Tuesday, September 1, 2009

பறவை நிபுணர்

பறவை நிபுணர்
——————————————

பறவைகளை பற்றிய
கவிதைகளுக்காக
பறவைகளை தேடி
சதுப்புக்காடுகளில்
அலைந்த ஒருநாளில்
நிபுணரொருவனை
சந்திக்க நேரிட்டது.

பறவைகள் பற்றி
பல தகவல்களை
சொன்னா‌‌‌ன்
சலீம்அலி பற்றி
நிறைய பேசினா‌‌‌ன்

அரிவாள் மூக்கன்
அபூர்வமாய் வருகிறதாய்
சொன்னா‌‌‌ன்

கூழைக்கடா
கூடுக்கட்டுவதை சிலாகித்து
சொன்னா‌‌‌ன்

நீண்டநாள் சந்தேகமான
நெற்குருவிக்கு இன்னொரு பெயர்
வானம்பாடியென்பதை
உறுதி செய்தான்

பெயிண்டட்ஸ்டாக் அல்லது வண்ணநாரை
ஸ்னேக்பேர்ட் அல்லது பாம்புத்தாரா
ஸ்பூன்பில் அல்லது துடுப்புவாயன்
விசிலிங்டக் அல்லது மரத்தாரா
பெயர்களை அடுக்கியபடியே நடந்தான்

சற்றுமுன் பார்த்த
செனகல் கிளிகள்
ஆப்பிரிக்காவிலிருந்து
வருடம் தவறாமல்
வருவதாக சொன்னான்

முன்னி வௌவால்
முக்குளிப்பான் கூட
நாமக்கோழி
நீர்க்கோழிப்பற்றியும் விவரித்தான்

இறுதியாக
புறாக்கறி லேசாக தித்திக்கும்
என்ற தகவலையும்
சொன்னா‌‌‌ன்

9 comments:

  1. வான்கோழி கறிக்கூட நல்ல இருக்கும்ன்னு சாரு சொல்லுவார்.

    கடைசியில ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்.

    பறவைகள் அழகானவை - நம்
    தலையில் எச்சமிடாதவரை

    இந்தக்கணத்தில் தோன்றியவை.

    ReplyDelete
  2. அருமையாய் இருக்கு விநாயகம்.

    ReplyDelete
  3. நீண்டநாள் சந்தேகமான
    நெற்குருவிக்கு இன்னொரு பெயர்
    வானம்பாடியென்பதை
    உறுதி செய்தான்]]

    அட

    ------------------------

    இறுதியாக
    புறாக்கறி லேசாக தித்திக்கும்
    என்ற தகவலையும்
    சொன்னா‌‌‌ன்]]

    ஓஹ்! ...

    ReplyDelete
  4. கடைசி வரிகளில் மாற்றத்தை எதிர்ப்பார்த்தேன்.

    நல்ல கவிதை.

    ReplyDelete
  5. நன்றி அசோக்
    நன்றி ராஜாராம்
    நன்றி ஜமால்
    நன்றி மண்குதிரை
    நன்றி மஞ்சூர் ராசா

    ReplyDelete
  6. கடைசி வரி கலங்கடித்து விட்டது...நானும் Non-Veg பிரியன் தானே...உள்ளம் உறுத்தத்தான் செய்கிறது...

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி சபரி பிரசாத் ராஜேந்திரன்.
    எனக்கும் லேசான உறுத்தல்தான்

    ReplyDelete
  8. சூப்பர் விமு....அப்படியே C2 வில் ஒரு காப்பியை பகிரவும்...

    ReplyDelete