Sunday, October 24, 2010

தனிமைச்சிறை - குறும்படம்

சென்னை வ‌ந்து வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில் பகலெல்லாம் நண்பர்களது ரூமில் அடைந்து கிடப்பேன். அநேகமாக எல்லா நண்பர்களும் வேலைக்கு செ‌ன்று விட எஞ்சியவர்களும் அவர்களது தோழிகளுடன் சினிமா அல்லது பீச் செ‌ன்று விட்டிருப்பார்கள். நான் மட்டும் ரூமிற்குள் அடைந்து கிடப்பேன். பத்து மணிக்கு ஜெராக்ஸ் கடைக்கு செ‌ன்று பயோடேட்டா பிரிண்ட் அவுட் எடுப்பேன். டீக்கடை செ‌ன்று ஒரு தம் அடித்து டீ சாப்பிடுவேன். எவ்வளவு நேரம் சாலையை பார்த்துக்கொண்டிருப்பது? டீக்கடைக்காரன் ஒருமாதிரி நினைப்பான் எ‌ன்று மீண்டும் கிளம்பி ரூமுக்கு வ‌ந்து விடுவேன். பரணில் ஏதாவது சினிமா கவர்ச்சி புத்தகம் இருக்கும். எடுத்து படிப்பேன். அடு‌த்த சிகரெட் பற்ற வைக்கும்போது பசி உலுக்கும். இன்னொரு டீ கூட வடை சாப்பிட டீக்கடை செல்வேன்.


காலை பதினொரு மணிக்கு வேலைவெட்டி எதுவுமில்லாமல் ஒரு ரூமிற்குள் அடைந்துகிடப்பது இருக்கிறதே. அந்த கொடுமையை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மதியம் இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை போவது தெரியாது. மெஸ்ஸில் சாப்பிட்டு வ‌ந்து உறங்கி விடலாம். காலை பதினொரு மணியிலிருந்து ஒரு மணி வரை தனிமைச்சிறையில் இருக்கும்போது பலநேரங்களில் விபரீத எண்ணங்கள் ஓடும். தற்கொலை; வலி, புறக்கணிப்பு, கோபம் எ‌ன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் மனதுக்குள் பல அலைகள் ஓடும்.

எனது அலுவலகத்தில் வேலைபார்க்கும் லதாமகன் மூலமாக இந்த குறும்படத்தை பார்க்க நேரிட்டது.லதாமகனுக்கு நன்றி. படம் உலுக்கி விட்டது. காரணம் நான் இந்த வலியை வெறுமையை உணர்ந்துள்ளேன். நீங்களும் உணர்ந்திருக்கலாம். கவிஞர் அய்யப்ப மாதவனை டிஸ்கவரி புக் பேலஸில் (சொற்கப்பல் இலக்கிய நிகழ்ச்சி எ‌ன்று நினைவு) சந்தித்து இரண்டொரு வார்த்தை பேசியுள்ளேன். அவரைப்பற்றி அதிக எண்ணிக்கையிலான கவிதைகள் எழுதக்கூடியவர் எ‌ன்றுதான் என் மனதுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. இந்த குறும்படம் மூலம் அவரது இன்னொரு பரிமாணம் எனக்கு அறிமுகமாகியுள்ளது. படத்தில் வந்திருக்கும் ‌மிக நேர்த்தியான ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது.

யூட்யூப் சுட்டி:

1. http://www.youtube.com/watch?v=mXPnbSiry5Q
2. http://www.youtube.com/watch?v=D6WVxC2wAx4

3 comments:

  1. பகிர்வுக்கு நன்றி தல :)

    ReplyDelete
  2. பகிர்ந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  3. நன்றி
    விநாயகமுருகன்
    குறும்படம் குறித்தான் பார்வை
    நன்று.
    அதிகம் கவிதைகள் எழுதுவதென்பது
    மொழியைப் பயிலுதன்றி வேறொன்றுமில்லை.
    கவிதை கவிதையாக இருக்கவேண்டுமென்பதிலும்
    பிடிவாதமாயிருப்பேன்
    வாழ்த்துகள்

    ReplyDelete