Monday, October 5, 2009

"சின்னப்புள்ளத்தனமான கவிதைகள்" - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் முத‌ல் மூன்று கவிதைகளை வாசிக்கலாம்

ஆய பயன்
----------
வாழைமரத்தின் பயன் பற்றிய
கட்டுரையொன்றை
எழுதி வரச்சொன்னேன்
ஆறாம் வகுப்பு சிறுவனிடம்.
அவன் ஏதோ தப்பாக
புரிந்துக்கொண்டு
மாமரம் பற்றி
எழுதி எடுத்து வந்தான்.
திட்ட மனமில்லாமல்
மாம்பழமொன்றை பறித்து தின்று
மதிப்பெண் போட்டேன்.

ஒரு அதிசயம்
-------------
சற்றுமுன்பு
கேட்ட கேள்வியொன்றுக்கு
இம்மாம் பெருசு பூமியென்று
இரண்டு பிஞ்சு கைகளையும்
விரித்து பதில் சொன்னவள்
சென்றபிறகு
இம்மாம் பெருசு என்று
நானும் கைகளை விரித்தேன்
நான்கு அடி கூடுதலாக
பூமி விரிந்து சுற்றியது.


வாசிப்பு
-------
புதுப்புத்தகங்களை
வாங்கியவுடனேயே
வாசனைப் பிடித்து
எல்லா பக்கங்களின்
எழுத்துக்களையும்
எப்படியோ
உறிஞ்சி விடுகிறார்கள்.
குழந்தைகள் படிக்கவில்லையென
குறைச்சொல்ல
இனி என்ன இருக்கிறது?


ராட்சஸி
-------
இந்த குறும்புக்கார
சிறுமிக்கு
வாயெல்லாம் பொய்.
கொஞ்சம் அதிகம்தான்.
தன்னோடு விளையாட
வர மறுத்த நிலாவை
உடைத்துவிட்டதாக
வானத்தைக் காட்டினாள்.
சிரித்தபடி வீடு திரும்பி
ஜன்னல் வழியே
மேலே பார்த்தேன்.
ராட்சஸி கோபத்தில்
உடைத்தாலும் உடைத்திருப்பாள்.


தோழி
-----
நான் சென்ற
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்
நேரு வேடமிட்ட
குழந்தையிடம்
இந்திராகாந்தி வேடமிட்ட
குழந்தையைக் காட்டி
யாரென கேட்டார்கள்
பரிசு வழங்கிய நடுவர்கள்.
ஒன்றாம் வகுப்புத்தோழி
ஆர்த்தியென்று சொல்ல
எல்லாரும் சிரித்தார்கள்.


-நன்றி
என்.விநாயக முருகன்

8 comments:

  1. எல்லாக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன ... குறிப்பாக ”ராட்சஸி”

    ReplyDelete
  2. எல்லா கவிதைகளும் நன்றாக இருக்கின்றன...குறிப்பாக இந்த "ராட்சசன்" கையில்!(நன்றி நந்தா!)

    ReplyDelete
  3. ellam arumai nanba
    lesaana punmuruval tharukirathu.

    ReplyDelete
  4. மண்குதிரை சொன்ன மாதிரி புன்முறுவல். தோழி சிரிப்பே வர வைத்துவிட்டாள்.

    மென்மை

    ReplyDelete
  5. அருமையான கவிதைகள் நண்பரே ராட்சசிகள் உலவும் வரைதான் கவிதைகள் இல்லையா ?
    :)

    ReplyDelete
  6. நன்றி நந்தா
    நன்றி ராஜாராம்
    நன்றி மண்குதிரை
    நன்றி அசோக்
    நன்றி நேசமித்ரன்

    ReplyDelete
  7. வாவ்! ரொம்ப நல்லா இருக்கு விநாயக முருகன்!

    ReplyDelete