Tuesday, November 3, 2009

தெகிமாலா நாட்டு சரித்திரம் - ஒரு கதை

கீற்று.காமில் முன்பு எழுதிய கதையொன்றை இப்போது படித்துப்பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ரெய்டு விட்டிருக்கலாமோ எ‌ன்று தோ‌ன்றியது.சமீப காலமாக இந்த தாத்தாக்கள் அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை....



தெகிமாலா நாட்டு சரித்திரம்
என்.விநாயக முருகன்


முன்னொரு காலத்தில் கடல் கொண்ட லெமூரியாக் கண்டத்தில் தெகிமாலா என்றொரு நாடு இருந்தது. இந்த நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடியது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கு உணவு பஞ்சம் என்று எதுவும் இல்லை. நகத்தால் பூமியை கீறினாலே போதும் தண்ணீர் பீறிட்டெழும். வானத்தில் இருந்து அடிக்கடி தேவதைகள் தெகிமாலா நாட்டில் இறங்கி இளைப்பாறி செல்வர். தேவதைகளும், மனிதர்களும், தேவதூதர்களும் சந்தோசமாக ஒன்றாக இருந்த அந்த தெகிமாலா நாடு பார்ப்பதற்கு இந்திரனுக்காக மயன் வடிவமைத்த இந்திரலோகம் போல இருந்ததாக லெமூரியா கல்வெட்டு ஒன்்று சொல்கிறது. தெகிமாலா நாட்டு தெ‌ன்கிழக்கே கடல் நடுவில் இகிமாலா என்றொரு சொர்க்கப்புரி தீவு நாடு இருந்தது. தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆனா‌‌‌ல் இந்த சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒருநாள் திடீரென தெகிமாலா நாட்டில் எல்லோருமே வயதாகிப் போனார்கள். அதாவது நாட்டில் எல்லாருமே தாத்தாக்கள், பாட்டிகளாக மாறித் திரிந்தார்கள். அனைவரும் வயதான மனிதர்களாக இருந்ததால் சண்டை சச்சரவு இன்றி சந்தோசமாக கலை, இலக்கியமென்று பொழுதைக் கழித்தார்கள். தெகிமாலாவின் முக்கிய பொழுதுப் போக்கு தெருக் கூத்து மற்றும் மந்திர பொட்டிகள் தரும் (பின்னால் சொல்கிறேன்) மாயாஜாலங்கள். தேவதைகளின் நடனம். தெகிமாலா நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அனைவரும் இப்படி வயதானவர்களாக மாற அந்த நாட்டில் ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்கள்தான் என்று தெகிமாலா நாட்டின் சரித்திரத்தை உளவியல் ரீதியாக ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். அப்படி ஏற்கனவே இருந்த ‌சில வயதான மனிதர்களைப் பற்றிய ‌சில குறிப்புகள் லெமூரியா கல்வெட்டில் காண கிடைக்கிறது. தாத்தாக்கள் என்றறு இவர்களை தெகிமாலாவில் விளித்து வந்தார்கள்.

தாத்தா நம்பர்-1

தெகிமாலா நாட்டில் ஒரு கவிஞர் தாத்தா இருந்தார். அவர் தெருக்கூத்து கலைக்கு பாடல்கள் எழுதி வந்தார். இவரது பாடல்கள் தெகிமாலா நாட்டு மக்கள் மத்தில் பிரபலம். இவரது பாடல்களை தெகிமாலா மக்கள் அடிக்கடி முணுமுணுப்பார்கள். தெகிமாலா நாட்டு ராஜா அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு மந்திரி அளவுக்கு இவரிடம் செல்வம் இருந்தது. எல்லாமே தெருக்கூத்துப் பாடல்கள் எழுதி ஈட்டியது. ஒரு தெருக்கூத்து பாடலுக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் ஈட்டியதாக கல்வெட்டு செய்தியொன்று கூறுகிறது. தெகிமாலா நாட்டில் எப்போதாவது போர் வந்தால் இவருக்கு கோபம் வந்து உணர்ச்சிக் கொந்தளிப்பில் சில கவிதைகள் எழுதுவார். அவை மக்களுக்கான கவிதைகள் என்று சொல்லப்பட்டது. அனேகமாக அந்த கவிதைகள் நாலு வரியில் இப்படி இருக்கும்.

ஏ விதியே
உனக்கு கண்கள் இல்லையா?
என் செய்தாய்?
என் இன தெகிமாலா மக்களை
விதியே உன்னை திருத்துவேன்
வந்தால் நின்னை நசுக்குவேன்.

ஆனால் அடுத்த நாளே இந்த கவிஞர் தெருக்கூத்தொன்றில் வேறு பாட்டு எழுத சென்று விடுவார். பெண்களின் அங்க அசைவுகளையும், தெகிமாலா மலர்களையும் ஒப்பிட்டு இவர் எழுதும் பாடல்கள் தெகிமாலா இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இவர் எழுதும் பாடல்களின் உண்மையான உள்ளர்த்தம் தெரியாமல் தெகிமாலா மக்களும் இவரை கவி ராஜா என்று புகழ்ந்து வந்தார்கள். பூக்களால் ஆன கதவுகளே தாழ்ப்பாளை திறந்து விடுவாயா? என்று இவரது பாடல் வரிகள் தெகிமாலாவில் பிரசித்தம். கேட்பதற்கு இலக்கியத்தரம் போல தெரிந்தாலும் இதன் மறை பொருளில் ஒளிந்திருக்கும் கொச்சைத்தனம். மற்ற தெகிமாலா நாட்டு இலக்கியக் கவிஞர்களிடம் இவரது போலியான சமகால கவிதைகள், இலக்கியம் என்ற பெயரில் இசைக்கு ஏற்ப வார்தைகளை போட்டு நிரப்பும் பம்மாத்து எல்லாம் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டன.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தெகிமாலா நாட்டில் இவரைத் தவிர்த்து மற்ற சில கவிஞர்களும் இருந்தார்கள். பாவம் சமகாலத்தில் வாழ்ந்த அவர்கள் எல்லாம் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்தார்கள். இந்த கவிஞர் தாத்தாவுக்கு தெகிமாலா நாட்டு ராஜாவுடன் அரண்மனையில் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவு நட்பு இருந்தது. ராஜா என்ன தப்பு செய்தாலும் இடித்துக் கூறும் பழக்கம் இந்த தாத்தாவுக்கு இல்லை. தவிர யார் ராஜாவானலும் அவர்களிடம் நட்பு பாராட்டும் வழக்கமும் இந்த தாத்தாவுக்கு இருந்தது. அரண்மனையில் அவ்வப்போது ஆஜராகி ராஜாவை போற்றி நானூறு வரி கவிதையொன்றை பாடி பொற்காசுகளை பெற்று வருவார் (கவனிக்க - மக்களுக்கான கவிதைகள் நாலு வரிகள் மட்டுமே)

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இவர் தேவதைகளை காதலியுங்கள் என்று தெகிமாலா நாட்டு இளைஞர்களுக்காக எழுதிய பாடல்கள் பிரசித்தம். இவை ஓலை சுவடிகளில் பொறிக்கப்பட்டு தெகிமாலா நாடெங்கும் ஒரு பொற்காசுக்கு விற்கப்பட்டன. தெகிமாலா நாடெங்கும் வானிலிருந்து தேவதைகள் இறங்கி வந்தவண்ணமாக இருந்ததால் தெகிமாலா இளைஞர்களுக்கு தேவதைகள் கிடைப்பதில் அதிக சிரமம் இருந்ததில்லை. தேவதைகளை காதலிப்பதன் மூலமே தெகிமாலா மனிதர்கள் சிறப்புற்று வானுள் உறையலாம் என்பது இவர் தத்துவம். தெருக்கூத்து பாடல்களில் தேவதைகளை காதலிக்க சொன்னார். தேவதைகளும் இதை ஆமோதித்தன. இவ்வாறு தெகிமாலா மக்கள் காதல் வாழ்க்கை மெல்ல மெல்ல இந்த கவிஞர் தாத்தாவால் தெருக்கூத்து மூலமாக மாற்றி அமைக்கப்பட்டு புது பரிணாமத்தில் மிளுங்க ஆரம்பித்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தாத்தா நம்பர்- 2

தாத்தா நம்பர்- 2 பெயரைச் சொன்னாலே தெகிமாலா நாட்டில் விசில் பறக்கும். நடந்து வந்தால் (எப்படி தாத்தா இந்த வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக நடக்கிறார் என்பது யாருக்கும் புரியாத தங்கமலை ரகசியம்) அனல் பறக்கும். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். தெகிமாலா நாட்டின் அர‌சிய‌ல், கலை, இலக்கியங்களில் முக்கியமான ஆளுமை செலுத்தக்கூடிய நபர். இந்த தாத்தா ஒருபோதும் பாட்டிகளுடன் ஜோடியாக கூத்தில் நடிக்க மாட்டார். தன் பேத்திக்கு பேத்தி வயதில் உள்னள பெண்களுடன்தான் நடிப்பார். ஒரு தெருக்கூத்தில் தப்பு தப்பு தப்பு தப்பு தப்புக் கிழவி என்று பாடி வைக்க அந்த தெருக்கூத்துக்கு கிழவிகளின் கூட்டம் வராமல் போனது பெரும் சோகம். கூத்து செம பிளாப். பிறகு இவர் தெகிமாலா நாட்டின் பக்கத்தில் உள்ள கெகிமாலா நாட்டுக்கு சென்று ஆயில் மசாஜ் செய்து நாடி, நரம்புகளை நீவி தெம்பாக கூத்துக் கட்ட வந்தார். கூத்தும் களைக் கட்டியது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இந்த தாத்தா நம்பர்- 2 க்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு வானத்தைப் பார்த்து விரல்களை மடக்கி தேவதைகளை பார்த்து ஏதோ சொல்வார். தேவதைகள் என்னை தூக்கி வடக்குத் திசையிலுள்ள ‌சில கடவுளின் தூதர்களிடம் சென்றுவிடும். அங்தகே கடவுளை பார்த்து விட்டு மீண்டும் தெகிமாலா திரும்பி விடுவேன் என்று அடிக்கடி சொல்வார். தெகிமாலா மக்கள் இவரையே கடவுளாக நம்பி கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுத இல்லை.

இந்த தாத்தா நம்பர்-2 வின் மூத்த மகள் ஒரு பையனைக் காதலித்தாள். அந்த பையனும் ஒரு இள‌ம் கூத்து நடிகன். அந்த பையனுக்கும் ஒரு வினோத பழக்கம் இருந்தது. தாத்தா போல இல்லாமல் இவன் அடிக்கடி பூமியை பார்த்து விரல்களை காட்டுவான். பூமிக்குள் இருந்து பாதாள பைரவிகள் வ‌ந்து என்னை தூக்கிச் சென்று பாதாள உலக கடவுளிடம் அழைத்துப் போவார்கள் என்று பீலா விடுவான்.

இவனது பீலா தாத்தாவுக்கு பிடிக்காமல் போக அவர் தனது மகளை இன்னொரு தெருக்கூத்து பையனுக்குக் கட்டி வைத்தார். அவளும் தெரிஞ்ச நாயைக் காட்டிலும் தெரியாத பேய் மேல் என்று காதலை உதறி தாத்தா நம்பர்-2 பேச்சுக்கு கட்டுப்பட்டாள். இந்த நிஜக் கூத்தெல்லாம் தெகிமாலா நாட்டு மக்களுக்கு கொஞ்ச நாள் வரை கிளுகிளுப்பாக இருந்தது. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள். கொஞ்ச நாள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது.

நான் சொல்ல வந்தது இதுக இல்லை.

தாத்தா-2 க்கு உள்ளுக்குள் ஒரு ஆசை. அது தெகிமாலா நாட்டுக்கு ஓரே ஒரு நாள் ராஜாவாகி விட வேண்டும் என்பதுதான். ஆனா‌‌‌ல் அதை வெளியில் சொல்ல மாட்டார். கூத்துக்கலையில் மயங்கிய மக்களும் கேட்டுப் பார்த்து விட்டார்கள். உங்களுக்கு ராஜா ஆசை இருந்தால் சொல்லி விடுங்கள். கண்ட கண்ட ……... யெல்லாம் ராஜாவா இருக்காங்க. உங்கள ராஜாவாக்க மாட்டோமா?

தாத்தா நம்பர்-2 மக்களை பார்த்து சொன்னது இதுதான். வானத்து தேவதைகள், தூதர்கள் மனது வைத்தால் நான் ராஜாவாகி விடுவேன். எனக்கு ராஜா ஆசை இல்லை. ஒருவேளை நான் ராஜாவானால் அது நான் ராஜா ஆனதால் நடந்தது என்று அர்த்தம். இந்த அறிவிப்பை சொல்லி விட்டு அவர் ஒரு தெருக்கூத்து நடிக்க அகிமாலா நாட்டுக்கு சென்று விட்டார். தெகிமாலா மக்கள் மண்டையை பிச்சிக்கிட்டு அலைந்தார்கள்.

நான் சொல்ல வந்தது இது் இல்லை.

தெகிமாலா மக்கள் ஞாபக மறதிக்காரர்கள். தாத்தா அகிமாலாவிலிருந்து திரும்ப மூன்று வருடங்கள் ஆகும். மக்களுக்கு போரடிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் தாத்தா நம்பர்-3 பரபரப்பாக பேசப்பட்டார்.

தாத்தா நம்பர்- 3

இந்த தாத்தா நம்பர்-3 கொஞ்சம் பவர்புல் மனிதர். எழுதவே பயமாக இருக்கிறது. இவர்தான் தெகிமாலா நாட்டு ராஜா. இவரைப் பற்றி நாம் பேசுவதற்கு முன் தெகிமாலா நாட்டில் ஒரு பாட்டியின் கதையை பார்த்து விடலாம். இந்த பாட்டி நிலவில் வடை சுட்டுக் கொண்டிருந்தபோது தெகிமாலா நாட்டு தெருக்கூத்து மேல் ஆர்வம் வந்து, கூத்துக்கட்டும் ஆசையில் எண்ணெய் சட்டியைக் கூட இறக்காமல் ஓடி வந்து விட எண்ணெய் சட்டி சூடேறி வெடித்து விட்டது. நிலவு முழுதும் கொழுந்து விட்டு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது நெருப்பு.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

தாத்தா நம்பர்-3 பற்றி. ராஜாவாக இருந்தாலும் இவரும் தெருக் கூத்திலிருந்துதான் வந்தார். ஆரம்பத்தில் தெருக்கூத்தில் வசனம் எழுதி வந்தார். அந்த வசனம் பாட்டியின் அடுப்பை விட சூடாக இருந்தது. மக்கள் இதயத்தை சுட்டது. தெகிமாலா மக்கள் தாத்தா நம்பர்-3 ஐ ராஜாவாக்கி விட்டார்கள். தாத்தா நம்பர் 3 க்கும் நிலவு பாட்டிக்கும் ஒருபோதும் ஒத்து போவதில்லை, ஒரு விசயம் தவிர. அது தெகிமாலா மக்களை தங்கள் பேச்சால், சிந்தனையால் குழப்புவதை தவிர.

உதாரணம் தாத்தா நம்பர்3:- நீ என்ன நிலவிலிருந்து வந்த பாட்டியா? எனக்கு ஏட்டிக்கு போட்டியா?

நிலவு பாட்டி :- நான் நிலவிலிருந்து வந்தாலும் இந்த தெகிமாலா நாட்டில் பிறந்தவள்தான். வடை சுடுவதற்காக நிலவுக்கு சென்றேன். இப்ப என் சொந்த நாட்டுக்கு வந்து விட்டேன்.

தாத்தா நம்பர் 3:- நிலவுக்கு சென்ற அரசியே? அங்கிருந்து எடுத்து வருவாயோ தண்ணி நூறு டி.எம்.சியே.

நிலவு பாட்டி :- நான் ராணியானால் பற்றி எரியும் நிலவிலிருந்து நூறு என்ன நூறு கோடி டி.எம்.சி தண்ணீர் எடுத்து வருவேன். செய்வீர்களா

என்று மக்களை பார்த்துக் கேட்க தெகிமாலா மக்களும் அவரை ராணியாக்கி விட்டார்கள். ராணி செய்த முதல் வேலை. வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன். சிறிது காலம் சென்ற பிறகு ராணிப் பாட்டி சென்று மீண்டும் ராஜா தாத்தா அரியணையில் வந்து அமர்ந்தார். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

குட்டித்தீவு :-

தெகிமாலா நாட்டுக்கு தென்கிழக்கே ஒரு குட்டித் தீவு இருப்பதாக சொன்னேன் அல்லவா? அந்த குட்டித் தீவின் பெயர் இகிமாலா. இங்க எப்ப பார்த்தாலும் சண்டை. இங்க இருக்கற ராஜா ஒரு சாடிஸ்ட் தாத்தா. அவருக்கு தினமும் நூறு பறவைகள் (சொந்த நாட்டு பறவைகள்) ரத்தத்தை குடிக்கனும். சமீப காலமாக அவர் பறவை இனத்தையே அழித்து விட வேண்டும் என்று தீவிரமாக இறங்கியிருந்தார். ரத்த வெறி அதிகமாகி நூறு என்ற எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து விட்டது.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

Back To தெகிமாலா

ஒரு நாள் ராஜா தாத்தா நம்பர்-3 கடற்கரையில் வாக்கிங் செல்கிறார். அதிகாலை. மறைந்திராத நிலவை பார்க்கிறார். இது் வரை சூரியனையே பார்த்து வ‌ந்த அவர் முத‌ல் முறையாக நிலவை பார்க்கிறார். நிலா ரத்த சிவப்பாக இருக்கிறது. அய்யகோ… இதென்ன கொடுமை என்றறு வினவ உட‌ன் சென்றவர்கள் திகைக்கின்றனர். அவர்களுக்கு தெரியும் இதுன நிலவு பாட்டியின் அடுப்பு வெடித்து தீப்பற்றி எரியும் நிலாவென. ஆனா‌‌‌ல் அவர்கள் மாற்றிச் சொல்லி விடுகிறார்கள்.

இகிமாலா தீவில் தினமும் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிகின்றன. அவற்றின் ரத்தம் நிலவில் பட்டு தெறித்து நிலா சிவப்பாக மிளுங்குகிறது. அவதானித்தால் கடல் நீலம் இழந்து ரத்த நிற சோபையுடன் இருப்பதை பார்க்கலாம். (இந்த மிளுங்குகிறது-அவதானிப்பு இதெல்லாம் தெகிமாலா நாட்டு இலக்கிய மோஸ்தர்) மேலும் கடற்கரை முழுதும் செத்து ஒதுங்கிய பறவைகளின் உடல்கள்.

தாத்தா ராஜாவுக்கு தலை சுற்றுகிறது. அய்யகோ நிலவு ரத்தம். கலங்கியது என் சித்தம். தெளிந்தது உன்மத்தமென கால் நடுங்கி பீச்சில் சாப்பிடாமல் அமர்கிறார். காட்டுத்தீ போல் தெகிமாலா எங்கும் விசயம் பரவுகிறது. தாத்தா ராஜா ஆதரவாளர்கள் தெகிமாலா முழுதும் சாப்பிடாமல் அமர்கிறார்கள். வாக்கிங் வ‌ந்த மக்கள் திகைக்கிறார்கள். பன்னிரெண்டு மணிக்கு ராஜாவுக்கு பசி வருகிறது. அரண்மனைக்கு எழுந்து போய் விடுகிறார். சரி. அப்படினா‌‌‌ இகிமாலாத் தீவில் பறவைகளை கொல்வது நின்று விட்டதா என் று ‌நீ‌ங்க‌ள் கேட்கலாம். வேண்டாம் விட்டு விடுங்கள். அப்புறம் நான் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேன்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

மந்திரப்பொட்டிகள்

தெகிமாலா நாட்டு ராஜா தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். ஐந்து பிள்ளைகள். இருபது பேரக் குழந்தைகள். பேரக் குழந்தைகளில் ஒருவருக்கு ஒருநாள் ஒரு அதிசய மந்திர பொட்டிக் கிடைக்கிறது. இதைக் கொண்டு உலகின் ஏன் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் நடக்கும் விசயத்தையும் பார்க்க முடியும். இந்த மந்திர பொட்டியை மிக திறமையாக பயன்படுத்தினா‌‌‌ல் ஒருவனை மிக வல்லமை படைத்தவனாக மற்ற முடியும். அதே நேரம் இது மக்கள் கைக்கு கிடைத்தால்? அவர்களில் யாராவது வல்லமை பெற்று விட்டால். ஐயோ… நினைக்கவே பயமாக இருக்கிறது.

அப்போதுதான் பேரனுக்கு ஒரு ஐடியா வருகிறது. இந்த மந்திர பொட்டியை தயாரித்து தெகிமாலா மக்கள் எல்லாருக்கும் தந்து விடலாம். நம் நாட்டில் பிரபலமாக உள்ள தெருகூத்துக் கலையை மந்திர பொட்டியில் காட்டி விடலாம். மக்கள் அதில் மயங்கி மூழ்கி விடுவார்கள். ஐடியா ந‌ல்ல இருக்கிறதல்லவா? அந்தக் காலத்தில் இதற்குதான் ராஜ தந்திரம் என்ளறு பெயர். அன்று முதல் தெகிமாலா மக்கள் மந்திர பொட்டி முன்பு மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாக மயங்கி கிடந்தார்கள். மந்திர பொட்டிகளில் தேவதைகள் தோன்றி இளைஞர்களை வசியம் செய்தார்கள். சில தாத்தாக்கள் பேசியே மயக்கினார்கள். பகல் பொழுதுகளில் தேவதைகள் தலையை விரித்து போட்டுக் கொண்டு லிட்டர் லிட்டராக கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா இல்லத்தரசிகளும் அவர்களை கண்டு கண்ணீர் வடித்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இது இல்லை.

இந்த விசயம் நிலவு பாட்டிக்கு எட்டியது. நிலவு பாட்டி கைக்கும் சில மந்திர பொட்டிகள் சென்றது. அவற்றை வைத்து நிலவு பாட்டியும் தெகிமாலா மக்களை குழப்ப, தெகிமாலா மக்கள் ஒருக்கட்டத்தில் சுத்தமாக சிந்திக்கும் திறனை இழந்தார்கள். அவர்கள் தாத்தாக்கள், பாட்டிகள் சிந்தனையை மெல்ல உள் வாங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறினார்கள். ஒருக்கட்டத்தில் தெகிமாலா மக்கள் அனைவருமே தாத்தாக்கள், பாட்டிகளாக உருமாற்றம் அடைந்தார்கள். தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுவும் இல்லை.

நான் சொல்ல வந்தது

தெகிமாலா நாட்டில் இந்த மூன்று தாத்தாக்கள் தவிர மேலும் பல தாத்தாக்கள் இருந்தனர். பத்து வேடம் கட்டிய ராஜ பார்ட் தெருக்கூத்து தாத்தா (தாத்தா-2 போல இவரும் பேசுவது யாருக்கும் புரியாது). பட்டிமன்ற தாத்தா (பேசும்போது தன் நிறத்தை தானே கிண்டல் செய்துக் கொள்வார்) முண்டாசுக் கட்டிய பெரிய ராஜா தாத்தா, லொள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா, புல்லுத் தாத்தா தேசமெங்கும் தாத்தாக்கள்தான். இத்தனை தாத்தாக்கள் இருந்தும் தெகிமாலா மக்களின் சமகால தலையெழுத்தை மாற்றியமைத்ததில் பெரும் பங்கும் பெருமையும் அந்த மூன்று தாத்தாக்களுக்கும், நிலவு பாட்டிக்கும்தான் சேரும்.

மந்திர பொட்டிகள் வழியாக இவர்கள் தெகிமாலா வீட்டுக்குள் அவர்களை அறியாமலேயே செ‌ன்று தெகிமாலா இளைஞர்களை தாத்தாக்களாகவும், இளைஞிகளை பாட்டிகளாகவும் மாற்றி விட்டார்கள். ஒரு வகையில் தெகிமாலா நாட்டில் எல்லோரும் தாத்தாக்களாகவும், பாட்டிகளாகவும் மாறிப்போனதும் நல்லதே. எப்படி என்லறு கேட்கிறீர்களா? முன்பு தெகிமாலா சிறுவர்கள் இப்படி பாடுவார்கள்.

தாத்தா தாத்தா தை
தாத்தா கையில நெய்
மோந்து பார்த்தால் ஆய்


இப்போது தேசமெங்கும் எல்லோருமே தாத்தாக்களாக மாறிப் போனதில் யாருமே தாத்தாக்களை கிண்டல் செய்வதில்லை. தேசமெங்கும் தாத்தாக்கள் என்ற பொது அடையாளம் ஒரு வகையில் சோஷியலிசமே. தெகிமாலா மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

நான் சொல்ல வந்தது இதுவும் இல்லை...

5 comments:

  1. தேகிமாலா நாட்டு மக்கள் ஏற்கனவே தத்தா பாட்டி மனநிலையில் இருந்ததால்தான் இம்மூன்று தாத்தாக்களும் பெரு வாழ்வு வாழ்ந்தார்கள் என்றல்லவா நான் கேள்விப்பட்டேன்.


    குருடர்கள் வாழும் நாட்டில் ஓவியம் வரைவதே வீண் வேலை நீங்களோ மாடர்ன் ஆர்ட் வரைகிறீர்கள். ஹூம் என்ன புண்ணியம்

    ReplyDelete
  2. அமாம், தேகிமாலா நாட்டு மக்கள் ஏன் தமிழ்நாட்டு மக்கள் போல் வெவரமாக இல்லை?

    ReplyDelete
  3. ஐயா! தங்களுடைய நையாண்டியை
    ரசித்தேன்!

    மெனக்கெட்டு இதற்காகத் தங்கள்
    கற்பனையை வீண்டிக்கவேண்டுமா?

    -கேயார்

    ReplyDelete
  4. நன்றி ராஜசூரியன்.
    நன்றி கார்த்திகேயன்.
    நன்றி கேயார்.

    ReplyDelete
  5. அற்புதம்.....இதைத் தவிர தங்கள் கற்பனா சக்தியை விமர்சிக்க இயலவில்லை.

    கலக்கல்! வாழ்த்துகள்!

    ReplyDelete