Saturday, October 10, 2009

"நான்கு கவிதைகள்" - அகநாழிகை இதழ்

நண்பர் வாசு அவர்கள் அமர்க்களமாய் ஆரம்பித்திருக்கும் அகநாழிகை முத‌ல் இதழ் இன்று கிடைக்கப்பெற்றேன். இதழ் முழுக்க ஓரே கவிதை மழை(முப்பது கவிஞர்கள்).
முத‌ல் இதழில் எனது நான்கு கவிதைகள் வந்தது பெருமையாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள் & நன்றி வாசு.



பூக்காரி
——––––
அதிகம் பேசப்படாத
மலைக்கோயிலொன்றிற்கு
நான் சென்றிருந்த நேரத்தில்
யாரையுமே காண முடியவில்லை.

கோயிலருகே ஒரேயொரு
பூக்கடை மட்டும் மேலே
ஏகாந்தமாய் நின்றிருந்தது.

நடுத்தர வயது பூக்காரியொருத்தி,
பக்கத்தில் வேடிக்கைப்பார்த்தபடி
ஆறுவயது சிறுவனொருவன்.
எங்களைத்தவிர யாருமில்லை.

சிரித்தபடியே கடந்துச்சென்றேன்.
கோயிலுக்குள்ளும் யாருமில்லை.
பூசை செய்யவும் ஆளில்லை.
ஏமாற்றமாய் திரும்பினேன்

என்ன விஷேசம் இந்தக்கோயிலில்
என்று விசாரித்தேன் பூக்காரியிடம்.
சண்டைப்போட்டு
சிவனைப்பிரிந்த பார்வதி கைக்குழந்தையுடன்
வந்தமர்ந்த மலையென்று
சலிப்பாக சொல்லியபடி
கோயிலுக்குள் நுழைந்தாள்.

என்ன சண்டையென்று
நான் கேட்கவுமில்லை.
அவள் சொல்லவுமில்லை.


தொலைந்தப் பறவை
——––––——––––——––––—
பெருநகரில் தொலைந்துப்போன
பறவையொன்றை
நான்கு வயது மகளுக்கு
விளக்க வேண்டியிருந்தது.

புத்தகத்தில் பறக்கும்
காட்டுப்பறவையை
விவரித்தேன்.

குரல் பதியப்பட்ட
ஒலிநாடா ஓடவிட்டேன்.

இந்த ஸ்பரிசம் போலென்று
கூண்டுக்கிளியை
தொட்டுக் காட்டினேன்.

மூன்றையும் ஒ‌ன்று சேர்த்து
காட்ட முடிந்ததேயில்லை.


தனிமையில் ஒரு நட்பு
——––––——––––——––––—
காலியாக வெறிச்சோடி
கிடந்த காலைப்பொழுதில்
ஒரு ரயில் நிலையத்தின்
தனித்து நின்ற
எடைபோடும் எந்திரத்தில்
ஏறி எடைப்போட்டேன்

வந்து விழுந்த அட்டையில்
எடையை பார்த்து
பின்புறம் திருப்ப
நண்பர்களிடம் பழகுமுன்
எடைபோடவும் என்று
அச்சாகியிருந்தது

சிநேகமாக சிரித்து
வைத்து நடந்தேன்


மீந்துப்போகும் சொற்கள்
——––––——––––——––––—
ஹைதராபாத் செல்லும்
ரயில் பயணமொன்றில்
என் சகபயணி கையில்
முப்பது நாளில் தெலுங்கு
கற்றுக்கொள்ளும் புத்தகம்
வைத்திருந்தார்.

பேச்சினூடாக தான்
ஐந்து நாட்கள் மட்டுமே
தங்கப்போவதாகவும் சொன்னார்.

விடைப்பெற்று இறங்கும்போது
மீந்துப்போகும் சொற்களை
என்ன செய்வார்
என்று யோசித்தேன்.


-நன்றி
என். விநாயக முருகன்

10 comments:

  1. வழக்கம் போலவே ... நல்லா இருக்கு விநாயகன் ... வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //என்ன சண்டையென்று
    நான் கேட்கவுமில்லை.
    அவள் சொல்லவுமில்லை.//


    //மூன்றையும் ஒ‌ன்று சேர்த்து
    காட்ட முடிந்ததேயில்லை.//

    அற்புதம்!

    ReplyDelete
  3. நன்றி நந்தா
    வாங்க ஜெகதீசன்.நன்றி.
    நன்றி கவிதை. :)
    நன்றி நண்பா

    ReplyDelete
  4. எல்லாமே நல்லா இருக்கு.வாழ்த்துக்கள் விநாயகம்!

    ReplyDelete
  5. என்னப்பா முதல் அகநாழிகையில் நான்கு கவிதைகள். வாசு சார் என்ன உங்க ஊர்காரரா?
    (எனக்கு ஒரு பிரதிக்கூட அனுப்பல உங்க ஊர்காரர், ஏன்னா நான் இலக்கியவாதியில்லையே..)

    சிரியஸா எடுத்துக்காதிங்க.. வாசு சார் என் கொள்ளு தாததன் பாட்டி ஊர்காரர்.

    ReplyDelete
  6. வாங்க அசோக் . நன்றி

    நீங்க வேற சிலர் நான்கு கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கின்றார்கள். சிலர் ஒரு பக்கம் அளவு பிரமாதமாக கவிதை எழுதியிருக்கின்றார்கள். முப்பது கவிஞர்கள் எழுதியிருக்கின்றார்கள். என்னுடையது எல்லாமே குட்டி(!?) க் கவிதைகள்தான். நான் வெறும் நான்கே நாலுதான் :(

    ReplyDelete
  7. மீந்து போகும் சொற்களும் கூட ..

    ReplyDelete
  8. தொலைந்து போன பறவை ரொம்ப ஈர்த்தது

    ReplyDelete