Mountain Patrol - உலகத்திரைப்படம்
கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் இருப்பது திபெத்திய கோஜெலி மலைக்கிராமம். இங்கு வசிக்கும் அரிய வகை கலைமான்களின் தோலுக்காக சட்டத்தை மீறி வேட்டையாடுகின்றார்கள் சிலர். அவர்களை பிடிக்க மக்களே சேர்ந்து சில தன்னார்வ காவல் குழுக்களை அமைக்கின்றார்கள்.
நாலு வரி செய்தி. நாலு வரியை வைத்து அதிகம் போனால் ஐந்து நிமிட ஆவணப்படம் எடுக்க முடியும்? ஆனால் இயக்குநர் லூசான் இதை தனது இயக்கத்தால் அற்புதமான 90 நிமிட திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
சுற்றிலும் ஏகாந்த பனிமலைகள். நடுவில் சமவெளியில் ஒரு ஜீப்.
ஜீப்பினுள் ரோந்துப்பணியில் இருக்கும் காவலர் ஒருவர் அசந்து உறங்கிக்கொண்டிருக்கின்றார்.பக்கத்தில் நீண்ட துப்பாக்கி.
ஜீப் கதவை ஒரு வயதான நபர் தட்டுகின்றார். கண்விழிக்கும் காவலர் வெளியே பார்க்கின்றார். அந்த வயதான நபர் பின்னால் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள். காவலர் சுதாரித்து துப்பாக்கியை தொட முயல்கின்றார். அதற்கு முன்னால் வெளியே நிற்கும் அனைவர் துப்பாக்கிகளும் காவலர் நெஞ்சுக்கு குறிவைக்கின்றன.
கோஜெலி என்னும் மலைக்கிராமத்தில் மான் வேட்டைக்காரர்களால் சுடப்பட்டு இறந்துப்போன காவலருக்கு இறுதி சடங்குகள் நடக்கின்றன. அதைப்பற்றி செய்தி சேகரிக்க பீஜிங்கிலிருந்து காயூ என்ற ரிப்போர்ட்டர் வருகின்றான். மான் வேட்டைக்காரர்களை பிடிக்கும் சிறப்பு காவல்படை ரிதாய்யை காயூ சந்திக்கின்றான். காவல்படை மான் வேட்டைக்காரர்களை தேடி பனிமலைகளில் பயணிக்கின்றனர். காயூவும் இவர்களோடு சேர்ந்து கேமராவுடன் செல்கின்றான். வழியில் நூற்றுக்கணக்கான தோல் உறிக்கப்பட்ட இறைச்சி வெட்டியெடுத்த மான்களின் எலும்புக்கூடுகள். தினசரிகளில் மான் வேட்டை நபர் கைது என்று வெறும் ஒற்றை வரிச்செய்தியாக நாம் தாண்டிச்செல்கின்றோம். திரைப்படத்தின் இந்தக்காட்சி மனதுக்குள் கத்திப்போல இறங்கி செல்கின்றது.
மான் வேட்டைக்காரர்கள், அவர்கள் தரும் தோலை எடுத்துச்செல்லும் கிராமத்து மனிதர்கள் (கேரியர்கள) அவர்களது மான் வேட்டையை தடுக்கும் காவல்குழுவின் சிரமங்கள். சம்பளம் கூட இல்லாமல் அவர்கள் தன்னார்வக்குழுவாக பணிபுரிவது. கடத்தல்காரர்களிடமிருந்து பிடிபடும் தோலை சிலநேரங்களில் விற்று மருந்து,உணவுகள் வாங்கிக்கொள்வது என்று படம் முழுக்க அற்புதமாய் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
காவல்குழுவை சேர்ந்த ஒருவன் தனியாக ஜீப்பில் வரும்போது
புதைமணலில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விடும் காட்சி நெஞ்சை பதறவைக்கின்றது.
மிகுந்த சிரமத்துக்கிடையில் பனிப்பொழியும் திபெத்திய மலைகள், புதைமணல்கள் நிரம்பிய பாலைகளிடையில் இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் லூசான். பலன்? ஆறு உலகத்திரைப்பட விருதுகள். சீன அரசாங்கம் இந்தப்படம் வெளியானவுடன் கோஜெலி பகுதியை பாதுகாக்க சட்டம் இயற்றியது. கலைமான்களை பாதுகாக்க சட்டம் இயற்றியது. இதைவிட ஒரு கலைஞனுக்கு வேறு என்ன வேண்டும்?
நேஷனல் ஜியாக்ரபிக் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
//மிகுந்த சிரமத்துக்கிடையில் பனிப்பொழியும் திபெத்திய மலைகள், புதைமணல்கள் நிரம்பிய பாலைகளிடையில் இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் லூசான். பலன்? ஆறு உலகத்திரைப்பட விருதுகள். சீன அரசாங்கம் இந்தப்படம் வெளியானவுடன் கோஜெலி பகுதியை பாதுகாக்க சட்டம் இயற்றியது. கலைமான்களை பாதுகாக்க சட்டம் இயற்றியது. இதைவிட ஒரு கலைஞனுக்கு வேறு என்ன வேண்டும்?//
ReplyDeleteஅருமை!
படத்தைப் பார்க்கத் தூண்டுவதாயிருந்த
விமர்சனத்திற்கு நன்றி!!
-கேயார்
நன்றி கேயார்
ReplyDelete