Wednesday, June 15, 2011

மசுரு

தெரிந்த பெண்ணொருத்தியிடம்
பேசிக் கொண்டிருந்தேன்
எனது கையிலிருந்த
ஜி.நாகராஜன் நாவலின்
அட்டைப்படத்தை பார்த்து புன்னகைத்தாள்

இவரை தெரியுமாவென்று
கேட்டேன்
தெரியாது எ‌ன்றாள்
ஜி.நாகராஜன்
தமிழின் முன்னோடி எழுத்தாளரென்றேன்
அவரது மீசை
அழகாக இருக்கிறது எ‌ன்றாள்

பாரதியோடு இவரும்
ஒப்பிடத்தக்கவரென்றேன்
பாரதி...பாரதி
இரண்டு முறை உச்சரித்தவள்
அவரது மீசையும்
அழகாக இருக்கும்
நாக்ராஜை விட எ‌ன்றாள்

எனக்கு முதல்முறையாக
கவிஞர்கள் மேல்
கோபம் வந்தது
மசுரு எ‌ன்று கத்தலாம் போலிருந்தது


.

Wednesday, June 8, 2011

கருத்து கந்தசாமி

கருத்து கந்தசாமி
எல்லாத்துக்கும் கருத்து சொல்வார்

சமச்சீர் கல்வியெல்லாம்
சரிப்பட்டு வராதுங்க
சர்வேதச தரத்துக்கு
சரியான தீர்வு மெட்ரிக் படிப்புதான்
என்ன நான் சொல்லுறது
என்னிடம் கேட்பார்
நான் என்ன சொல்லுறது
முனிசிபாலிட்டி பள்ளிக்கே
முக்கி முக்கி செ‌ன்றவன்

தினந்தந்தியை கூட
எழுத்துக்கூட்ட தெரியாது
எனக்கு
என்னிடம் சொல்வார்
தமிழ்ல எழுதறவன் எல்லாம்
முட்டாப் பயலுங்க தம்பி
மலையாளத்துல பாருங்க
மணி மணியா கவிதை எழுதறாங்க

அருந்ததிராய் ஒரு நக்சலைட்டுங்க
அவரையெல்லாம் என்கவுண்டர் செய்யனும்
ஐஸ்வர்யாராய் கூட அழகாயிருக்கா
எனக்கு சிரிப்பு வரும்

பெரியாரெல்லாம் வேஸ்ட்டுங்க
வைக்கம் எங்க இருக்குனு
தெரியுமா அவருக்கு
கோபத்துடன் சொல்வார்
கேட்கலாமென்றால்
எங்கு போய் தேடுவது பெரியாரை

பசுவதை தடை சட்டம்
கொண்டு வரனுமுங்க
பசுக்களெல்லாம்
தெய்வம் உறையும் இடம்
தெரிஞ்சுதோ
கோமாதா லட்சுமி கடாட்சம்
ஒண்ணுமே வெளங்காது எனக்கு
தேமேவென்று வாயை பார்ப்பேன்

க்யூபாவுல பிடல் காஸ்ட்ரோ
செய்யுறது அநியாயம்ங்க
நம்ம ஊருக்கு கம்யூனிசமெல்லாம்
சரிப்பட்டு வராது..
சரிதானே கேட்பார்
அது சரி
எந்த இசத்தை நான் கண்டேன்

எல்லாத்துக்கும் கருத்து சொல்லும்
கந்தசாமி
ஒரு நாள் இறந்துவிட்டார்
கல்லறைக்கு போயிருந்தேன்

அன்று வாயே திறக்கவில்லை
அஞ்சலி செலுத்திவிட்டு
அமைதியாக நின்றிருக்க
என்னிடம் சொன்னார்

நடுகல் இடுவது
பழங்குடி மரபு
இதிகாசங்களில்
இதுபற்றி ஏராளமாய்
தொன்மம் இருக்கிறது
தென்ஆப்பிரிக்கா நாட்டு
இடுகாடுகளில் கூட
இதற்கு சான்றுகள் உள்ளன

நான் பதிலேதும் சொல்லவில்லை
முன்ன பின்ன செத்திருந்தா
சுடுகாடு தெரிந்திருக்கும்
வருத்தமாயிருந்தது எனக்கு




.

Saturday, June 4, 2011

குஞ்சுண்ணியின் கதை

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்தானே

எல்லாரையும் போல
அவர் கவிதைகளைத்தான்
முதலில் எழுத தொடங்கினா‌‌‌ர்

எழுத ஆரம்பித்த
‌சில வருடங்களில்
அவருக்கு புதிது பு‌திதாக சொற்கள்
வ‌ந்து விழுந்துக்கொண்டே இருந்தன

கவிதை எழுதியது போக
மீந்துப்போன சொற்களை வைத்து
என்ன செய்வது எ‌ன்று குழம்பினார்
சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார்

அப்படியும் சொற்கள் தீர்ந்தபாடில்லை
நாவல்களை எழு‌தி குவித்தார்

வீட்டிக்குள் குவிந்து கிடந்த சொற்கள்
மலையென
ஊரைதாண்டி வளர்ந்தபடியே போயிற்று

குஞ்சுண்ணி திகைத்தார்
வருவோர் போவோரிடமெல்லாம்
சொற்களை அள்ளி,அள்ளி கொடுத்தார்

ஆயிரம் பக்க நாவல்கள்
இரண்டாயிரம் பக்க நாவல்கள்
இரண்டு கைகளால் எழுத ஆரம்பித்தார்

சொற்கள் வளர்ந்துக்கொண்டேதான் போனது


நாவல்கள் ஊடாக சினிமாப்பாடல்கள்
திரைக்கதை வசனம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அஞ்சலிக் கட்டுரைகள்
பிட்டு நோட்டீஸ்கள்
பூப்புனித நீராட்டுகள்
அர‌சிய‌ல் பார்வைகள்

குஞ்சுண்ணி எழுதிக்கொண்டே போனா‌‌‌ர்

பசிக்கும்போது சொற்களை எடுத்து உண்டார்
தாகத்துக்கும் சொற்களையே குடித்தார்
சொற்களால் அழுதார்
சொற்களால் சிரித்தார்
சொற்களை தலைக்கு வைத்து உறங்கினா‌‌‌ர்
சொற்களால் திட்டினா‌‌‌ர்

குஞ்சுண்ணி ஒருநாள் இறந்தும் போனா‌‌‌ர்
இறப்பதற்கு முன் ‌சில சொற்களை
பிரத்யேகமாக
தனது கல்லறை வாசகத்துக்கென்று
எடுத்து வைத்துக்கொண்டார்

மீதமிருந்த சொற்களுக்கு
இப்படி ஒரு வழி செய்தார்

குஞ்சுண்ணியாக நான் எனது
உடல் நலத்துடனும், சுய நினைவுடனும்
என்னுடைய இறுதி விருப்புறுதியாக (உயிலாக)
அல்லது மரணசாசனமாக இதை எழுதுகிறேன்.

அடியில் கண்ட சொற்களை
எனது மகன் சின்ன குஞ்சுண்ணி பெயரில்
அவன் ஆண்டு அனுபவிக்க வேண்டி
எழு‌தி வைக்கிறேன்







Friday, June 3, 2011

யுகப்புரட்சி

தெருமுனையில் நிற்கும் லாரியில்
தண்ணீர் பிடித்து வைத்தாயிற்று

தள்ளுவண்டிகாரனிடம்
பேரம் பேசி
நாளைக்கான காய்கறிகளை
பிரிட்ஜில் வைத்தாயிற்று

பிள்ளைகளுக்கு உணவூட்டி
உறங்க வைத்தாயிற்று

திங்கட்கிழமைக்கான
துணிகளை துவைத்து
இஸ்திரி செய்தாயிற்று

எலக்ட்ரிசிட்டி,டெலிபோன்
பில்களை செலுத்தியாயிற்று

கடன் அட்டைகளுக்கான
காசோலைகளை
காலையிலேயே அனுப்பியுமாயிற்று

மாலையில் ஒரு பொதுக்கூட்டம்
லஞ்ச ஊழல் எதிராக
போதுமான நேரமிருக்கு
ஊர் கூடி தேர் இழுக்க


நல்லவேளை
இன்று சனிக்கிழமை
அலுவலகமும் விடுமுறைதான்

திரும்பும் வழியில்
சரவணா ஸ்டோர்ஸ்
ஒரு எட்டு செல்ல வேண்டும் நேரமிருந்தால்


Monday, May 23, 2011

வெடிகுண்டு


வாதாம் மர இலைகள் உதிரும்
அந்த மழலையர் பள்ளிக்கூடத்திற்கு
வெடிகுண்டு வைத்துள்ளதாக
தகவல் வருகிறது

இன்னதென்று புரியாமல்
அவசரமாக வெளியேறும்
குட்டி கடவுளர்களால்
முன்பக்க வாசலில்
பரபரப்பு சூல்கொள்கிறது

தேவதைகள் போல் சிரிக்கும்
இள‌ம் ஆசிரியைகள்
இப்போது
கண்டிப்பான குரலில் உத்தரவிட்டபடி
கடவுளர்களுக்கு பாதுகாப்பரண் அமைக்கிறார்கள்

மணல்மூட்டைகள் நிறைந்த
ஊர்தியிலிருந்து இறங்கி
பள்ளிக்குள் ஓடும்
மோப்ப நாயை பார்க்கும்
கடவுளர்களது
விழிகள் அகல விரிகின்றன

புத்தகப் பைகளை தாண்டி
விரையும் காவலர்கள்
மைதானத்துக்குள் அநாதையாக
கிடக்கும் கால்பந்தை
கவனமாக பரிசோதிக்கின்றனர்

அவர்கள்
தலைமையாசிரியை அறைக்குள் தேடுகிறார்கள்

முடிவற்ற தேடுதலின் இறுதியில்
வெடிக்காத குண்டொன்றின்
வதந்தி திரி பற்ற வைக்கப்படுகிறது

வெடித்து விட்ட பாவனையில்
கடவுளர்கள் பயந்துபோய்
காதை பொத்திக்கொள்ளும்போது
வாரஇறு‌தி‌ நாளில் பள்ளிக்கூடம்
வழக்கம் போல இயங்குமென்று
அறிவிக்கப்படுகிறது

Sunday, May 1, 2011

தேன்மொழி - வல்லினம் கவிதை

வல்லினம் இதழில் வெளியான தேன்மொழி எ‌ன்ற கவிதையை இங்கு பகிர விரும்புகின்றேன்..வல்லினம் இணையத்தளத்திற்கு நன்றி!


அழைப்பிசை

ஏதொவொரு கோடை விடுமுறையில்
மொட்டை மாடி தாழ்வாரத்தில்
குடிவந்தது அந்த சிட்டுக் குருவி

குருவிக்கூட்டை கலைப்பது மகாபாவம்
கண்டிப்புடன் சொன்னாள் பாட்டி

உனக்கென்ன போச்சு
எனக்குதானே தலைவலி
சிதறிக்கிடக்கும் வைக்கோல் குச்சிகளை
அடிக்கடி பெருக்கியபடி
அலுத்துக் கொண்டாள் அம்மா

தாய்க்குருவி இல்லாத நேரம்
முட்டைகளை எடுத்து
அடிக்கடி ரசிப்பது
தங்கையின் வழக்கம்

இரைதேடி இர‌வி‌‌ல் அலையும்
கடுவன் பூனைகளிடமிருந்து
குஞ்சுகளை காப்பதிலேயே
பொழுது போனது பாட்டிக்கு

குஞ்சுப் பறவைகள்
பறந்து செல்ல
மாடிப் புழக்கம்
வெகுவாக குறைந்துப்போன நாளொன்றில்
மொட்டை மாடிக்கு
குடிவந்தது அந்த செல்போன் கோபுரம்

மீண்டுமொரு கோடை விடுமுறையின்
மதிய உறக்கப் பொழுதில்
திடுக்கிட்டு கண்விழித்தோம் அனைவரும்

இனம் புரியாத சோகத்தில்
தங்கையின் அலைப்பேசி
கீச் கீச்சென்று அழைப்பிசையில்
கதறிக் கொண்டிருந்தது

நன்றி
என். விநாயக முருகன்

Thursday, February 17, 2011

நினைவெனும் கொடுஞ்சுமை



கடந்த வருடம் “என் பெயர் சிவப்பு” நாவலுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஜி.குப்புசாமி அவர்கள் எனக்கு ஒரு நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு மரியோ வர்கஸ் யோசா நாவல்களை மொழிபெயர்க்கும்படி வேண்டுகோளுடன் பதில் அனுப்பினேன். அவர் ஜான்பான்வில்லின் புக்கர் விருது நாவலை தற்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாக பதிலனுப்பினார். இந்த வருட புத்தககண்காட்சியில் வாங்கப்படவேண்டிய பட்டியலில் “கடல்” என்ற இந்த நாவலையும் குறித்துக்கொண்டேன்.

கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டு காரணம். ஒன்று ஜான்பான்வில். அவரது நாவல்களின் நடை கொஞ்சம் புரிந்துக் கொள்ள சிரமப்பட வைக்கும். இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல ஜான்பான்வில்லின் எழுத்துநடை மர்மமான வார்த்தைகள், அசந்தர்ப்பமான சமயங்களில் எதிர்பாராத விநோத உவமைகள் என்று உரைநடையை அசாத்திய தளத்திற்கு கொண்டு செல்லும். மொழிபெயர்ப்பு இருந்தால் இலகுவாக படிக்கலாம். கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டாவது காரணம். ஜி.குப்புசாமி. "என்பெயர் சிவப்பு" நாவல்,ஹாருகி முரகாமி எழுத்துக்களை அருமையாக மொழிபெயர்த்திருந்தார். சில மொழியாக்கம் கடமுடாவென்று பயமுறுத்தும். சில்வியா பிளாத்தின் கவிதைகளை அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் எளிமையாக புரிந்துக்கொள்ளலாம். நாகார்ச்சுனன் மொழிபெயர்ப்பில் கவிதைகளை படித்தால் அவ்வளவுதான். ஆனால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு தமிழில் படிக்க சிரமப்படாமல் இருக்கும். அதேநேரம் மூலப்பிரதியின் கலையமைதி கெடாமல் இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விசேஷ கவனம் பெற்று பலரால் பாராட்டப்படுகிறது. இந்நாவலில் அவரது உழைப்பு தெரிகிறது. இந்ந்நாவலின் மொழிப்பெயர்ப்புக்காக அவர் அயர்லாந்து பயணம் செய்துள்ளார். இந்நாவலில் வரும் புற உலகின் சித்தரிப்புகள், கடல் அருகாமை நிலக்காட்சிகள் நுட்பமாக அமைய அவரது பயணம் உதவியுமுள்ளது.

இனி நாவலைப்பற்றி:-

மேக்ஸ் மார்டன் என்னும் வரலாற்று ஓவியர் அவரது மனைவி அன்னா கேன்சரால் இறந்தபிறகு ஒரு கடற்கரை கிராமத்திற்கு செல்கிறார். மேக்ஸ் மார்டன் சிறுவயதில் கோடை விடுமுறையை கழிக்க அடிக்கடி அந்த கடற்கரைக்கு செல்வதுண்டு. அந்த கடற்கரை யிலிருந்தபடி தனது கடந்தகால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வதுதான் நாவலின் பின்புலம். சிறுவயதில் கடற்கரைக்கு ஒரு பணக்கார ஐரீஷ் குடும்பம் விடுமுறையை கழிக்க வந்துள்ளது. மேக்ஸ் மார்டன் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்மணியையும் அவளது மகளையும் சந்தி த்து பழகுகிறார்.. அந்த பெண்மணி மிசஸ் கிரேஸ். அவளது மகளின் பெயர் க்ளோயி. பதின்ம பருவத்தில் எல்லா சிறுவர்களுக்கும் வருவது போல மேக்ஸ் மார்டனுக்கு மிசஸ் கிரேஸ் மீது ஒருவித பால் கவர்ச்சி வருகிறது. சிலநாட்களிலேயே அது களைந்து அவள் மகள் க்ளோயி மீது காதல் ஏற்படுகிறது. மேக்ஸ் மார்டன் சிறுவயதில் சந்தித்த அந்த இரண்டு பெண்களையும் , பால்யகால அனுபவங்களையும், அந்த இரண்டு பெண்களையும், தன் மனைவி அன்னா, மகள் க்ளேர் பற்றிய நினைவுகளையும் மாற்றி,மாற்றி அசைபோடுகிறார். கிட்டத்தட்ட தமிழில் ஆதவன் நாவல்களில் வருவது போல மனதின் உள்அடுக்குகளிலேயே நாவலின் கதை பிரயாணப்படுகிறது. ஏழ்மையான பிண்ணனியிலிருந்து வரும் மேக்ஸ் மார்டன் பணக்கார ஐரீஷ் குடும்பத்துடன் பழகும்போது அவர்களுக்குள் சமூக அந்தஸ்துகள் எப்படிபட்ட முரணையும், உறவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதையும் நாவல் நுட்பமாக சொல்கிறது. பால்யகாலத்தில் க்ளோயிடம் காதலில் விழும்போதும் சரி. மனைவி அன்னாவிடம் குடும்பம் நடத்தும்போதும் சரி. மேக்ஸ் மார்டனுக்கு இந்த பொருளாதார சமூக அந்தஸ்தை தாண்டி இயல்பாக பழகுவது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதி முழுக்க இதை உணர முடியும். நாவலின் முற்பகுதியில் மிசஸ் க்ரேஸை ஒரு சராசரி பெண்மணியாக ஜான்பான்வில் காட்டுகிறார். இதை மாக்ஸ் மார்டன் அவரது நினைவுகளை சொல்வதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டாம் பகுதியில் மிஸ்டர் க்ரேஸுக்கும் ரோஸுக்கும் இடையில் இருக்கும் காதலை மிசஸ் க்ரேஸ் மிக இயல்பாக எடுத்துக்கொள்வது சற்று குழப்பமாக இருக்கிறது. மனிதன் வயதாக வயதாக அதிகமாக பால்யகால நினைவுகளை அசைபோடுகிறான். இறக்கும் தருவாயில் பால்யகால நினைவுகளை அசைபோடுவதன் மூலம் கடந்த காலத்துக்கு சென்று ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்கிறான். காலத்தை கயிறு கட்டி பின்னுக்கு இழுத்துச் செல்வதன் மூலம் வாழ்வை நீட்டிக்க முயற்சி செய்கிறான். ஆனால் நிகழ்கால நினைவுகள் அவ்வபொழுது வந்து கடந்தகால நினைவுகளை முன்னுக்கு தள்ளி அவனை சாவுக்கு பக்கமாக தள்ளிவிடுகிறது.இந்த நாவல் முழுக்க ஒரு மனிதனின் நினைவுகள்.நினைவுகள்.நினைவுகள் மட்டுமே. மேக்ஸ் மார்டனுக்கு நினைவுகள் சோகத்தை தருகின்றன. வலியை அதிகமாக்குகிறது. அவர் நினைவுகளை உதற முயற்சிக்கிறார். முடியவில்லை. மனிதன் இறக்கும்வரை அவனது நினைவுகள் இருந்துக்கொண்டே இருக்கும். நினைவெனும் கொடுஞ்சுமையை மனிதனால் ஒருபோதும் உதறித்தள்ள முடியாது. ஒருவேளை அவன் இறந்துப்போனாலும் அவன் வேறு யாராவது உயிரோடு இருக்கும் இன்னொரு மனிதனின் நினைவுகளை வந்து நிறைப்பான்.

நாவலிலிருந்து எனக்கு பிடித்த சில சில வரிகள்:-

“இறந்தவர்களை நாம் இறக்கும்வரைதான் சுமக்கிறோம். அதன்பின் நாம் சிலகாலம் சுமக்கப்பட்டு வருவோம். பின் நம்மை சுபப்பவர்கள் அவர்களுக்கான நேரம் முடிந்து சாய்ந்தபிறகு என்னைப்பற்றிய ஞாபகத்தீற்றலே இல்லாத எண்ணத்தொலையாத தலைமுறைகள் தொடர்ந்து வரும். அன்னாவை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எங்கள் மகள் க்ளேர் அன்னாவை நினைவில் வைத்திருப்பாள். பிறகு க்ளேர் மறைந்துவிடுவாள். அப்போது அவளை நினைவில் வைத்திருப்பவர்கள்தான் இருப்பார்கள். எங்களை நினைவில் கொண்டிருப்பவர்கள் இருக்கபோவதில்லை. அதுதான் எங்களது இறுதி கரைவாக இருக்கும். எங்களுடையது ஏதாவது மிச்சம் இருக்கலாம். மங்கியிருக்கும் ஒரு புகைப்படம். ஒரு முடிக்கற்றை. சில விரல் ரேகைப் பதிவுகள், நாங்கள் இறுதி மூச்சைவிட்ட அறையில் சிதறியிருக்கும் சில அணுத்துகள்கள். ஆனால் நாங்கள் இருப்பதும் இருந்ததும் எப்போதுமே நாங்களாக இருக்க முடியாது. மரித்தவர்களின் மக்கிய புழுதிதான் கடைசியில்”


நாவல் ஆசிரியரைப் பற்றி:-

ஜான்பான்வில் ஐரீஷ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கடல் நாவல் 2005 -ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்றது. இதுவரை பதிமூன்று நாவல்களை எழுதியுள்ளார். பலமுறை புக்கர் பரிசுக்கு இவரது நாவல்கள் கதவைத்தட்டி கடைசியில் கடல் நாவல் ஜெயித்துள்ளது. சக எழுத்தாளர்கள், விமர்சகர்களோடு ஒத்துபோகாத மனநிலையிலேயே இயங்கி வரும் ஜான்பான்வில்லை தான் அயர்லாந்து சென்றபொழுது சந்திக்கவே முடியவில்லையென்று நாவலின் முன்னுரையில் ஜி.குப்புசாமி குறிப்பிடுகிறார். அவர் சொல்வது போல ஜான்பான்வில் தொட்டாற்சிணுங்கியாகத்தான் இருக்க வேண்டும். அல்லது தனிமை விரும்பி. அல்லது ஒருவித தாழ்வு மனப்பான்மையில் சக மனிதர்களிடமிருந்து துண்டித்து கொள்ள விரும்புதல். இந்நாவலின் கதாநாயகன் மேக்ஸ் மார்டனின் பாத்திரப்படைப்பு அப்படித்தான் இருக்கிறது. எது எப்படியோ
புக்கர் விருது பரிசை வென்ற இந்த நாவலை அப்படியொன்றும் பிரமாதமான நாவலென்று கண்ணை மூடியபடி சொல்ல முடியாது. தமிழில் இதே கருவில் எழுதப்பட்ட சில நாவல்கள் கடலை விட அருமையாக அமைந்துள்ளது. வேற்றுமொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டால் நமக்குள் பொதிந்து கிடைக்கும் பொக்கிஷங்களின் அருமை தெரியவருகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ லா.ச.ராவின் ‘அபிதா’ போன்ற நாவல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நோபல் பரிசு கூட கிடைக்கலாம்.

கடல் (நவீன உலக கிளாசிக் வரிசை)
ஜான் பான்வில்; தமிழில்: ஜி. குப்புசாமி;
விலை:- ரூ. 125
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் 207