Friday, November 13, 2009

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

முந்தைய பதிவை போஸ்ட் செய்த பிறகே இன்று குழந்தைகள் தினம் எ‌ன்று தெரிய வந்தது. எங்கள் அலுவலக வலைப்பூவில் எழு‌திய ‌சில கவிதைகள்...


பங்கு
—————

முன்பொருநாள்
அண்ணன்களோடு
கடல் அலைகளில்
கால் நனைத்து
ரோலர் கோஸ்டரில்
குட்டிக்கரணமடித்து
குதிரைச் சவாரி பிறகு
மணலில் சிறிது
புரண்டு இளைப்பாறி
நீண்ட சாப்பாட்டு மேசையின்
இரண்டுபுறமும் அமர்ந்து
உற்சாகமாய் சாப்பிட்டது
நிழலாடுகிறது
அன்று
பேமிலி தோசையை
பங்கு பிரிக்காமல்
எப்படி சாப்பிட்டோமென்று
இன்றுவரை நினைவில்லை



திருடன் போலீஸ்
————————————————
நான் திருடன்
நீ போலீஸ் என்று
சொன்ன சிறுவன்
ஆட்டத்தின் சிறிய
இடைவெளியில்
நீ திருடன்
நான் போலீஸ் எ‌ன்று
உத்யோகம் மாறி
விளையாடுகிறான்
ஆட்டத்தின் இறுதியில்
உத்யோகம் பறிபோன
முன்னாள் போலீசும்
திருந்திய இந்நாள்
திருடனும்
ஒருவரையொருவர் பார்த்து
சிரித்தபடி செல்கிறார்கள்



தீபாவளி இரவன்று
————————————————
தீபாவளி இரவன்று
சாலையை கடந்துச்
செல்கையில்
மூடப்பட்ட கடைகளின்
ஷட்டர் முன்னால்
வெடிக்காத வெடிகளை
சேகரித்தபடி அமர்ந்திருந்திருந்தான்
பேப்பர் பொறுக்கும் சிறுவனொருவன்

அவன் சேகரித்த வெடிகளில்
ஏதாவது ஒன்றின் திரி
நமத்துப்போகாமல் இருக்க
கடவுளை பிரார்த்திக்கிறேன்



கவிதையெழுதி
——————————————

என்னருகே அமர்ந்த
கைக்குழந்தையொன்று
கொஞ்சமும் எதிர்பாராமல்
சட்டென கிழித்துவிட்டது.

பிரசுரமாகாத கவிதையின்
பல துண்டுகளோடு
சிரித்தது கடவுளொன்று
எதுவும் நடக்காததுபோல

இனி
கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
கேட்பவர்களுக்கு சொல்லவும்
மிச்சமிருக்கிறது ஏதோவொன்று



பேய்க்கதைகள்
—————————————
குழந்தைகளை
கூட்டி வைத்துக்கொண்டு
பேய்க்கதைகள் சொன்னேன்.
வித ‌விதமாக கற்பனை செய்து
புது புது பேய்களை நானே
உருவாக்கினேன்.
இ‌து வரை கேட்டறியாத
ஒலிகளையெழுப்பி
கதைகளை நீடித்தேன்.
பிறகு வீட்டின்
அறையிலிருந்து வெளிவருகையில்
திடீரென என் முன்னால்
நான் கேட்டறியாத ஒலிகளுடன்
குதித்து பயமுறுத்தி ஓடுகையில்
கொஞ்சம் பயந்துத்தான் போனேன்
ஒருவேளை பேய் இருக்குமோ?


கண்திருஷ்டி
———————————
அம்மாடியோவ் எவ்ளோ உசரமென்று
குதித்த குழந்தையொன்றை
வைத்தகண் வாங்காமல்
வியப்போடு பார்த்தார்
தெருமுனையில்
பு‌திதாக வந்திருந்த
நாற்பதடி கண்திருஷ்டி விநாயகர்.
வீட்டுக்கு போய் சுத்திப்போட
சொன்னார்கள் யாரோ.
சுத்திப்போட்ட ஆறாம்நாள்
கரைந்துப்போனது.

4 comments:

  1. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

    -பருப்பு ஆசிரியர் (எ) மிஸ்சீ·ப் எடிட்டர்

    ReplyDelete
  2. அருமையான கருத்தாழமிக்க வரிகள்!
    அணு அணுவாய் ரசித்தேன் ஐயா!

    -கேயார்

    ReplyDelete
  3. அட்டகாசம் நண்பா.. குழந்தைகளின் உலகில் நுழைந்து புறப்படுகிறீர்கள்.. உங்களுடைய அலைபேசி எண்ணைத் தர முடியுமா?
    karthickpandian@gmail.com

    ReplyDelete
  4. நன்றி மிஸ்சீ·ப் எடிட்டர்
    நன்றி கேயார்
    நன்றி கார்த்திகைப் பாண்டியன்
    (தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்)

    ReplyDelete