தெளிவு
———————
ஒரு பள்ளிக்கூடத்தின் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
சில செளகரியங்கள் உள்ளன
மகனையோ,மகளையோ சுமந்து
ஆயாசமாய் திரும்பும்
தகப்பன்மார்கள் சற்று இளைப்பாறலாம்
ஒரு கோவிலின் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
சில செளகரியங்கள் உள்ளன
தத்துவ, வேதாந்த விசாரங்களில்
களைத்து முடியும்,அடியும்
காண முடியாத பக்தர்களுக்கு
கொஞ்சம் கடவுள் தெரியலாம்
ஒரு சினிமா தியேட்டர் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
சில செளகரியங்கள் உள்ளன
தலைவலியுடன் திரும்புகிறவர்கள்
ஒரு கட்டிங் அடித்துவிட்டு
இயக்குநரையோ,கதாநாயகனையோ
தீட்டி தீர்த்து விட்டு போகலாம்
ஒரு மருத்துவமனை பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
சில செளகரியங்கள் உள்ளன
பிணவறைகளை காவல் காக்கும்
இரவு காவலர்களுக்கு தேவைப்படலாம்
ஆயிரம் பேரை கொன்றவர்கள்
பிழைத்த ஒருவனுக்காக கொண்டாடலாம்
ஒரு பேருந்து நிறுத்தம் பக்கத்தில்
டாஸ்மாக் கடை இருப்பதில்
சில செளகரியங்கள் உள்ளன
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாவென்று
குதிக்கும் கணவன்மார்கள்
களித்து திரும்பலாம்
ஒரு டாஸ்மாக் கடை பக்கத்தில்
இன்னொரு டாஸ்மாக் கடை
இருக்கக்கூடாது என்பதில் மட்டும்
தெளிவாகவே இருக்கிறார்கள்
காரணமும் சொல்கிறார்கள்
ஒரு பள்ளிக்கூடம்
ஒரு கோவில்
ஒரு சினிமா தியேட்டர்
ஒரு மருத்துவமனை
ஒரு பேருந்து நிறுத்தம்
போலில்லையாம் ஒரு டாஸ்மாக் கடை
எப்படிங்கண்ணா இப்படியெல்லாம் :-)
ReplyDeleteம். நல்லாயிருக்குங்க.
ReplyDeletenalla irukkunga..tasmac aalunga yaravadhu padicha nalla irukkum...
ReplyDelete