Saturday, August 15, 2009

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு
--------------------
தெருக்கோடி மரத்தில்
விடாமல் பால் வடிந்த
மறுதினம் முதல்
மாரியம்மன் வந்தமர்ந்திருந்தாள்
மஞ்சள் தடவி குங்குமம் பூசி
பச்சைப்பட்டுக் கட்டி மரத்தை
அலங்கரிக்கத்தொடங்கினா‌‌‌ர்கள்
நேர்ந்திக்கட்டிய மஞ்சள் கயிறுகளுடன்
சூலம் நட்ட இடம் சுற்றி
சிமெண்ட் தளம் பூசினா‌‌‌ர்கள்
சுற்றி வர இரண்டு அடி இட‌ம் விட்டு
இடுப்பளவு உண்டியலும்
ஆடிமாசம் கூழ் ஊற்றும் செலவை
அடுத்தத்தெரு அண்ணாச்சியுமாய்
களைகட்டியது

இதெல்லாம் பழைய கதை

கொஞ்சம் கொஞ்சமாக
பால்வரத்து அறவே நின்றுபோக
பாழாப்போன மின்சாரக்கம்பம் உரச
உண்டியலும் வெறிச்சோடிய நேரத்தில்
அடுத்ததெருவில் ஐந்துகிரவுண்டில்
அமர்க்களமாய் குடியேறினார்
வெங்கடசுப்ரமணியர்
டைல்ஸ் உபயம் : அண்ணாச்சி

நவக்கிரகம் சுற்றிவரும் இடத்தில்
சந்தோஷி மாதா எதிரே ஆஞ்சநேயர்
சுப்ரமணியர் ‌வலப்பக்கம் நடராஜர்
சன்னதி முன்னால் குருபகவான்
இடப்பக்கம் துர்க்கை கூட மின்சார கோயில்மணி
மணி உபயம் : பிரபா மெடிக்கல்

வெங்கடசுப்ரமணியருக்கு சாபம்
கொடுத்தபடி தலைவிரிகோலமாக
அழுதுபுரள்கிறாள் கோடித்தெரு மாரி

மூன்று முறை
நோட்டீஸ் கொடுத்தும்
காலிசெய்யாமல் போனதால்
முனிசிபாலிட்டி வண்டியொன்று
முட்டுச்சந்தில் திரும்பிநிற்கிறது

6 comments:

  1. நல்லா இருக்கு விநாயகம்.

    ReplyDelete
  2. //மூன்று முறை
    நோட்டீஸ் கொடுத்தும்
    காலிசெய்யாமல் போனதால்
    முனிசிபாலிட்டி வண்டியொன்று
    முட்டுச்சந்தில் திரும்பிநிற்கிறது //

    நிகழப் போகும் ஒரு பண்பாட்டு சுரண்டலை ஆக்கிரமிப்பை கவிதையில் மட்டுமே இத்துனை கலைநயத்துடன் சொல்ல முடியும் நண்பார். அசத்தல். வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சூப்பரு....

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே.. கண்ணதாசன் வரிகள் நியாபகம் வருகிறது.

    ReplyDelete