Thursday, October 1, 2009

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
-----------------



மாடு
—–––

சைக்கிளில் வ‌ந்த
மகன் கன்றுக்குட்டியை
இடித்துவிட்டதாக சொன்னபோது
கொஞ்சம் பதறித்தான் போனது.
அழைப்புமணியை கழற்றி
சற்று உயரத்தில் மாட்டலாமென்று
வாசல் வரும்போதுதான் கவனித்தேன்.
பெரியமாடு போஸ்டர் நக்கி கொண்டிருந்தது.



நாய் கண்காட்சி
——————————————

நாய் கண்காட்சியொன்றில்
வித விதமான நாய்களின்
அணிவகுப்பை பார்த்தேன்.
எட்டங்குல நாய் முதல்
எண்பது கிலோ நாய் வரை
வரிசையாக நின்றன.
ஒவ்வொரு நாயும்
விநோதமான ஆடைகளை
அணிந்திருந்தன.
சில நாய்கள் நகைகளும்
அணிந்து வாலாட்டின.
கறுப்பு கண்ணாடி
காலுறைகள் கூட போட்டிருந்தன.
என் நாய் நெருப்புத்தாண்டும்.
என் நாய் கடைக்குப்போகும்.
என் நாய் வேட்டையாடும்.
என் நாய் ஷேக்ஹேண்ட் தரும்.
பல பல குரல்களில்
அறிமுகம் செய்தார்கள்.
கண்காட்சி முழுவதும்
சுற்றிப் பார்த்துவிட்டேன்.
எந்த நாயும் நாய்போல
தெரியவில்லை.


யோகா டீச்சர்
————————————

பு‌திதாக சென்றிருந்த
யோகா வகுப்பொன்றில்
என் முன் அமர்ந்திருந்த
இளம்பெண் ஒருத்தி
மூச்சை நன்றாக
உள்ளிழுத்து வெளியே
விடும்படி சொன்னாள்.
செய்தும் காட்டினாள்.
அவள் செய்யும்போது
எனக்கு மூச்சே
நின்றுவிடும் போலிருந்தது.
மூச்சை இழுத்து சற்று
அப்படியே வைத்திருக்க சொன்னாள்.
சொல்லும்போது விட்டால் போதுமென்றாள்.
திடீரென செல்போன் ஒலிக்க
எழுந்து சென்றாள் பாதியில்.
அவள் செல்வதை பார்க்கையில்
மூச்சில் ஏதோ மாற்றம்.
தலை மறைந்ததும்
திணற ஆரம்பித்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்.
மரணத்துக்கு சற்று முன்பு
திரும்பிவிட்டாள்.
ந‌ல்லவேளை…
போன மூச்சு வந்தது.

8 comments:

  1. muthal irantum enakkup pitiththirukkirathu nanba.

    ReplyDelete
  2. மூச்சு பத்திரம்

    :)

    ReplyDelete
  3. நன்றி நந்தா
    நன்றி மண்குதிரை
    நன்றி பாலா
    நன்றி நேசமித்ரன்
    நன்றி அசோக்

    ReplyDelete
  4. இந்த ஆளை என்ன செய்யலாம் யோகா மிஸ்?சூ காட்டலாமா? மாடு முட்டட்டுமா?..

    ReplyDelete
  5. நன்றி ராஜாராம்..
    யோகா டீச்சர் சூ காட்ட போய்தான் இந்த கவிதை பிறந்துச்சு

    ReplyDelete