Monday, September 21, 2009

"பூங்குழலி" - "பூ நடிகை" - உயிரோசை கவிதைகள்

இந்த வார உயிரோசை மின்னிதழில் எனது இரண்டு கவிதைகளை வாசிக்கலாம். கவிதைகளை வெளியிட்ட உயிரோசைக்கு நன்றி.


பூங்குழலி
--------

மின்சார ரயிலில்
பார்வையற்ற சிறுமியொருத்தி
பாட்டுப் பாடியபடியே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
தொடங்கினா‌‌‌ள்.
தேனருவியின் வேகம் குறைந்தது.
அம்மம்மா தம்பி என்று நம்பி…
அடுத்த பாடல் பைசா பெறவில்லை.
பூங்குழலி அசரவில்லை.
மூன்றாவது பாடல் பாடினாள்.
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…
ஜன்னல் பக்கம் சிலர்
திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம்போக…
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே…
வரிசையாகப் பாடினா‌‌‌ள்.
திடீரென நிறுத்தினா‌‌‌ள்.
இரண்டு நிமிடம் கனத்த மெளனம்.
பாட்டு தீர்ந்துவிட்டதா?
பதறிப்போனது எனக்கு .
சற்று நேரம் தயக்கம் அவளிடம்.
என்ன நினைத்தாளோ?
பூங்குழலி உற்சாகமாய்ப் பாடினாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
மீண்டும் ஆரம்பித்தாள்.
நல்லவேளை…யாரும் கவனிக்கவில்லை.


பூ நடிகை
---------
பூ நடிகைக்கும்,
நான்கெழுத்து தெலுங்கு நடிகருக்கும்
ரகசிய திருமணம் திருப்பதியிலென்று
செய்தி போட்டிருந்தார்கள்.
நானும் எனக்குத் தெரிந்த
பூவையெல்லாம் நினைவில் பொருத்திப் பார்த்தேன்.
மல்லிகை, சாமந்தி , குண்டுமல்லி
கனகாம்பரம், பிச்சி, செம்பருத்தி.
எதுவும் பொருந்தவில்லை.
அடுத்த நாள்
பூ நடிகை விவாகரத்து
எ‌ன்று செய்தி வந்தது.
பூவைக் கண்டுப்பிடித்துவிட்டேன்.
எந்த நடிகையென்றுதான்
தெரியவில்லை.
கடைசியில்
ஏதொவொரு நடிகையின் தலையில்
எனக்குப் பிடித்த பூவொன்றை சூட்டிவிட்டேன்.


-நன்றி
என்.விநாயக முருகன்

7 comments:

  1. ரெண்டுமே நல்லா இருக்கு விநாயகம்.குறு நகை ததும்பும் உங்களின் இந்த பார்வை-உங்களின் சிறப்பு!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு பாஸ்
    ரெண்டாவது :))))))))))))

    ReplyDelete
  3. உங்கள் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன் ... அருமையாக எழுதுகிறீர்கள் ... தொடருங்கள் ... இந்த ரெண்டு கவிதைகளுமே உங்களின் மற்ற கவிதைகளைப் போன்றே எனக்கு மிகப் பிடித்திருக்கின்றது ... வாழ்த்துகள்

    ReplyDelete
  4. பஸ்ட்டு ஒன்னு பெஸ்டுப்பா...

    ReplyDelete
  5. ரெண்டுமே நல்லாயிருக்கு விநாயக முருகன்!

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி நண்பர்களே
    நன்றி ராஜாராம்
    நன்றி பாலா
    நன்றி நந்தா
    நன்றி அசோக்
    நன்றி சுந்தர்

    ReplyDelete
  7. உங்கக் கவிதைகள் தெரியும்.உங்களைப்பத்தியும் தெரிய ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன் விநாயகம்,..விதி வலியது.ஹி..ஹி..

    ReplyDelete