(எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு சிறுகதைப்போட்டிக்காக எழுதியது... எனக்கு சிறுகதை எழுத தெரியாது..ச்சும்மா..ஒரு டிரை செய்தது)
ராக்கோழி
------------
பிரான்ஸ் தேசம் பற்றி சுவையாக விவரித்து எழுதப்பட்டிருந்தது அந்த கட்டுரை.தேவதைகள் வசிக்குமிடம் என்று முடித்திருந்தது சற்று மிகையாக தெரிந்தாலும் ரசித்து படித்தேன். கட்டுரை எழுதிய இந்த ரைட்டரை எனக்கு மிகவும் பிடிக்கும். மணியை பார்த்தேன். ஒன்பது. கணித்திரையை லாக் செய்தேன். அமெரிக்காகாரனிடம் இருந்து இன்னும் முப்பது நிமிடத்தில் போன் வரும். எப்படியெல்லாம் கத்தப்போகிறானோ? குடலை ரம்பத்தால் அறுப்பது போல இருந்தது. போன ஜென்மத்துல செஞ்ச பாவம் சாப்ட்வேர் இன்ஜினியராக பிறந்து தொலைத்து விட்டேன். சகதர்மினியிடமிருந்து எப்ப கிளம்புவீங்க என்று எஸ்.எம்.எஸ். பதில் அனுப்பவில்லை. மூன்று முறை போன் செய்து திட்டு வாங்கியவள் பேச பயந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தாள். நாய் பொழைப்பு. கீழே கேண்டினில் என்ன இருக்கும்? தோசை? நாய் கூட திங்காது. வாய்ல வைக்க முடியாத கண்றாவி. கீழே இறங்கி வந்தேன். அப்படியே அலுவலகம் வெளியே நடந்து வந்து ஒரு டீ குடித்தேன். ஒரு தம்மை பார் வைத்தேன். அடிநெஞ்சு வரை கோபத்துடன் இழுத்து கோர்வையாக வெளியே விட்டேன். புரை ஏறியது.அம்முக்குட்டி நினைத்திருப்பாள். இந்நேரம் தூங்கியிருப்பாளா? வாட்சை பார்த்தேன். அப்பா சீக்கிரம் வந்துடுவாரு என்று சொல்லி மனைவி விழிக்க வைத்திருக்கலாம். சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தன. சுட்ட பழத்தை காலில் போட்டு நசுக்கி அலுவலகம் உள்ளே நடக்க ஆரம்பித்தேன். ஆபீசா இது? இரண்டு கிலோமீட்டருக்கு கட்டியிருக்காங்க. ஒரு தம் அடிக்க கூட இரண்டு கிலோமீட்டர். என்ன வாழ்க்கை இது? அந்த ரைட்டரின் தளத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ச்சே. பிரான்ஸில் பிறந்திருக்கலாம். அடுத்த நொடியே இன்னொரு மூலை சிரித்தது. எங்க பொறந்தா என்ன? இந்தியனா பொறந்தா போற இடம் எல்லாத்துலயும் இப்படித்தான் வேலை செய்ய வேண்டும். அடுத்த ஜென்மத்துல பிரான்ஸில பிரான்ஸ் குடிமகனா பிறந்து டக்கீலா அடிக்கனும். இல்ல திருக்காட்டுப்பள்ளி கவர்மெண்ட் பள்ளிக்கூடத்துல பி.டி.மாஸ்டரா பொறக்கனும்.
க்யூபிக்கினுள் நுழைந்து கணினித்திரையை திறந்தேன் செல்போனை வைப்ரேட்டரில் வைக்கவும் அதிர ஆரம்பித்தது. வீட்டிலிருந்து போன்.இம்சை.இம்சை அலுவலக தொலைபேசிக்கு உயிர் கொடுத்தேன். Please Enter your PassCode என்றாள் முகம் தெரியாத ஆங்கில தேவதை. அடுத்த ஜென்மத்துல பிரான்ஸில பொறக்கும்போது மறக்காம இவளை கல்யாணம் செய்துக்கொள்ளவேண்டும். பாஸ்கோடை அவளே எண்டர் செய்து தருவாள். என்ன கல்யாணத்துக்கு பிறகு இன்னொரு பிரான்ஸ்காரன் இடையில் ரூட் போடாம தேவுடு காக்கனும். ஆன்சைட்ல இருக்கும் இந்திய மேனேஜேர் கத்தினார். ச்சே அடுத்த ஜென்மத்துலயாவது பிரான்ஸ்காரங்க யாராவது மேனேஜேரா வரனும். நான் அனுப்பிய டாக்குமெண்டில் ஒற்றுப்பிழை, சந்திப்பிழை,இலக்கணப்பிழை எல்லாம் கண்டுபிடித்து கத்தி முடித்தபோது மணி பத்து. சக அலுவலக நண்பன் பக்கத்து இருக்கை மேல் ஒட்டியிருந்த Rose is the Rose கண்ணில் பட்டது.
ஸேக்ஸ்பியரிடம் எநத ஆன்சைட் மேனேஜேர் கத்தினாரோ? என்ன வெறுப்புல இப்படி எழுதியிருப்பான் மனுஷன்? ஷேக்ஸ்பியர் பிரான்ஸா? அய்யோ. வளசரவாக்கத்துக்கு பத்து மணி CAB பதிவு செய்திருந்தது நினைவுக்கு வந்தது. இறங்கி ஓட ஆரம்பித்தேன்.
வெள்ளை நிற இண்டிகோ அலுவலக வாசலில் நின்றிருந்தது. டிரைவர் இருக்கை பக்கத்துல செத்த சவம் போல ஒருத்தன் அமர்ந்திருந்தான். பாவம் இவனது கவிதையில் எத்தனை ஒற்றுப்பிழை சந்திப்பிழையோ? அடுத்த முறை மேனேஜேர் கத்தினால் எத்தனை பிழை இருக்கோ அந்த அளவு சம்பளம் கொடுங்க என்று கேட்க வேண்டும். அது சரி. பிழையே இல்லாவிட்டால் கவிதைக்கு என்ன இரண்டு மடங்கு சன்மானமா கிடைக்கப்போகிறது? பின்சீட்டில் அம்ர்ந்தேன். இடதுப்பக்க சீட் காலியாக இருந்தது. ஆசுவாசமாக சாய்ந்து போன் செய்தேன்.
“கிளம்பியாச்சு” என்றேன் மனைவியிடம்.
“ஒரு மணிநேரத்துல வந்துடறேன். கதவை பூட்டிக்க. வீட்டுக்கிட்ட வந்தவுடன் மிஸ்டு கால் தர்றேன்.
அம்மு தூங்கிட்டாளா?” கேட்டேன்
“இன்னும் இல்ல. அப்பா…அப்பானு மூனு தடவை சொல்லிட்டா. அந்த மஞ்சக்கரடிய கட்டி பிடிச்சுட்டு படுத்துக்கிடக்கறா” மனைவி சொன்னாள்.
“வந்துடறேன். இன்னும் சாப்பிடல. சாம்பார் இருக்கா? சரி வச்சுடு.வந்துடறேன். ”
கடந்த இரண்டு வாரங்களாகவே அலுவலகம் முடித்து வீடு செல்ல பத்து மணிக்கு வீட்டுக்கு செல்வது வாடிக்கையாக இருக்கின்றது. யாரோ இண்டிகோவின் இடதுப்பக்க கதவை தட்டுவது போல இருந்தது. எந்த சவமோ? கதவு இறுக்கமாக பிடித்திருந்தது. திறக்க உதவினேன். சத்தியமா பிரான்ஸில இருக்கறோமா என்று சந்தேகம் வந்தது. போனி டெயில் வைத்திருந்தாள். தேங்க்யூ என்றபடி என் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். சினேகமாக என்னை பார்த்து புன்னகை செய்தது போல எனக்கு தோன்றியது. பிரமையோ?
வண்டியை எடுக்க வந்த டிரைவரை பார்த்தேன். புதுசாக இருந்தார்.
“நீங்க கிண்டியா” என்று முன்சீட்டில் இருந்தவனை கேட்டார்.
“வளசரவாக்கம்தான் கடைசியா?” என்னை பார்த்தார். நான் அவளை பார்த்தேன். வடபழனி என்று சொல்லியபடி டிரைவர் தந்த நோட்டில் கையெழுத்து போட்டாள்.
வண்டி புறப்பட்டதும் டிரைவர் எப்.எம்மை போட்டார். நான் அடிச்சா தாங்க மாட்ட கத்தியது. அந்த எழுத்தாளரின் பிளாக்கில் படித்த பிரான்ஸ் இசைகலைஞனும், டக்குமுரா கொட்டாரா வரிகளும் மனதில் ஒடியது. ச்சே இந்த பாடல் வரிகள் பிரான்ஸில் இருந்தால் எப்படி இருக்கும்? வண்டி டைடல் பார்க் முன்னால் போய்க்கொண்டிருந்தது. பேஷன் டெக்னாலஜி கல்லூரி முன்னால் பிரான்ஸ் தேச உடைகளை அணிந்தபடி இளைஞர்களும், இளைஞிகளும் அமர்ந்திருந்தனர். இந்திய பொருளாதார பிரச்சினைகள் மற்றும் பிரான்ஸ் தேச அரசியல் பேசியபடி அமர்ந்திருந்தனர்.ஆரோக்கியமான விஷயம். ஆனால் ஏன் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து காதோடு பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஏதாவது அரசாங்க சீக்ரெட்டாக இருக்கும். பக்கத்து இருக்கை தேவதை இடதுப்பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது. மூன்று வருடமாக இதே அலுவலகத்தில் வேலை செய்கின்றேன். இந்த பெண்ணை ஒருமுறை கூட பார்த்ததில்லையே. அதுசரி தினந்தோறும் பார்த்தால் அது தேவதையா? ஒருக்கணம் மனைவி நினைவு வந்து மறந்தது. அம்முக்குட்டி தூங்கியிருப்பாளா?
இடதுப்பக்கம் பார்த்தேன். சாலையோர பிளாட்பாரத்தில் மனிதர்கள் படுத்து கிடந்தார்கள் தலைக்கு வானத்தை கூரையாக வைத்து. ஆறு வயது குழந்தையொன்று தலைக்கு இரண்டு செங்கல்லை முட்டு வைத்து படுத்து இருந்தது. கரடி பொம்மை இல்லாட்டி படுக்கமாட்டேன் போ என்று சொல்லும் அம்முக்குட்டி முகம் வந்து போனது. பிரான்ஸில சாலையோர மனிதர்கள் இருப்பார்கள்? இதுபோல செங்கல்லை முட்டு வைத்து தூங்கும் மனிதர்கள் இருப்பார்கள்? ச்சே.. இருக்காது. அந்த ரைட்டர் பிரான்ஸ் சொர்ர்க்கமென்று அவரது தளத்தில் எழுதியிருந்தாரே. அவரு பொய் சொல்ல மாட்டார். மணியை பார்த்தேன். பத்து முப்பது. கிண்டியில் முன் இருக்கையில் இருந்த சவம் இறங்கியது.
கிண்டி தாண்டும்போது சாலையோர விளக்கு கம்பங்களின் வெளிச்சம் பின் சீட்டில் விழ லேசாக நாசூக்காக அவளை பார்த்தேன். த்ரிஷாவா, நயனா என்று மனது பட்டிமன்றம் நடத்தியது. வெளியே டாஸ்மாக் கடைகள் இன்னும் திறந்திருந்தன. ரோட்டிலேயே நின்று குடித்தபடி ஆபாசமாக கத்திக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் கொஞ்சம் மிரண்டிருந்தது போல எனக்கு தோன்றியது. பிரான்ஸ் போல நல்ல தேசத்தை எங்கு தேடினாலும் கிடைக்காது. அங்கு எல்லாம் ரெட் ஒயின், வொயிட் ஒயின்தான் சாப்பிடுவார்கள். இதுபோல கட்டிங் அடித்து ரோட்டில் படுத்து கிடக்க மாட்டார்கள்.
டிரைவரை பார்த்தேன். சலனமற்று இருந்தது. கண்கள் சிவந்திருந்தன. வெளியே ஜகன்மோகினி போஸ்டரில் நமீதா அடுப்புக்குள் கால்களை விட்டிருப்பதை பார்த்தபடி வண்டி ஓட்டிகொண்டிருந்தார். நான் பார்ப்பதை கண்ணாடி வழியாக டிரைவர் கவனித்திருக்கக்கூடும். இந்த டிரைவரை இப்போதுதான் புதிதாக பார்க்கின்றேன்.
“போரூர் வழியா போலாமா சர்? உங்கள வளசரவாக்கத்துல வுட்டுட்டு இவங்கள வடபழனில டிராப் பண்ணிடறேன். போரூர் பக்கம் ட்ராபிக் இருக்காது. “ டிரைவர் கேட்டார்.டிரைவர் பேச்சில் கொஞ்சம் தெலுங்கு வாடை வீசியது.
வாகன வெளிச்சம் பட்டு சாலையின் இருபக்கமும் cat’s eye மின்னியது. வெறிப்பிடித்த பூனையின் கண்கள் போல சிவப்பாய் இருந்தன
அந்த பெண்ணை ஒருக்கணம் திரும்பி பார்த்தேன். அவள் கண்களில் ஏதோ பயம் தெரிந்தது போல உணர்ந்தேன். வண்டி கத்திப்பாரா ஜங்க்ஷனை தொட்டது.
“இல்ல நீங்க வடபழனி வழியாவே போங்க.” சொன்னேன்
“இல்ல சார் அது சுத்து.லேட்டாகும். “உங்கள முதல்ல டிராப் பண்ணிட்டு இவங்கள வடபழனில வுட்டுடறேன்” “ டிரைவர் சொன்னார்.
அவள் பதற்றமாக இருப்பது போல எனக்கு தெரிந்தது.எனக்கு பி.பி ஏறியது. “வடபழனி வழியாவே போங்க. நான் இன்னும் சாப்பிடல. ஏதாவது வாங்கிட்டு வீட்டுக்கு போகனும். போரூர்ல இந்நேரத்துக்கு மாட்டுக்கறி பிரியாணிதான் கிடைக்கும்.” கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னேன் என்று சொல்வதை விட கத்தினேன் என்று சொல்ல வேண்டும். டிரைவர் எதுவும் பேசவில்லை. மெளனமாக ஒட்ட ஆரம்பித்தார்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் வண்டி ஏறி வளைந்து இறங்கி ஏறி அமர்க்களமாக இருந்தது. வண்ணத்துப்பூச்சி முதுகில் ஏறி பார்ப்பது போல இருந்தது. கத்திப்பாரா மேம்பாலத்தில் பயணிக்கும்போது வண்டியின் இடது வலது எந்த புறம் அம்ர்ந்திருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் நிலா பார்க்க முடிந்தது.பிரான்சில நிலா சத்தியமாக இதை விட இன்னும் அழகாக இருக்கும்.
வடபழனியில் அவள் வீடு அருகே இறங்கிக்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டுக்குள் செல்வது தெரிந்தது. என்ன அவசரமோ?
வண்டி விருகம்பாக்கம் தாண்டியது.
“ஹோட்டல்ல நிப்பாட்டவா?” டிரைவர் கேட்டார்.
“வேண்டாம் பசிக்கல. வளசரவாக்கத்துல நிப்பாட்டுங்க” சொன்னேன். டிரைவர் என்னை விநோதமாக ஒரு வினாடி திரும்பி பார்த்து மீண்டும் ஒட்ட ஆரம்பித்தார்.
வளசரவாக்கம் நெருங்கும்போது மிஸ்டு கால் தந்தேன். அபூர்வமாக ஒரு வீட்டின் வாசலில் கோலம் போட்டு சாணியில் பிள்ளையார் பிடித்து செம்பருத்தி பூவை நட்டு வைத்திருந்தார்கள். மார்கழி மாத கோலம் அழகாகவே இருந்தது. சாலையில் இரண்டு மூன்று நாய்கள் அநியாயம் செய்துக்கொண்டிருந்தன. பிரான்ஸில் நாய்கள் இதுபோல சாலையில் அநியாயம் செய்யுமா என்று தெரியவில்லை. ரைட்டரிடம் மின்னஞ்சல் அனுப்பி கேட்க வேண்டும். மனைவி கவலையுடன் கேட்டின் அருகே நிற்பது தெரிந்தது. வீட்டினுள் நுழைந்தபோது அம்மு உறங்கி இருந்தாள். மணி பதினொன்று. மனைவி அடுப்படிக்குள் நுழைந்தாள்.
முகம் கழுவும்போது அந்தப்பெண் அவசர அவசரமாக வீட்டுக்குள் சென்றது மனதில் ஓடியது. என்ன அவசரமோ? ச்சே..அடுத்த ஜென்மத்துல பிரான்ஸ்ல பொறக்கனும்.
if time permits படிச்சுட்டு சொல்றன் விநாயக் :)
ReplyDeleteநல்லா இருக்கு தலைவரே.. இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணியிருக்கலாம்..
ReplyDeleteஅருமை விநாயக முருகன்
ReplyDeleteநடையும் ஒரு தெளிந்த நீரோடையாக , அழகான் விவரிப்பு, சுஜாதாவின் சாயல் ஆங்காங்கே ,
எனக்கு பிடித்திருந்தது
நன்றி விநாயகமுருகன்
ஜேகே