Friday, December 4, 2009

நான்கு கவிதைகள்

ரயில் விளையாட்டு - 1
———————————————————————

அலுவலகத்துக்கு தாமதமாக
வ‌ந்த சகஊழியர்
சற்றுமுன் பார்த்த
ரயில் விபத்தை விவரித்தார்
முகம் நசுங்கிப்போன
மனிதனுக்காக பரிதாபப்பட்டார்.

அடு‌த்த ஊழியர்
அவர் கிராமத்தில் பார்த்த
தற்கொலையை சொன்னார்
தலை தனியாக கிடந்ததாம்

அலுவலக மேலாளர்
அவரது அப்பா
ஓடும் ரயிலிலிருந்து
தவறி விழுந்து
இறந்துப்போனதாக சொன்னார்

அடு‌த்த அரைமணி நேரத்துக்கு
ஆளாளுக்கு ரயில்கள் ஓட்டினா‌‌‌ர்கள்
ஆறாவது மாடியெங்கும்
அடிப்பட்டவர்களின் கை,கால்கள்
சிதறி துடித்தன


ரயில் விளையாட்டு - 2
———————————————————————

வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து ‌விளையா‌ட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்

(ரயில் விளையாட்டு - 2 ஏற்கனவே வார்ப்பு.காம் மின்னிதழில் வெளியானது)


சில அறிவிப்புகள்
————————————————
நாலு வாரங்களில் சிவப்பழகு
விளம்பரம் கீழே

ஆறே வாரங்களில்
தொப்பை குறைய
இன்னொரு விளம்பரம் இருந்தது

பக்கத்தில் மூன்று வாரத்தில்
யோகா பயிற்சியென்று
அடுத்த அறிவிப்பு

இன்னும் பல…
எட்டு வாரத்தில் குழந்தை பிறக்க
ஏழு வாரத்தில் கணிப்பொறி
ஐந்து வாரத்தில் நீச்சல்
ஒருவாரத்தில் ஆங்கிலம்

எப்படி கூட்டினாலும்
வருடத்துக்கு இரண்டை
விட்டு வைத்திருந்தார்கள்
என்ன திட்டமோ?



மழையளவு
——————————
வானிலைசெய்தி வாசிக்கும் பெண்
அடுக்கிக்கொண்டே போனா‌‌‌ள்.
திருநெல்வேலியில் ஆறு செண்டிமீட்டர்
கு‌ற்றால‌த்‌தி‌ல் ஐந்து செண்டிமீட்டர்
விழுப்புரத்தில் பத்து செண்டிமீட்டர்
நுங்கம்பாக்கத்தில் ஆறு செண்டிமீட்டர்
வாசலில் எட்டி பார்த்தேன்.
கூரையிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளை
கையில் பிடித்து தரையில் கொட்டுகின்றாள்.
எதிர் வீட்டுச் சிறுமி.
தவறுக்கு மன்னிக்கவும்…
நுங்கம்பாக்கத்தில் ஆறரை செண்டிமீட்டர்
தொலைக்காட்சிப்பெண் சிரிக்கின்றாள்.

6 comments:

  1. ரயில் விளையாட்டு நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  2. 2வது ஏற்கனவே படித்து வியந்துதான்.. ரயில் விளையாட்டு எனக்கும் பிடித்தது

    ReplyDelete
  3. எல்லாம் ஏ-ஒன் கவிதைகள், நண்பா!

    -கேயார்

    ReplyDelete
  4. நன்றி நந்தா
    நன்றி நண்பா
    நன்றி அசோக்
    நன்றி கேயார்

    ReplyDelete
  5. வாவ், எல்லாமே அசத்தல். ரயில் விளையாட்டுடன் மழையளவும் பிடித்தது. கொஞ்சம் முகுந்த் நாகராஜன் ஞாபகம் வருகிறது. ரொம்ப நல்லா எழுதுகிறீர்கள்

    அனுஜன்யா

    ReplyDelete