து பூட்டி வைக்கிறார்கள். “அமராவதியின் பூனைகள்” கதையில் ரசாக் என்னும் ஒரு சிலம்பாட்டக்காரன் வருகிறான். ஊரே மெச்சும் ரசாக் அவன் மனைவி முன் தோற்று போகிறான். ஒருக்கட்டத்தில் அவனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் போகிறது. ரசாக்கின் மனைவி அமராவதிக்கும், ரசாக்கின் நண்பன் காசிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அமராவதி வளர்க்கும் பூனையை சிலம்பால் அடித்துக் கொன்று கத்தியால் கீறி தூக்கில் தொங்க விடுகிறான்.

சாண்க்யாவின் கதைகளில் வரும் ஆண்களும் சரி. பெண்களும் சரி. பாலியல் சுயதேவை சரிவர பூர்த்தியடையாமல் ஏங்குகிறார்கள். ஒருக்கட்டத்தில் பாலியல் வேட்கையால் தீவிரமாக மனம் பிறழ்ந்து விபரீதமாய் மாறுகிறார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் காமமே அடிப்படையாக இருக்கிறது. சாணக்யா அவரது உலகத்தில் காட்டும் மனிதர்களுக்காக நாம் கடவுளை பிரார்த்திக்கிறோம். அவர்கள் இப்படி செய்யலாமா? என்று நம்மை நாமே நொந்து கொள்கிறோம். இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள்? என்று திகைக்கிறோம்.என்ன செய்வது? இப்படியும் ஒரு உலகம் இருக்கத்தானே செய்கிறது. அங்கு மனிதர்கள் இப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விளிம்புநிலை மனிதர்களது உளவியலையும்,புறச்சூழலையும் துல்லியமாக எழுத்தில் வடிக்கும், தனது அடர்த்தியான சிறுகதைகள் மூலம் கவனம் பெற்றுள்ள சாணக்யா என்னும் கலைஞனுக்கு, நவீன தமிழ் இலக்கிய உலகத்தில் தனி இடமொன்று எப்போதும் இருக்கும்.

(ஜே.பி. சாணக்யாவின் "கனவுப் புத்தகம்", "என் வீட்டின் வரைப்படம்" மற்றும் காலச்சுவட்டில் வெளியான சில சிறுகதைகளை முன்வைத்து எழுதப்பட்ட விமர்சனம்)

2 comments: