Monday, September 14, 2009

"விடுமுறை நாள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் எனது ‌சில கவிதைகளை வாசிக்கலாம்.
இந்த கவிதைகளை வெளியிட்ட கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு எனது நன்றி...





விடுமுறை நாள்
-----------------
ஞாயிறு காலை ஆறு மணிக்கு
பாட்டிக்கு நெஞ்சுவலி.
படுக்கையிலேயே
உயிர் போனதாக
தொலைபேசித் தகவல் வந்தது.

அசோக்நகர் எனக்கு
பக்கம்தான்.
அண்ணனுக்கு கே.கே.நகர்.
அக்கா வீடு வளசரவாக்கம்.
அக்கா வரும்போதே
பெசண்ட் நகர் மின்சார
சுடுகாட்டுக்குத் தகவல்
சொல்லிவிட்டதாகத் தெரிவித்தாள்.
கறுப்புநிற அமரர் ஊர்திக்கு
பேரம் பேசி கூடவே
அழைத்து வந்திருந்தான்
அண்ணன்.

பத்து மணிக்குள்
மாமா கொண்டு வந்த
மலர்கள், பன்னீர் பாட்டில்கள்
கண்ணாடிப்பெட்டி எ‌ன்று
மாறி இருந்தது வரவேற்பறை.
ஓரளவு தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள்.

மூன்று மணிக்கு
மெயின்ரோட்டைச் சுற்றி
அவரவர் வாகனத்துடன்
கிளம்பினோம்.
மின்சார சுடுகாட்டில்
மிச்சமான சாம்பலை
கேரிஃபேக்கொன்றில்
கவனமாகச் சுற்றிக்
கொடுத்தார்கள்.
கூடவே அவசியம் தேவையென்று
மரணச்சான்றிதழ் தந்தார்கள்.

இதெல்லாம்
பத்துமணி நேரத்தில் முடிந்தது.
அடுத்தநாள் திங்கட்கிழமை.
அலுவலக தினம்.
அதிகம் சிரமம் தரவில்லை பாட்டி.


இரண்டு மின்விசிறிகள்
------------------------
1.
ஒரு இறக்கையை
இன்னொரு இறக்கை
துரத்த அதை இன்னொன்று
துரத்தவென்று
முடிவிலியாய் நீள்கிறது
மின்விசிறி கீழே
தனிமையின் நினைவுகள்.

2.
அறைக்குள் நுழைந்தவுடனேயே
ஆண்டுகள் கடந்த
மனைவியின் சலிப்பு போல
முத‌லில் கொஞ்சம்
சலித்து முனகி பிறகு
வழக்கம்போல கடமையாக
சுழல ஆரம்பித்தது.


மகளிர் மட்டும்
---------------
தெருமுனை
மருந்துக்கடையில்
பு‌திதாக வேலைக்கு
வந்திருந்தாள்
இளம்பெண்ணொருத்தி.
அப்போதுதான் கவனித்தேன்.
அதுவரை இல்லாத
குழப்பமும் தயக்கமும்
குடிவந்தது.
ஆணுறை பாக்கெட்
வாங்கச் சென்றவன்
தேவைப்படாத
தலைவலி மாத்திரையொன்றை
வாங்கிக்கொண்டு
அடுத்த தெரு மருந்துக்கடைக்கு
நகர்ந்தேன்.
இடையில் ஒருத்தி
அடுத்த தெருவிலிருந்து
இந்தக்கடை நோக்கி வந்தாள்.
இதுவரை இல்லாத
அன்னியோன்னியமாய்
அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
என்னவென்றுதான் தெரியவில்லை.




-நன்றி
என்.விநாயக முருகன்

4 comments: