Monday, October 4, 2010

சாமுத்ரிகா - உயிரோசை சிறுகதை


இந்த வார உயிரோசையில் வெளியான எனது சாமுத்ரிகா என்ற சிறுகதை வாசிக்க...


காசி தியேட்டரில் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டுகொண்டேன். அவராக இருக்குமோ? என்ற கணநேர தயக்கம் கூட எழவில்லை. பத்துவருட இடைவெளியில் மாமாவின் உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. முன் நெற்றி மட்டும் சற்று ஏறி வழுக்கையைக் காட்டியது. முகத்தில் லேசான சுருக்கங்கள். அன்று பார்த்தது போலவே இன்றும் காதோரம் டை அடித்திருப்பார் என்று யூகிக்க முடிந்தது. காபி சாப்பிட்டபடியே ஸ்ரேயா ஸ்டில்களை ரசித்துக் கொண்டிருந்தார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவரை என்னால் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததற்கு காரணம் அவரது சில்க் சட்டையோ, தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டியோ,கழுத்தில் சட்டை காலரில் அழுக்குப் படாமல் இருக்க கட்டியிருந்த கர்ச்சிப்போ இல்லை. தியேட்டரில் கண்ணாடிப் பெட்டியில் ‘கந்தசாமி’ பட எழுத்துகளுக்கு நாயகி ஸ்ரேயா நின்றிருந்த போஸ். அதை விழுங்கி விடுவது போல பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி மாமாவின் பார்வை. அவரால் மட்டுமே இப்படி உலகத்தில் இருபத்திநாலு மணிநேரமும் பெண்களைப் பற்றியே பேசிக்கொண்டும், ரசித்துக்கொண்டும் இருக்க முடியும்.

ஸ்ரேயா ஸ்டில்களை மறைக்கும்படி அவருக்கு முன்னால் நின்று அவரைப் புன்சிரிப்போடு பார்த்தேன். ஸ்டில்களிலிருந்து கவனம் கலையப்பெற்றவராய், கிருஷ்ணமூர்த்தி மாமா என்னைக் குழப்பமாகப் பார்க்க நான் சிரித்தேன். என் கண்களை ஒருகணம் உற்றுப் பார்த்தார்.

"என்னைத் தெரியலையா மாமா? நான் பாஸ்கி. கும்பகோணம். சாரங்கபாணி கோயில்..."

"டேய்..திருட்டுப் பயலே..முட்டைக்கண்ணா... எப்படியிருக்கடா?"

சந்தோஷத்துடன் கத்தியபடியே வயிற்றில் குத்தியபடி கட்டிப்பிடிக்க, நாலைந்து பேர் எங்களைக் கவனித்துவிட்டு, பிறகு சமோசா சாப்பிடுவதைத் தொடர்ந்தார்கள். என் கைகளைப் பற்றி குலுக்கக் கையெல்லாம் மரிக்கொழுந்து வாசம் ஏறியது.எனக்கு சங்கோஜமாக இருந்தது. மாமா இப்படித்தான். எப்போது பேசினாலும் எட்டூருக்குக் கேட்கும் சத்தத்தில் பேசுவார். வலது காலைத் தரையில் ஊன்றியபடி, இடது காலைப் பின்னாலிருந்த தூணில் சாய்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இருவரும் காபி சாப்பிட்டபடியே பரஸ்பரம் விசாரிப்புகள், நிறைய நினைவூட்டல்கள். பரஸ்பரம் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டோம். பேச்சினூடே அவரது கண்கள் முதுகுக்குப் பின்னால் கண்ணாடிப் பெட்டியிலிருந்த ஸ்ரேயா ஸ்டில்கள் மீது அடிக்கடி சென்று வருவதைப் பார்க்க முடிந்தது.

மாமா சிரித்தபடியே, "செமையா இருக்காடா.இடுப்பா அது? பவர் ஸ்டியரிங் போல லட்சணமா இருக்கு.சாமுத்ரிகா லட்சணப்படி" என்றார்.

"என்ன மாமா..இன்னும் உங்க ஆராய்ச்சி முடியலையா? " சிரித்தபடியே கேட்டேன்.

தியேட்டரில் காலைக்காட்சிக்குக் கூட்டம் அவ்வளவாக இல்லை. வெளியே மழை நசநசவென பெய்துகொண்டிருந்தது. தியேட்டர் மாடியிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கச் சாலையில் மழைத்துளிகள் இறங்குவது தெரிந்தது. சாலையில் சில மனிதர்கள் விரித்த குடைகளைப் பிடித்தபடி சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் முகம்,உடல் தெரியவில்லை. சாலையில் குடைகள் நகர்ந்து செல்வது பெரிய சைஸ் ஆமை ஓடுகள் நகர்ந்து செல்வது போல இருந்தது. காலையிலிருந்து விடாமல் தூறிக்கொண்டிருக்கும் மழையின் காரணமாக இன்றைய தினம் மகா சோம்பலுமாய், அலுப்புமாய் இருந்தது. அலுவலகம் செல்லவில்லை. ரூமில் தனியாக இருப்பது போரடிக்க, பக்கத்திலிருந்த தியேட்டரில் காலைக்காட்சிக்கு கிளம்பி வந்து விட்டேன். சினிமா இடைவெளியில் வெளியில் வந்த என் கண்களில் கிருஷ்ணமூர்த்தி மாமா தெரிந்தார். தியேட்டரில் இடைவேளை பெல் ஒலிக்க, உள்ளே நுழைந்தோம். எனது இருக்கை பி-3. மாமா டி-5ல் அமர்ந்திருந்தார். தியேட்டரில் கூட்டம் இல்லாததால் நிறைய சீட்கள் காலியாகவே இருந்தன. நான் மாமா பக்கத்து சீட் காலியாகவே இருந்தது. அவரது சீட் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்.

"இன்னுமா கல்யாணம் பண்ணாம இருக்கே?" மாமா என்னைப் பார்த்துக் கேட்டார்.

"வீட்டுல பார்த்திக்கிட்டு இருக்காங்க மாமா. திருச்சியிலருந்து நேற்றுக்கூட ஒரு வரன் வந்துச்சு. முடிஞ்சுடுமுனு நினைக்கிறேன்" சொன்னேன்.

"சென்னைல எங்க மாமா இருக்கறீங்க?"

"போரூர்" என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு மாமா அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஸ்ரேயா அபாயகரமாய் ஆடை அணிந்து ஆடிக்கொண்டிருக்க, மாமா வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பது தியேட்டர் இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த சென்னை நகரம் விசித்திரமானது. ஒரே ஊரிலிருந்து சென்னைக்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளோம். இதே சென்னையில் நானும் மாமாவும் பத்து வருடங்களாக வசித்து வருகிறோம். இதுவரை ஒருவர் கண்ணில் ஒருவர் தென்பட்டதில்லை. இவ்வளவுக்கும் போரூருக்கும், ஜாபர்கான்பேட்டைக்கும் பத்து கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நிகழும் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.

திரையில் விக்ரம் பத்துப் பதினைந்து ஆட்களை சேவல் வேடம் போட்டு அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்.மாமா அசுவாரசியமாக கொட்டாவி விட்டார். ஸ்ரேயா வந்த காட்சிகளில் இருந்த மலர்ச்சி முகத்தில் இல்லை. பெண்களைப் பற்றியும், அந்த மாதிரி சப்ஜெக்ட்டிலும் மாமாவுக்கு பி.எச்.டி. பட்டம் கொடுக்கலாம்.அந்தளவுக்கு அவருக்கு விஷயம் தெரியும். அந்தக் காலத்தில் அரண்மனைகளில் பெரிய,பெரிய ஓவியர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று கதைகளில் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் பெண்ணின் தலைமுடியையோ,நகத்தையோ வைத்தே அவளது முழு உருவத்தை வரையும் ஆற்றல் கொண்டவர்கள் என்றும் படித்திருப்பீர்கள். காலப்போக்கில் அந்த ஆற்றலுடைய ஓவியர்கள் படிப்படியாக மறைந்து அதுபோன்றதொரு கலை முற்றிலும் அழிந்திருக்கலாம். ஆனால் மாமாவைப் பார்க்கும் போதெல்லாம் அது முற்றிலும் அழியவில்லை என்றே நினைக்கத்தோன்றும். மாமாவை வுமனைசர் என்று சொல்ல முடியாது. ஆனால் பெண்களின் சகலமும் அவருக்கு அத்துபடி. சாமுத்ரிகா லட்சணம் என்ற கலையை கரைத்துக் குடித்தவர் மாமா. ஒரு பெண்ணின் முகத்தையோ,முகத்தில் இருக்கும் மூக்கையோ, நெற்றிமேட்டையோ, கன்னத்தில் விழும் குழியையோ அவ்வளவு ஏன் அவள் நடையையோ, கால் கட்டைவிரலை வைத்தோ கூட அவள் முழு ஜாதகத்தையும் சொல்லிவிடுவார். உச்சபட்ச ஆச்சர்யமாக அந்தப் பெண்ணின் பெயரையோ கூட சொல்லி விடுவார். நம்புங்கள். உண்மை. பெரும்பாலும் அது சரியாகவே பொருந்தும்.

எனது பள்ளி நண்பர்களுடன் தேநீர்க்கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன். மாமா சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வருவார். ஒரு ‘டீ சொல்லுடா’ என்று என்னை அதட்டிவிட்டு பெஞ்சில் அமர்வார். தேநீர் அருந்திக் கொண்டிருப்போம். ஏதாவது ஒரு பெண் தேநீர்க்கடையை கடந்து செல்வாள். அவள் முகம் கூட பார்த்திருக்கமாட்டார். அப்படி எதைத்தான் பார்த்துச் சொல்வாரோ? அவள் பெயர் மலரில் ஆரம்பிக்கும். அநேகமாக அவள் வீட்டிற்குப் கடைசிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்வார். விசாரித்தால் அந்தப் பெண் பெயர் மல்லிகாவாக இருக்கும். சொன்னது போலவே அந்தப் பெண் வீட்டிற்கு கடைசிப்பெண்ணாக இருப்பாள். குத்துமதிப்பாக அடித்து விடுகிறாரோ என்று கூட ஆச்சர்யமாக இருக்கும். பெண்களை எப்படிக் கவர்வது என்று டிப்ஸ் தருவார். என்னடா நாற்பது வயதில் இப்படி பள்ளிக்கூட பசங்களிடம் போய் சகவாசம் வைத்துக் கொள்கிறோமே. அதுவும் அந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பேசுகிறோமே என்று துளிக்கூட மாமாவிடம் அசூயை இருந்ததில்லை.

"காமசூத்ராவில் இருக்கும் கஷ்டமான போஸ் எது தெரியுமா?" எங்களைப் பார்த்துக் கேட்பார்

"இது என்ன குவிஸ் புரோகிராம் மாதிரி கேட்கிறார்?" எனக்குக் கடுப்பாக வரும். ஆனாலும் அது என்ன போஸ் என்று தெரிந்து கொள்ள ரகசியமாக ஆசை இருக்கும். மாமா எங்களை அற்பமாகப் பார்த்து சிரித்தபடியே விளக்க ஆரம்பிப்பார். டீக்கடை வைத்திருக்கும் மாணிக்கம் திட்டுவார்.

"ஏலே அறிவிருக்கா? சின்னப் பசங்கட்ட பேசுற பேச்சா?" கத்துவார்.

"போடா அறிவுகெட்டவனே.இதைவிட உலகத்துல உருப்படியான விஷயம் என்ன இருக்கு? ஏதோ நமக்குத் தெரிஞ்ச அனுபவத்தை சொல்லித்தரோம். பின்னால இவனுங்களுக்கு உதவுமில்லை."

டீக்கடை மாணிக்கத்தைப் பார்த்து மாமா சொல்வார்.

"நீ வூட்டுல உன் பொண்டாட்டிகிட்ட செய்யாததையா நான் சொல்லித் தரேன். மாமா கேட்க, ஏண்டா இவரிடம் வாயைக்கொடுத்தோம் என்றிருக்கும் டீக்கடை மாணிக்கத்துக்கு.

சபை கலையும் நேரத்தில் மாமா டீக்கடைப் பக்கத்தில் இருக்கும் பூக்கடையில் குண்டுமல்லி ஒரு முழம் வாங்கிக் கொள்வார். டீக்கடையில் காராசேவு பொட்டலமும் வாங்கிக் கொள்வார். உற்சாகமாக சைக்கிளை மிதித்தபடி வீட்டுக்குச் செல்வார். மாமா தலை மறைந்ததும் டீக்கடை மாணிக்கம் எங்களைப் பார்த்து ஒரு மாதிரி சிரிப்பார். "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்" என்று சொல்லிவிட்டு விஷமத்தோடு சிரிப்பார். டீக்கடை மாணிக்கம் சொல்வதன் அர்த்தம் வெகுநாள் வரை எனக்குப் புரியவேயில்லை. ஏதோ அறுக்க..ஆயிரத்தெட்டு என்று ரைமிங்காகச் சொல்வது மட்டுமே சுவாரசியமாக இருக்கும். அடுத்த நாள் மாலை மீண்டும் டீக்கடையில் சபை கூடும். மாமா கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் முதல் நாள் அவர் வீட்டில் நடந்த விஷயங்களைச் சொல்வார். எல்லாமே பச்சை,பச்சையாக இருக்கும். டீக்கடை மாணிக்கம் தலையில் அடித்துக்கொள்வான். நாளடைவில் எனது பள்ளிக்கூட நண்பர்கள் மாமாவை ஒரு குரு ஸ்தானத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். மாமா தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் நாளுக்கு,நாளுக்கு விரிவடைந்து கொண்டே போனது.

படம் முடிந்து வெளியே வந்தோம். வெளியே மழைத் தூறலாக பெய்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் இரண்டு பக்கமும் தண்ணீர் வழிந்து சென்று கொண்டிருந்தது. காசி தியேட்டர் எதிரே இருந்த சிக்னல் மந்தமாய் இயங்கியது. ஓரிரு டூவீலர் ஓட்டுநர்கள் மட்டுமே மழையில் நனைந்து சென்று கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் டூவீலர்களை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைகளின் முன் ஒதுங்கியிருந்தார்கள். சிலர் சாலையோரத் தேநீர்கடைகளில் நின்று டீக்குடித்து கொண்டிருந்தார்கள். எனக்கு சாரலுக்கு இதமாக தம்மடிக்க வேண்டும் போல இருந்தது. மிதமாய் பசியெடுத்தது. மாமா ஏதாவது சாப்பிட்டுப் போகலாமென்று சொன்னார். திரையரங்கு பக்கத்திலேயே சரவணபவன் இருந்தது. நுழைந்தோம். மாமா அவருக்கு மசால் தோசை ஆர்டர் சொல்ல, நான் புரோட்டா சொன்னேன். ஹோட்டலில் ஆட்கள் மந்தமாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். மழை வந்தால் மனிதர்கள் ஏன் சற்று மந்தமாய் மாறுகிறார்கள் என்று யோசித்தேன். இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் தேர்ச்சக்கரம் சற்று வேகம் குறைந்திருப்பதைப் பார்க்க அழகாக இருந்தது.

எங்கள் எதிரே நாலு டேபிள்கள் தள்ளி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் தலைமுடி காற்றில் அலை அலையாக பறந்து கொண்டிருந்தது. முடியை மிக நேர்த்தியாக, அதிக சிரத்தையுடன் ஸ்ட்ரெயிட் பண்ணியிருப்பாள் என்று தோன்றியது.அவள் நிமிடத்திற்குப் பத்து முறை நெற்றியில் விழும் தலைமுடியை இடது கையால் ஒதுக்கிவிடுவது பார்க்க அழகாக இருந்தது. அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு பெண் அவளது தோழியாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ இருக்கலாம். அவளும் அழகாக இருந்தாள். இரண்டு பேரில் யார் பேரழகி என்று போட்டியே வைக்கலாம். மாமா இரண்டு பேரையுமே ரசித்துக்கொண்டிருந்தார்

மாமா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. கோரை முடி குடி கெடுக்கும். சுருட்டை முடி வாழவைக்கும். கூடவே சங்கு மாதிரி கழுத்திருக்கும் பெண்களைக் கல்யாணம் செய்தால் யோகம் அடிக்கும் என்பார். நீளமான மூக்கிருந்தால் செல்வம் நிறைய இருக்கும் என்பார். எனக்குக் குழப்பமாக இருக்கும்.எங்கள் தெரு முனையில் சதா சர்வநேரமும் ‘பசிக்குது...பசிக்குது’ என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெண்ணின் மூக்கு கூட நீளமாக இருப்பதாக பட்டது. ஒருநாள் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு என்ன தோன்றியதோ அன்றிலிருந்து என்னிடம் பிச்சை கூட கேட்பதில்லை.

நான் கல்லூரி சேர்ந்திருந்தபோது மாமா முன்பை விட மோசமானவராக மாறியிருந்தார். எப்போது பார்த்தாலும் செக்ஸ் ஜோக்குகள், இரட்டை அர்த்த வசனங்கள். அத்தை வீட்டில் இல்லாதபோது பீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு என்னையும், என் நண்பர்களையும் வீட்டுக்கு அழைப்பார். மொட்டை மாடியில் அவருடன் பீர் அடித்தபடி ஊர்க்கதைகள் பேசுவோம். பலான படம் பார்க்கச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கி திரும்பிய பி.டி வாத்தியாரைப் பற்றி சிரிக்க, சிரிக்க, பேசுவோம். எங்கள் ஸ்கூல் பிசிக்ஸ் வாத்தியார் தன்னிடம் டியூசன் படிக்க வந்த பெண்ணை தஞ்சாவூர் அழைத்துச் சென்று சினிமா பார்த்து திரும்பியது. எல்லாரும் சிரிக்க, சிரிக்க மற்றவர்கள் அந்தரங்களை வம்புக்கிழுத்து ரசித்துக் கொண்டிருப்போம். பேச்சின் இறுதியில் எப்படியாவது அவரது ஆராய்ச்சியைக் கொண்டுவந்துவிடுவார். மாமா எங்களிடம் சமர்ப்பிக்கும் அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகளும், நுண்மையான தகவல்களும் பெருகி கொண்டே சென்றது. மூக்கு நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலியாக இருப்பார்கள் என்பார். எலி மூக்கு போல லேசாகத் தூக்கி இருந்தால் "அந்த" விசயத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என்பார். என் நண்பர்கள் வாயைப் பிளந்துகொண்டு கேட்பார்கள்.

"சாமுத்ரிகா லட்சணம் என்ன சொல்லுதுன்னா கால் சுண்டு வெரலு தரையில படணும். தரையில படாம தூக்கிட்டு நின்னா அவ குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டா. அப்புறம் கால் கட்டைவெரலு வளைஞ்சிருந்தா அவளுக்கு ரெண்டு புருஷன் இருப்பாங்க..." மாமா சொல்வதை என் நண்பர்கள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"காலு இல்லாத பொண்ணுங்கள பத்தி உங்க சாமுத்திரிகா லட்சணம் என்ன சொல்லுதாம்?" நான் கிண்டலாய்க் கேட்பேன்.மாமாவுக்கு சுள்ளென்று கோபம் வரும்.

"நீ சின்ன பையன்டா. மீசை கூட மொளைக்கலை. இதெல்லாம் ஆயிரம் ஆயிரம் வருசமா அனுபவித்து எழுதுனது. உனக்குப் புரியாதுடா.நீ இப்பதான் பால்குடியை மறந்திருப்பே." மாமா சிரித்தபடியே சொல்வார். நண்பர்களும் ஆரவாரமாக மாமாவுடன் சேர்ந்துகொண்டு சிரிப்பார்கள்.

மாமாவுக்கு எப்படிப் பேசி எதிராளியை அடித்து வீழ்த்துவது என்பது நன்றாகவே தெரியும். மீசை முளைக்காத முகத்தைக் கிண்டல் செய்தால் அதன் மூலம் என் சுயத்தைக் காயப்படுத்தி என்னைத் தோற்கடித்துவிடலாம் என்பது அவருக்குத் தெரியும். என்னுடைய மற்ற நண்பர்கள் மாமாவுடன் சேர்ந்துக்கொண்டு சிரிப்பதன் காரணம் அவர்கள் மீசை முளைக்காத லிஸ்ட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டேயாக வேண்டும் என்ற வேட்கையில் இருந்திருக்கலாம். மாமாவின் கட்சியில் சேர்ந்து அதன் மூலம் தாங்களும் பெண்கள் குறித்த அனைத்து விஷய ஞானங்களும் நிரம்பியவர்கள் என்று காட்ட விரும்பியிருக்கலாம். எனக்கு எரிச்சலாக வரும். மாமாவை ஒருமுறை கூட என்னால் பேசி ஜெயிக்க முடிந்ததில்லை. "இந்த ஆராய்ச்சியெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். எவனோ பைத்தியக்காரன் அந்தக் காலத்துல எழுதியிருக்கணும். இதை எழுதினவன் நிச்சயம் செக்சுவல் பெர்வெர்ட்டாகதான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் மனதின் இன்னொரு மூலை ரகசியமாக மாமா சொன்னதை ரசிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தூண்டும். குறிப்பாகத் தனிமையில் இருக்கும்போது பெண்களைப் பற்றி மனதில் கிளர்ச்சி எழும்போது அவர் சொன்ன அனுபவங்களும், கதைகளும் மண்டைக்குள் இடைவிடாது மோதிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கு காலில் நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒட்டியிருந்தால் பணம் கொட்டுமென்பார் மாமா. இப்போதும் நகரப் பேருந்திகளிலோ, சினிமா தியேட்டர்களிலோ, சாலை நடைபாதைகளிலோ நடந்துபோகும் பெண்களை எல்லாம் பார்க்கும்போதும் அவர்களது கால் பக்கம் என் கண்கள் ரகசியமாக செல்லும். நாளடைவில் ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது. மாமாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரது பேச்சை எதிர்க்கவேண்டும் என்று ஏனோ நான் விரும்புகிறேன். அவர் இல்லாத நேரங்களில் அவர் சொன்ன வித்தைகளையும், ஆராய்ச்சிகளையும் பற்றியுமே அதிக நேரம் நான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை.

மாமாவைப் பார்த்தேன். மாமா உற்சாகமாய் காபியை டம்ளருக்கும், டபராவுக்குமாய் மாற்றிக் கொண்டிருந்தார். எதிரே சாலையில் சிக்னலுக்குக் காத்திருந்த ஏஸி.பஸ்ஸை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மழைத்துளிகள் பேருந்தின் மீதிருந்து வழிந்து கொண்டிருந்தன. மழைக்காலத்திலும் ஏ.ஸி பஸ்களில் பயணம் செய்கிறவர்களைப் பார்க்க வினோதமாக இருந்தது. மாமா என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். அவர் பார்வை என்னிடம் "அந்த இரண்டு பெண்களைப் பார்த்தியா? அவர்களது ஜாதகமே என் கையில்." என்பது போல இருந்தது. அந்த பெண்களைப் பற்றி இப்போது எதையாவது அளந்துவிட போகின்றார் என்று பட்டது. நான் மறுத்துப் பேசினால் அவர் ஏடாகூடமாக ஏதாவது சொல்லுவார். அல்லது என்னை கிண்டல் செய்து என் வாயை எப்படியும் அடைத்துவிடுவார். மாமா எதிர்ப்புறம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜீன்ஸ் போட்ட பெண்ணை விழுங்கி விடுவது போல பார்த்தபடியே காபி குடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் முடியை சுருள்,சுருளாக கர்லிங் செய்திருந்தாள். எனக்குச் சிரிப்பாக வந்தது. "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்." டீக்கடைக்காரன் சொல்லும் வாக்கியம் நினைவுக்கு வந்தது. மாமாவைப் பார்த்தேன்.

நான் தஞ்சாவூர் கல்லூரியில் படிக்கும் போதுதான் அது நடந்தது. நன்றாக நினைவுள்ளது. கடைசி செமஸ்டருக்காகத் தஞ்சாவூரிலேயே ரூம் எடுத்து கல்லூரி நண்பர்களோடு தங்கிவிட்டேன். எப்போதாவது மட்டுமே கும்பகோணம் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை கும்பகோணம் சென்றபொழுது ஊரிலிருந்த பள்ளி நண்பர்கள்தான் அந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். விஜயலட்சுமி அத்தை யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று சொன்னார்கள். என்னால் நம்பமுடியவில்லை. டீக்கடை மாணிக்கம் என்னைப் பார்த்து அதே விஷமத்தோடு சிரித்தார். மாமாவை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. அவர் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஊருக்குள் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பற்றி எல்லாரும் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். எனது மனதில் மாமாவின் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் மங்கலாகத் தொடங்கியது. தஞ்சாவூருக்கு மீண்டும் கிளம்பி வந்துவிட்டேன். இறுதியாண்டு அரியர்ஸ்களை க்ளியர் செய்யும் முயற்சியில் மூழ்கியிருந்தேன். நான் கல்லூரி முடித்துப் பட்டமேற்படிப்புக்கு சென்னை வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து காலம் உருண்டோட இத்தனை வருடம் கழித்து இப்போதுதான் இதோ காசி தியேட்டரில் சந்தித்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.

"கோரை முடி தரித்திரம்டா.. சுருள் முடிதான் அதிர்ஷ்டமுனு சாமுத்திரிகா லட்சணம் சொல்லுது." நான் எதிர்பார்த்தது போலவே மாமா என்னிடம் சொன்னார்.

"என்ன மாமா..இன்னும் அடிச்சு வுடுற பழக்கம் போகலையா" கிண்டலுடன் கேட்டேன்.

"அடப் பயலே என் அனுபவம் உன் வயசுடா. சுருள்முடி பத்தி சாமுத்திரிகா லட்சணத்துல என்ன சொல்றாங்க தெரியுமா?" சொல்லிவிட்டு மாமா காபியை உறிஞ்சினார். மாமாவுக்கு எப்படி பதிலடி தருவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்றும் சின்னப் பயல் இல்லை. மனதின் ஒரு மூலை என்னை வேகமாகப் பதில் தர தூண்டியது. சுள்ளென்று சூடாக அந்தப் பதில் இருக்க வேண்டும். அனிச்சையாக என்னை மீறி என் வாயிலிருந்து வந்த கேள்வியைக் கேட்டேன்.

"எதுனாச்சும் அடிச்சு வுடாதீங்க மாமா. சுருள்முடி இருக்கறவங்க எல்லாம் குடும்பப் பொண்ணுங்களா?" நான் முடிக்கவில்லை.

சட்டென மாமா முகம் மாறியது. அவரது முகம் ஒருகணம் இருண்டது போல தெரிந்தது. அதுவரை அவர் முகத்திலிருந்த மலர்ச்சி சட்டென மறைந்து இறுக்கமாக அவர் என்னைப் பார்த்தது போல தோன்றியது. கடுப்பில் நான் சற்று குரலை உயர்த்திப் பேசியது கிட்டத்தட்ட கத்தியது போல உணர்ந்தேன். பார்சல் கட்டிக்கொண்டிருந்த இரண்டொரு சர்வர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். பில்லைக் கொடுத்துவிட்டு அமைதியாக என்னுடன் வெளியே வந்தவர் காசி தியேட்டர் பஸ் நிறுத்தம் வரும்வரை எதுவும் பேசவில்லை. பஸ் வந்தவுடன், "பார்க்கலாம் மாப்பிள்ளை" என்று என் முகத்தைக் கூடப் பார்க்காமல் சொல்லிவிட்டு பஸ்சில் ஏறினார். தவறாக ஏதாவது சொல்லி விட்டேனா? குழப்பமாக இருந்தது. ஒருகணம் டீக்கடை மாணிக்கம் முகம் நினைவுக்கு வந்தது. விஜயலட்சுமி அத்தையை இழுத்துக் கொண்டு ஓடின சைக்கிள் கடைக்காரன் முகம் மங்கலாக வந்து மறைந்தது. குறிப்பாக, விஜயலட்சுமி அத்தையின் நெற்றியில் விழும் அந்த அழகான சுருள்முடிகள் வந்துப் போனது.


நன்றி
என்.விநாயக முருகன்

4 comments:

  1. சரளமான நடை வினய். Keep going.

    ReplyDelete
  2. பகிர்ந்தமைக்கு நன்றி.
    மாசிலா

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு விநாயகமுருகன்.
    இம்மாதத்திலேயே உங்களின் மூன்று சிறுகதைகள் படித்ததாக ஞாபகம்.. சிறுகதைத் தொகுப்பை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  4. நன்றி ஜெகதீசன்
    நன்றி மாசிலா
    நன்றி நண்பா (எழுதி பழகுறேன். அவ்வளவுதான் :) )

    ReplyDelete