Friday, November 27, 2009

பசங்க

வலி
—–--
குழந்தைகள் புழங்கும்
வீட்டில்
பொம்மைகள்
நசுங்க நசுங்க
பெருகுகிறது
சந்தோஷத்தின் வலி.

திருஷ்டி பொட்டு
———--------——–
பிறந்த குழந்தையை
பார்க்க வந்தவர்கள்
எவ்வளோ அழகென்று
தூக்கி கொஞ்சிவிட்டு சென்ற
தினம் முதல்
திருஷ்டி பொட்டொன்று மின்னியது.
எவ்வளோ அழகென்று
பொட்டையும் கூடவே
கொஞ்சிச் சென்றார்கள்.

அழகுப்படுத்தியது
———————————
பூந்தோட்டத்தில் பூத்த
வெள்ளைநிற பூக்களுக்கு
மஞ்சள் வண்ணமும்
மஞ்சள் பூக்களுக்கு
நீலநிறமும்
நீலப்பூக்களுக்கு பச்சை வண்ணமும்
தந்து அழகுப்படுத்தியதுப்போல
இருந்தது
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்.

படைப்புத்தொழில்
————————-

குழந்தை உடைத்து
நொறுக்கிய பொம்மைகள்
கொண்ட மூட்டையை
பரணிலிருந்து திட்டியபடியே
பிரித்தாள் மனைவி

சிதறி தெறித்த
கரடி யானை
சிங்கம் புலி
குரங்கு எ‌ன்று
வீடெங்கும் காடான‌‌‌து

கரடியின் கால்களோடு
சிங்க உடலை சேர்த்துக்கொண்டு
புலி முகத்தில் ஜீவனொன்று
உலவ ஆரம்பித்தது காட்டினுள்

7 comments:

  1. எல்லாக்கவிதைகளுமே அருமை விநாயகமுருகன் !! அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.

    எனக்கு ’திருஷ்டிப்பொட்டு’ம், ’அழகுப்படுத்தியது’ம் ரொம்ப பிடிச்சிருக்குது

    ReplyDelete
  2. உண்மைதான் கதிரவன்!
    திருஷ்டிப்பொட்டு உண்மையாகவே
    அழகுப்பொட்டுதான்!

    வாழ்த்துக்கள் வி.மு.

    -கேயார்

    ReplyDelete
  3. 1. நொருங்க நொருங்க(நசுங்க நசுங்க)

    எல்லா கவிதைகளும் ஒன்றோடு ஒன்றாக போட்டிபோட்டன என் மனதுக்குள்

    கடைசியில் இது கவிதையல்ல
    குழந்தை பெற்றவன் வலியென்று சொல்லிமுடிந்தது
    வார்த்தைகள் :)

    ReplyDelete
  4. திருஷ்டி பொட்டு மற்றும் படைப்புத்தொழில் கவிதைகள் மிக அபாரம் ... i just love these poems

    ReplyDelete
  5. உங்களுடைய முதல் கவிதை
    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்
    ராஜா சந்திரசேகரின் கவிதைகளை
    ஞாபகபடுத்துகிறது...

    மிருகங்கள் ஆடி திரியும்
    கனவொன்றில் மிதிபடுகிறது
    ஓர் புல்லாகுழல்,
    நசுங்க நசுங்க இசையின் வலி
    பரவுகிறது காற்றில்...

    நல்லா இருக்கு...

    ReplyDelete
  6. நன்றி கதிரவன்
    நன்றி கேயார்
    நன்றி அஷோக்
    நன்றி நந்தா
    நன்றி கமலேஷ்
    நன்றி மண்குதிரை

    ReplyDelete