Thursday, August 13, 2009

விடுமுறை தினமொன்றில்

விடுமுறை தினமொன்றில்
—————————————————————————————
விடுமுறை தினமொன்றில்
சற்று தாமதமாக
கண்விழித்து
காபி குடித்து
செய்தித்தாளை மெல்ல மேய்ந்து
ஓய்வாக நகம் வெட்டியபடியே
அன்றைய சிறப்பு நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சியில்
பார்க்க ஆரம்பித்தோம்
நடிகையொருத்தியின் பேட்டி
நடிகரொருவரின் பாட்டு
அடுத்து வெளிவரவிருக்கும்
அமர்க்களமான புதுப்பட
முன்னோட்டம் பிறகு
பட்டிமன்றம் கொறிக்க
கொஞ்சம் சிப்ஸ்
இன்னொரு குவளை
தேனீர் இடையில்
மதியம் வைக்கவேண்டிய
மட்டன் குழம்பு பற்றி
‌சில விவாதம்
பள்ளி முடித்து வரும்
மகன் சேனல் மாற்றி
கொஞ்சம் பாட்டு
உண்ட களைப்பில் சிறிது
உறக்கம் மாலை
எழுந்து தேனீர் கூட சமோசா
இந்தியத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக பார்த்தல்
இரவு தோசையா? இடியாப்பமா?
நீண்ட சர்ச்சை வாக்கெடுப்பு

முடிவில் இட்லிக்கு சம்மதித்து
புதினா சட்னிக்கு தலையாட்டி
கொஞ்சம் இணையத்தில் மேய்ந்து
மின்னஞ்சல்கள் அனுப்பி
பிளாக்கில் திட்டியோ
கவிதை எழுதியோ முடிக்கையில்
கதவு தட்டும் மகன்

இன்னைக்கு காத்தால
எதுக்குமா ஸ்கூல்ல
முட்டாய் கொடுத்தாங்க?

ஏதேதோ சொல்லியபடி
உறங்கியும் போவோம்

7 comments:

  1. மாற்றம் நிகழுதுங்க!!!
    கவிதை மாறிவரும் சமூக நிலையை
    சாடுவதில் இயல்பான கேள்விகள்.
    நச்.

    ReplyDelete
  2. நன்றி முத்துராமலிங்கம்

    ReplyDelete
  3. அட்டவணை வாழ்வின் உச்ச சோம்பல்களை அசத்தலாக சொல்லியிருக்கீங்க நண்பா. வாழ்த்துகள்.
    யதார்த்தமான சொல்லாடல்கள்.

    ReplyDelete